Header Ads



மைத்திரியின் முடிவுக்கு 3 வருடம் நிறைவு


"மூன்று வருடங்களுக்கு முன்னர், இது போன்றவொரு நாளில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன், இன்று அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல விடயங்கள் நிறைவடைந்துள்ளன" என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய மின் கட்டமைப்புக்கு 100 மெகாவோட் சூரியசக்தி ஒன்றிணைக்கப்படுவதை நிறைவுகூரும் முகமாக, பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, பொது எதிரணி வேட்பாளராக, 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி, தான் எடுத்த முடிவையே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

"இன்று என் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்துக்கேற்ப, ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் என்பவற்றுடன்கூடிய ஊழல் அரசியலை நாட்டில் இல்லாமற்செய்து, சிறந்த பண்புகளுடன் கூடிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

"நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் சித்தியடைந்துள்ளதா, இல்லையா என்பது குறித்து, தற்போது யாராலும் உறுதிப்படுத்த முடியாது என்பதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைகையில், நாம் சித்தியடைந்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களையும் தரவுகளையும் முன்வைக்கக்கூடிய ஆற்றல் எமக்குக் காணப்படுகின்றது" என, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மூன்று வருடங்களுக்கு, முன்னர் நாடு எதிர்நோக்கியிருந்த பாரிய சவாலான விடயமாகக் காணப்பட்ட சர்வதேசத்தை வெற்றிகொள்ளும் சவாலை வெற்றிகொண்டது மட்டுமன்றி, உலகின் அனைத்து நாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள, தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் மேலும் பல இலக்குகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.