November 12, 2017

கல்முனை தமிழர்களின் பூர்வீக தாயகம், 3 ஆக பிரிக்க முடியாது - கோடீஸ்வரன் Mp

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது தோன்றி மறைகின்றபோதும் தற்காலத்தில் அது வலுப்பெற்று வருவதை நாம் அறிகின்றோம். இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மையை ஏற்படுத்தி இனமுறுகலை தோற்றுவிக்க வாய்ப்பளிப்பதையும் உணருகின்றோம்.இதற்கிடையே சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கான தனியான பிரதேச சபையை உருவாக்கித்தருமாறு பல காலமாக போராடுகின்றமையும் அப்போராட்டமானது அரசியல் தலையீடுகள் காரணமாக வெற்றி பெறாமல் உள்ளதையும் நாம் அறிவோம்.

இந்த நிலையில் கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டும் எனவும் சில அரசியல்வாதிகள் கூறி வருவதும் அதனை கல்முனை வாழ் தமிழ்மக்கள் பலமாக எதிர்த்து வருகின்றமையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இச்சந்தர்ப்பத்தில் கல்முனை மண்ணிண் நிலை தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நேர்காணலின் போது இவ்வாறு தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

கேள்வி-: கல்முனை தொடர்பான உங்களது கருத்து என்ன?

பதில்: -கல்முனை நகரம் தமிழர்களின் பூர்வீக தாயகம். நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசம். ஒரு காலகட்டத்தில் 92வீதம் தமிழர்களும் 5வீதம் சிங்களவர்களும், 3வீதம் முஸ்லிம்களும் வாழ்ந்த பிரதேசம். ஆனால் இன்று இப்பிரதேசத்தில் 82வீதமான தமிழர்களே வாழ்கின்றனர்.

கடந்த கால திட்டமிடப்பட்ட செயற்பாடே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக சுனாமியின் பின்னர் குடியேற்றப்பட்ட இஸ்லாமபாத் எனும் கிறவல் குளியாக இருந்த பிரதேசம் இதற்கு சிறந்த உதாரணம்.அது மாத்திரமன்றி கல்முனைக்குடி, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்களாக தற்போதைய பாலிகா பாடசாலையை கூறலாம். 1946ஆம் ஆண்டளவில் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையாக இருந்த இந்த பாடசாலை இன்று பாலிகாவாக மாற்றப்பட்டுள்ளது.இப்பாடசாலையில் பெருமளவிலான தமிழ் மாணவர்கள் கல்வி கற்றதுடன் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்தும் உள்ளனர். இதற்கு மேலாக ஐயனார், பிள்ளையார், அம்மன், விஷ்ணு என நான்கிற்கு மேற்பட்ட ஆலயங்களும் இப்பகுதியில் இருந்துள்ளதுடன் கல்முனைக்குடியில் இருந்த இந்து மயானமும் சான்று பகர்கின்றன.இவையெல்லாம் இன்று அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் வாழும் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டுள்ளது. யுத்தகாலத்தை பயன்படுத்தி தமிழர்களின் எல்லையும் மாற்றப்பட்டுள்ளது.

கேள்வி- கல்முனைக்கும் கல்முனைக்குடிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

பதில்- கல்முனை வேறு. கல்முனைகுடி வேறு. ஆனால் இன்று இரண்டும் ஒன்றென சொல்கின்றார்கள். கல்முனைக் குடியில் பிறந்தவர்களின் பிறப்பு சான்றிதழ், காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களில் இடத்தின் பெயர் கல்முனை குடி என்றே குறிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் பிறந்த அமைச்சர் ஒருவரின் பிறப்பு பதிவிலும் அவ்வாறுதான் இருக்கும் என நான் நினைக்கின்றேன். கல்முனையை கபளீகரம் செய்வதற்காகவே இவ்வாறு தங்களது பிறந்த இடத்தின் பெயரை மாற்ற எத்தனிக்கின்றனர் எனவும் கருதுகின்றேன். அத்தோடு கடந்த காலத்தில் கல்முனைக்குடி என பெயரிடப்பட்டு வீதி அருகில் நடப்பட்டிருந்த பெயர்ப்பலகை கல்முனை என மாற்றம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கேள்வி-: அப்படியானால் கல்முனையில் வாழுகின்ற முஸ்லிம் மக்களை பற்றி....?

