Header Ads



மைத்திரி தரப்பில் போட்டியிட 3 முஸ்லிம் கட்சிகள் பேச்சு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுமென ஐ.ம.சு.மு பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் நேற்று கூட்டாக தெரிவித்தனர்.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.ம.சு.மு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட மாட்டாதென்றும் அவர்கள் ஆணித்தரமாக கூறினர்.

இதுவரை சுமார் 20 இற்கும் அதிகமான கட்சிகள் ஐ.ம.சு.மு வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தம்முடன் பேச்சுநடத்தியிருப்பதாகவும், இதில் மூன்று முஸ்லிம் கட்சிகளும், நான்கு தமிழ் கட்சிகளும் அடங்குவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர  சுட்டிக்காட்டினார். கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கான காலம் அறிவிக்கப்படும் வரையில், மேலும் பல கட்சிகளை இணைத்துக் கொள்ள தொடர்ந்தும் பல கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இம்முறை 'கை' சின்னத்தில் போட்டியிடுவதற்கே பெரும்பாலான கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இது குறித்து சுதந்திரக் கட்சியின் தலைவர் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

நாம் தேர்தலுக்கு அஞ்சுவதாக எதிர்க்கட்சியினர் எம் மீது குற்றம் சுமத்தினர். எனினும் நாம் அமைதியாக இருந்தபடி அதற்கான அடித்தளத்தை கட்டம், கட்டமா பலப்படுத்தி வந்தோம்.

அந்த வகையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே நாம் தேர்தலுக்கு ஆயத்தமாக உள்ளதாகவும் அமைச்சர் திசாநாயக்க கூறினார். உள்ளுராட்சி மன்றத் ​தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் 99 சதவீதம் பூர்த்தியடையும் தறுவாயில் இருப்பதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டார்.

"தேசிய அரசாங்கத்தில் ஐ.தே.க வுடன் இணைந்து செயற்பட நாம் விரும்புகின்றோம். எனினும் அதற்காக நாம் எதிர்வரும் ஒவ்வொரு தேர்தலிலும் ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட வெண்டுமென்பது அர்த்தமல்ல.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு இடத்திலும் நாம் ஐ.தே.க வுடன் இணைந்து போட்டியிட மாட்டோம்." என்றும் அமைச்சர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

அத்துடன் சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாயின், எட்டு அம்சக் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் 42 பேரின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜர் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் தீர்மானம் மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 

No comments

Powered by Blogger.