Header Ads



சாய்ந்தமருதில் டிசம்பர் 12 வரை, போராட்டங்களுக்கு தடை

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துமாறு கோரி அப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி வரை கல்முனை நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

சாய்ந்தமருதில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டும் எதிர்காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கும் பொருட்டும் அங்கு இடம்பெறும் போராட்டங்களுக்கு தடையுத்தரவு கோரி கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று -29-  கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி பயஸ் ரஸ்ஸாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் மேற்படி தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். 

இதன் பிரகாரம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், வீதி மறியல் மற்றும் சுற்றிவளைப்பு போராட்டங்கள் எதனையும் நடத்த முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் வீதி மறியல் போராட்டம் நடத்தி பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி பயஸ் ரஸ்ஸாக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இது விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா ஹாஜியார் உள்ளிட்ட ஆறு பேரும் தலா பத்தாயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை (24) சாய்ந்தமருதில் இடம்பெற்ற மாட்டு வண்டி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் போதிய சாட்சியங்களுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்முனை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். 

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் சட்டவிரோதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாட்டு வண்டி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கல்முனைக்குடி பிரஜைகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தினர் எனவும், இதில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் சம்மந்தப்பட்டிருந்தனர் எனவும் கல்முனைக்குடி முஹைதீன் ஜூம் ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸினால் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மேற்படி மூன்று விடயங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர்-12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துமாறு கோரி அப்பகுதியில் ஒக்டோபர் 27ஆம் திகதி தொடக்கம் மக்கள் எழுச்சி பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம், மனித சங்கிலிப் போராட்டம், பொதுக் கூட்டங்கள், கையெழுத்து வேட்டை, மோட்டார் சைக்கிள் பவனி, மாட்டு வண்டிே ஊர்வலம் என பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 8:46

    ReplyDelete
  2. kudiyirupanda aaddaththa adakkanum.

    Read the order carefully,find the hole and go through it.

    ReplyDelete

Powered by Blogger.