பதில்-: கல்முனை குடியிருப்பாளர்கள் தமிழர்களே. கல்முனை மத்தியில் வியாபார நடவடிக்கையிலேயே முஸ்லிம்கள். ஈடுபடுகின்றனர். அதிலும், இந்தியாவில் இருந்து வருகை தந்த முஸ்லிம் மக்களே அதிகம். அவர்களும் வாடகைக்காக அமர்த்தப்பட்டவர்கள். மெதடிஸ்த திருச்சபையால் வழங்கப்பட்ட காணிகளிலேயே இவர்கள் வியாபார நிலையங்களை அமைத்தனர். ஆனால் காலப்போக்கில் தங்களது உடமையாக மாற்றி கொண்டனர்.அக்காணிகள் யாவும் அரசகாணிகள். 1956 தொடக்கம் 1975 வரையான காலப்பகுதியில் அரசகாணியாக பராமரிக்கப்பட்டு வந்தவை. அவ்வாறான அரசகாணிகள் மற்றும் அருகில் இருந்த நீர்ப்பாசன குளங்களை அபகரித்து நிரப்பியே இவர்கள் வியாபார நிலையங்களை அமைத்துக் கொண்டனர். ஆனாலும் இங்கு அவர்களது வியாபார நிலையங்கள் மட்டுமே உள்ளது. மக்கள் இல்லை.

கேள்வி- ஆனாலும் இன்று அவர்கள் கல்முனை நகரை கேட்பதாக கூறப்படுகின்றதே....?

பதில்-: வியாபார நோக்கத்திற்காக வந்தவர்கள் நகரத்தை கேட்பது எந்த வகையில் நியாயம் என நீங்கள் நினைக்கின்றீர்கள். இதுபோன்ற விடயங்கள் நாட்டின் பல சிங்கள பகுதிகளில் ஏற்பட்டது. ஆனாலும் சிங்கள மக்கள் யாராவது கொடுத்தார்களா? அப்படி இருக்கும்போது கல்முனை நகரை நாம் எப்படி விட்டுக்கொடுப்பது.

கேள்வி-: சரி. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது. அதற்கு நாங்கள் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாது. மாறாக அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றோம். ஏனெனில் சனத்தொகையாலும், அறிவாற்றல் மிகுந்த மக்கள் வாழும் பிரதேசமாக உள்ளமையினாலும் அவர்களுக்கென பிரதேச சபை உருவாக்குவது சிறந்தது. அதன் மூலம் அவர்களது பிரதேசம் வளம் பெறும்.

கேள்வி-: சாய்ந்தமருது பிரதேச சபை உருவாகுவதால் அந்த மக்கள் வளம் பெறுவதாக நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படி பிரிவதனால் கல்முனை முஸ்லிம் மக்களின் பலம் குறைவடைவதாக கூறுகின்றார்களே....?

பதில்: - இது அப்பட்டமான பொய். சில அரசியல்வாதிகள் தங்களது இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்படும் மாயை. சாய்ந்தமருது மண்ணில் உள்ள கல்வி அறிவு மிகுந்தவர்களின் திறமையினால் அந்த மண் வளம் பெற்று விடும். கல்முனைக்குடிக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் வித்தியாசம் தோன்றும். இவையனைத்தும் இடம்பெறாமலிருப்பதற்கே இந்த நாடகம். அதேவேளை கல்முனை மாநகர சபையில் தற்போது 68வீதம் முஸ்லிம்களும் 32வீதம் தமிழர்களும் உள்ளனர். சாய்ந்தமருதை பிரிப்பதனால் 60வீதமும் 40வீதமுமாக மாறும். இதனால் கல்முனை மாநகர சபைக்குட்ட முஸ்லிம் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

