Header Ads



சொகுசு காரில் கொள்ளையில் ஈடுபட்ட, வைத்தியர் உள்ளிட்ட 3 பேர் கைது

அதி சொகுசு கார் ஒன்றின் மூலம் வந்து வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்த சம்பவத்தோடு பிரபல வைத்தியர் ஒருவரும் அவரது மனைவி மற்றும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலகெடிஹேன – சபுகஸ்தென்ன பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை அதி சொகுசு காரில் வந்த குறித்த நபர்கள் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் நவீன தொழிநுட்பத்தினூடாக விசாரணைகளையும் சோதனையையும் ஆரம்பித்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட வெயன்கொட பொலிஸ் அதிகாரிகள்  தப்பித்துச் சென்ற சந்தேக நபர்களை அம்பலன்தொட பகுதியில் வைத்து கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் கொள்ளையடித்த தங்க மாலையையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக கும்பலில் ஒருவர் வைத்தியர் என்றும் அரச சேவையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்றும் கும்பலில் இருந்த பெண் வைத்தியரின் மனைவி என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வெயன்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த கொள்ளை சம்பவத்தோடு தொடர்பு பட்ட அங்கவீனமான முன்னாள் இராணுவ வீரர்; இதே போன்று பல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடையவர் என்றும் குறித்த மூவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த மூன்று சந்தேக நபர்களையும் நீதி மன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அத்தனகல்ல மஜிஸ்திரேட் குறித்த மூவரையும் எதிர் வரும் 29ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1 comment:

  1. யாரோ ஒருவர் சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிகின்றது முன்னர் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரும் கல்வியுடன் ஒழுக்கத்தையும் நன்னடத்தையும் போதித்தனர் ஆனால் இப்போது கல்வி மட்டும் தான் எல்லோரும் பெரும் படித்த கல்விமான்கள் ஆனால் இப்போ இங்கு இவர்களிடம் மனித நேயம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.