November 15, 2017

10 வயது சிறுமி தற்கொலை, கண்ணீரை சிந்தவைக்கும் காரணம்

பலாங்­கொடை  - கிரி­மெ­டி­தன்னை ரந்­தொல என்ற பிரதேசத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் சிறுமி கடந்த 13ஆம் திகதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட சிறுமி 10 வயதான பாதிமா ரிஷ்னாவாகும்.

உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை நேற்று நடந்த நிலையில் சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

“ உயிரிழந்துள்ளது எனது மூத்த மகளாவார், அவர் தரம் நான்கில் கல்வி பயின்று வருகிறார். சம்பவ தினத்தன்று எனது மகள் பாடசாலைக்கு செல்லவில்லை ஏன்? பாடசாலைக்கு செல்ல மறுக்கிறாய் என வினாவினேன், அதற்கு “எனக்கு போக ஏலாது நாளைக்கு போகிறேன்” என கூறினாள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் மகளின் புத்தகப் பையிலிருந்து தொலைப்பேசி ஒன்றை கண்டேன். அதை மகளையும் அழைத்துக் கொண்டு பாடசாலைக்குச் சென்று ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டேன்.

மகளிடம் விசாரித்த போது “ தொலைப்பேசியை நான் திருட வில்லை யாரோ என் புத்தகப் பையில் போட்டிருக்கிறார்கள்” என பதிலளித்தார் ஆனாலும் ஆசிரியை அதை நம்பவில்லை.

மகள் பாடசாலைக்கு செல்லும் போதெல்லாம் “நீ தொலைப்பேசியை திருடினாயல்லவா” என பல முறை கேட்டு ஆசிரியர் அவமானப்படுத்தியுள்ளார். அதை கேட்டு ஏனைய மாணவர்களும் பாதிமா “ஃபோன் திருடி” என கூச்சலிட்டு அவமானப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனால் பல நாட்கள் எனது மகள் பாடசாலைக்கு செல்ல மறுத்து உள்ளாள். அதற்கு நான் புலமைப் பரிசில் பரீட்சை முடியும் வரை எப்படியாவது பொறுத்துக் கொண்டு பாடசாலைக்கு செல் என கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பேன், சில சந்தர்ப்பங்களில் தண்டித்தும் உள்ளேன்.

நான் தேயிலை பறித்து தான் வாழ்க்கை நடத்தி வருகின்றேன், எனது கணவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்களை விட்டு சென்று விட்டார்.

சம்பவ தினத்தன்று தேயிலை பறிக்கும் வேலை இருக்கின்றதா? என பார்ப்பதற்காக அருகில் உள்ள வீடொன்றிற்கு சென்றிருந்தேன்.

ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளை வீட்டில் காணவில்லை, மகளை காணாததால் வீட்டைச் சுற்றி தேடிப் பார்த்தேன், அப்போது எனது மகள் கழுத்தில் தூக்கிட்டு இருந்ததை கண்டேன்.

பிறகு அயலவர்களின் உதவியோடு பொலிஸாருக்கு தெரிவித்தோம்.

பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் கூட மனதை புண்படுத்த வேண்டாம், பிள்ளைகள் ஏதாவது பிழை செய்தால் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் கூறி தீர்வு காணுங்கள், அதை விட்டு விட்டு பிள்ளைகளின் மனதை சிதைக்காதீர்கள்.  எனது மகளை படிக்க வைத்த நல்ல நிலைக்கு கொண்டு வர நான் நிறைய முயற்சி செய்தேன் இறுதியில் இப்படி ஒரு துர் சம்பவம் எனக்கும் என் பிள்ளைக்கும் நடக்கும் என நான் நினைக்க வில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தாயின் வாக்கு மூலம் இவ்வாறு இருப்பினும் பொலிஸார் சிறுமியின் தற்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை பல கோணங்களிலும் நடாத்தி வருகின்றனர்.

2 கருத்துரைகள்:

இப்பிள்ளையின் மரணத்தில் குடும்பம், பாடசாலை, TV போன்ற ஊடகங்கள் நேரடித் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
பிள்ளை வளர்ப்பில் குடும்பமும் அறிவு மற்றும் விழுமியங்களை ஏற்படுத்துவதில் பாடசாலையும் கலாசார பாரம்பரியங்களை பேணி அடுத்த சந்ததிக்கு கையளிப்பதில் ஊடகங்களும் தமது பங்களிப்பை வழங்குவதில் தவறியுள்ளதையே இம்மரணம் சுட்டிநிற்கின்றது.

எவ்வளவு நடந்தாலும் எவ்வளவு சொன்னாலும் சில ஆசிரியர்களுக்கு முக்கியமாக ஆசிரியை களுக்கு இது விளங்குவது இல்லை. எப்போதும் தப்பான கண்ணோடட்டில் தான் அவர்கள் பார்கின்றனர். பிள்ளைகள் தவறு செய்வது இயற்கை. இன்னும் சில பிள்ளைகள் தவறு செய்யாமல் தண்டனை பெறுகின்றனர்.
உண்மையில் எனது .......இது மாதிரி வேறு ஓன்று (Phone அல்ல ) நடந்து அந்த வகுப்பு ஆசிரியர் நடந்தை விளங்கி உரிய நடவடிக்கை எடுத்தால் நான் நிம்மதி மூச்சு விட்டேன். இது போல் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் சூழ்நிலைகளை விளங்கி அடுத்த சக மாணவர்கள் செய்யும் குறும்புகளை விளங்கி எல்லா மாணவர்களையும் சமமாக பார்த்தல் எங்கள் குழந்தைகள் மனம் பாதிக்காமல் நிம்மதியாக அவர்களின் கல்வியை தொடர்வார்கள்.

Post a Comment