கேள்வி-: கல்முனையை நான்காக பிரிப்போம் என ஒரு அரசியல்வாதி குறிப்பிட்டார். அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: - இது தமிழர்களை கொத்தடிமையாக்கும் வேலைத்திட்டம். கல்முனையில் ஒற்றுமையாக வாழும் தமிழ் மக்களை பிரித்தாளும் தந்திரோபாயம். கல்முனையை நான்காக பிரித்தால் எந்த பிரிவிலும் தமிழர்கள் பெரும்பான்மை பெற முடியாததுடன் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும். இதன் மூலம் தமிழர்களின் நிலங்களை இலகுவாக அபகரிக்கலாம். தங்களது கட்டுப்பாட்டில் தமிழர்களை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் தங்களது அரசியலை பலப்படுத்தலாம் என சிலர் கனவு காண்கின்றனர்.மேலும் இதன் மூலம் இனமுறுகல் வலுவடையும். அதனை பயன்படுத்தி தமது அரசியலை இலகுவாக முன்னெடுக்க முடியும் எனவும் நினைக்கின்றனர்.

கேள்வி-: இது ஒரு புறம் இருக்க, கல்முனை தமிழ் மக்கள் எதனை விரும்புகின்றனர்?

பதில்: - இரண்டு கோரிக்கையினை அவர்கள் முன்வைத்துள்ளனர். முதலாவது கல்முனை வடக்கு நகர சபை ஒன்றினை உருவாக்குதல். அதாவது கல்முனை பிரதேசத்தின் தெற்கேயுள்ள தரவைப்பிள்ளையார் ஆலயத்தையும், வடக்கே பெரியநீலாவணை கிராமத்தையும் மேற்கே சேனைக்குடியிருப்பையும் மையமாக வைத்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதான நகர சபை ஒன்றினை புதிதாக உருவாக்குவதுடன் கல்முனைக்குடியையும் சாய்ந்தமருதையும் இணைத்து மற்றுமொரு நகரசபையை உருவாக்குதே அவர்களது விருப்பம். இரண்டாவது தேர்வாக, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களை எத்தனையாக பிரித்தாலும் பரவாயில்லை. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மையப்படுத்திய தமிழர்கள் வாழும் பிரதேசங்களை நிலத்தொடர்புடன் இணைத்து நகர சபையை உருவாக்க வேண்டும். இதுவே நல்லாட்சி தமிழர்களுக்கு செய்யும் ஊசிதமான நடவடிக்கையாகும். இதன் மூலம் நாட்டிற்கு நன்மை பெறக்கூடிய உச்ச அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கும் வாய்ப்பும் கல்முனை தமிழ் மக்களுக்கு ஏற்படும்.

கேள்வி-: இந்நிலையில் தமிழ் மக்களுடனான உறவு எவ்வாறு அமையும் என கருதுகின்றீர்கள்?

பதில்-: இங்குள்ள சில அரசியல்வாதிகள் மாற்று இனத்திற்கு மட்டுமல்ல தங்களது இனத்திற்குள்ளும் எதனையும் பங்கிடக்கூடாது என நினைக்கின்றார்கள். இவர்கள்தான் இன்றுவரை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடாது தடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதால் முஸ்லிம் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இணைந்து தடுத்து வருகின்றனர். எப்படியானாலும், தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கக்கூடாது என்பதையே இவர்கள் விரும்புகின்றனர். அத்தோடு கல்முனையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புக்களால் அண்மையில் கொடுக்கப்பட்டுள்ள புதிதாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்தல் தொடர்பான திட்ட முன் மொழிவுகளில் கூட திரிபுபடுத்தப்பட்ட இனவாதத்தை ஒட்டுமொத்தமாக கக்கிய விடயங்களே உள்வாங்கப்பட்டுள்ளன.

கேள்வி: இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் யாரும் உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

பதில்-: ஆம். அமைச்சர் றிசாட் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் தொடர்பு கொண்டு சாய்ந்தமருது பிரதேச சபையை பிரிப்பது தொடர்பில் ஆட்சேபனை உள்ளதா? ஏன வினவினர். இவ்விடயம் தொடர்பில் தமிழர்களுக்கோ எனக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என பாராளுமன்றத்திலும் கூறியுள்ளதாக தெரிவித்தேன்.

