Header Ads



தனது இறப்புக்குப் பிறகும், மகளுக்கு வாழ்த்துகூறும் தந்தை (1 கோடி Like பெற்றது)


அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மரணத்துக்குப் பிறகும், தன் மகளுக்கு ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மலர்ச்செண்டு மற்றும் வாழ்த்து செய்தியை அனுப்பி வருகிறார்.

மரணத்துக்குப் பிறகு எப்படி இது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக்கல், இவர் தனது மகளான பெய்லி செல்லருக்கு 21 வயது ஆகும் வரை அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மலர்ச்செண்டு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஆனால் பெய்லிக்கு 16 வயது இருக்கும்போது மைக்கல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தனது மகளுக்குத் தான் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் ஆகிவிடுமா? என்று நினைத்த மைக்கல் தனது இறப்புக்குப் பிறகு தனது மகளுக்கு மலர்ச்செண்டுகள் மற்றும் தனது வாழ்த்து செய்தி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு மரணித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று தனது 21-வது பிறந்த நாளைக் கொண்டாடிய பெய்லி தனது தந்தை தனக்கு அனுப்பியுள்ள கடைசி மலர்ச்செண்டு, வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை இட்டிருந்தார். அப்பதிவு சமூக வலைதளங்களில் நேற்றுமுதல் வைரலாக பரவியது.

அப்பதிவில் பெய்லி, “என்னுடைய தந்தை எனக்கு 16 வயதாக இருக்கும்போது புற்று நோயால் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளன்று மலர்ச்செண்டும், அவரது வாழ்த்தும் கிடைக்கும் வகையில் பணம் செலுத்திவிட்டு மரணித்துவிட்டார். இது என்னுடைய 21-வது பிறந்தநாள் மலர்.. கடைசியும் கூட. உங்களது இழப்பை உணர்கிறேன் அப்பா” என்று பதிவிட்டுள்ளார்.

பெய்லி ட்விட்டர் பதிவு

மைக்கலின் கடைசி வாழ்த்து செய்தியில், “பெய்லி இனி நாம் மீண்டும் சந்திக்கும்வரை இதுதான் நான் உனக்கு எழுதும் கடைசி அன்புக் கடிதம்.

இது உன்னுடைய 21வது பிறந்த நாள். நாம் எப்போது உன்னிடம் கேட்டு கொள்வது உனது அம்மாவுக்கு எப்போதும் மரியாதை கொடு, உனக்கு உண்மையாக நடந்து கொள் என்பதுதான். வாழ்கையை முழுமையாக வாழ்ந்து மகிழ்ச்சியாக இரு... நான் உன்னோடுதான் இருக்கிறேன். உன்னைச் சுற்றி பார். அங்கெல்லாம் நான் இருப்பேன். பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு மகளே” என்று கூறப்பட்டிருந்தது.

பெய்யிலியின் இப்பதிவுக்கு சுமார் 1 கோடிக்கு அதிகமானோர் லைக் இட்டிருந்தனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ரீட்வீட் செய்திருந்தனர்.

No comments

Powered by Blogger.