கேள்வி: - இது தொடர்பில் யாராவது பேசுவதற்கு அழைத்தால் நீங்கள் செல்ல தயாரா?

பதில்-: நிச்சயமாக செல்வேன். பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்வேன். ஆனாலும் தமிழர்களுக்கு எதிரான பாதிப்பான நியாயமற்ற எந்த விடயத்திற்கும் துணைபோக மாட்டேன். அதற்கெதிராக போராடுவேன் என பகிரங்கமாக தெரிவிக்கின்றேன். அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் நான் அல்ல என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

வி. சுகிர்தகுமார் 

11 கருத்துரைகள்:

Well said கோடீஸ்வரன் MP
கல்முனை case closed.

Who is this useless kodeeswaran?

He is a communal minded guy.

பிரதேசவாதம் பேசும் முஸ்லிம்களே... உங்கள் பிரதேசவாதத்தால் பலனடைய போவது யாரென்று நினைத்துப்பாருங்கள். தமிழர்களிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்திட நினைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது

ஐயா கேடீஸ்வரனே!
கல்முனை வரலாறு மட்டும்தான் உங்களுக்கு தெரியுமாக்கும். எங்களுக்கு
@ நல்லூர் வரலாறு
@ சாவகச்சேரி வரலாறு
@ ஊர்காவற்துறை வரலாறு
@ கோண்டாவில் வரலாறு
@ மல்லாகம் வரலாறு.
மற்றும் ஒல்லாந்து காடையர்களுடன் சேர்ந்து வடக்கில் கபளிகரம் செய்த காணிகளின் பூர்வீகம் தொடர்பான அத்தனை தகவல்களும் மட்டுமல்ல உங்களது அம்பாரை மாவட்ட திருக்கோவில் வரலாறு,காரைதீவு பிரதான வீதிக்குமேற்கேயுள்ள காணிகள் வரலாறு என நீண்ட பட்டியல் எங்களிடமும் உள்ளது.

ஒரு தமிழ் கேடியின் உளறல்களையெல்லாம் யாழ் முஸ்லீம் இணையம் பிரசுரித்து, நேரத்தை வீணாக்குது.

Lafir அண்ணே,
ஒல்லாந்தர் இலங்கை மக்களுக்கு இவ்வளவு நன்மைகளும் செய்தார்களா?, சொல்லவேயில்லை.

ஒண்டுக்கும் யோசியாதைங்கோ...உங்கட பட்டியலை கொண்டுவாங்கோ, ஒல்லாந்து தூதரகத்துக்கு எதிராக ஒரு கேஸ் போடுவம்.

தம்பி அன்டனி!
உமக்கு வேண்டுமாயின் ஒல்லாந்தர் போத்துக்கேயர் நோர்வே என்று யாருடைய காலிலும் விழும்.
காட்டிக்கொடுக்கும் எட்டப்பனும் கூட்டிக்கொடுக்கும் கேபிகளும் உங்களிடம் நிறையவே இருக்கிறார்கள்தானே. நீங்களே பயன்படுத்திக்கொள்ளுங்கள.

Mr. Antonyraj, why are you keeping quiet? Aren't you able to respond to this?

வரலாற்று ஜானி கோடீஸ்வரன்mp

இனி கல்முனையில் இந்துக்களின் அரஜாகம் முடிவுரும் காலம்,,,

தமிழரும் முஸ்லிம்களும் தாமாகவே உட்கார்ந்து பேசுகிறார்களில்லை.இதுவரை இருதரப்பாரும் இறுதியில் அப்பத்தைப்பகிர சிங்கத்திடம் ஓடும் முயல்கள்போலவே இருக்கிறார்கள். யாழ் முஸ்லிம் தோழமைக்கு நன்றிகள். தொடர்ந்து கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் தலைவர்களது நேர்காணல்களை வெளியிடுங்கள். இப்படியாவது தமிழ் முஸ்லிம் மக்களிடை கலந்துரையாடலும் பிரச்சினை பற்றிய தெளிவும் ஏற்படட்டுக்கும்.

Post a Comment