Header Ads



மகிழ்ச்சிகரமான வாய்ப்புக்கள், என்னால் இழக்கப்பட்டது - NM அமீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரிருமான என்.எம்.அமீன் அவர்களுடனான நேர்காணல்.

கேள்வி: முதலில் உங்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்குங்கள்?

பதில்: நான் அரநாயக தலகஸ்பிடிய என்ற கிராமத்தில் பிறந்தவன். தலகஸ்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஹெம்மாத்தகம அல் அஸ்ஹர் கல்லூரியிலும் மாவனல்லைசாஹிரா கல்லூரியிலும் பயின்று களனி பல்கலைக்கழகத்தில் பட்டத்தை முடித்திருக்கிறேன்.

என்னுடைய முதலாவது தொழிலாக தினகரனில் பயிற்சி பத்திரிகையாளராக இணைந்து அங்கு முப்பத்து மூன்று வருடங்கள் பணியாற்றி அதன் முகாமைத்துவஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றேன். அக்கால கட்டத்திலே பாராளுமன்றத்தின் தினகரனின் செய்தியாளராக இருபத்து மூன்று வருடங்களாகத் தொடர்ச்சியாக பணிபுரிந்திருக்கின்றேன் அதேபோன்றுபாராளுமன்றத்தினதும் ஏனைய முக்கிய அரச நிறுவனங்களதும் சிங்கள தமிழ் ஆங்கில உரை பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்திருக்கின்றேன்.

கேள்வி: உங்களது ஊடகத்துறைக்கான பிரவேசம் எவ்வாறு கிடைத்து?

பதில்: நான் ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தத் துறையில் ஒரு ஆர்வம் இருந்தது முதற்கண் நான் அதிகமாக வாசிக்கின்ற பழக்கத்தை கொண்டிருந்தேன். குறிப்பாகப்பத்திரிகைகள் வாசிப்பது எனது பொழுதுபோக்காக இருந்தது.

எனது வீட்டுக்கு முன்னால் வில்சன் என்கின்ற ஒரு சிங்கள சகோதரர் முடி திருத்தும் நிலையமொன்றை நடாத்தினார். அவர் அக்காலத்தில் வெளிவருகின்ற மூன்றுசிங்கள பத்திரிகைகளை வாங்குவார். நான் பாடசாலை விட்டு வந்ததும் மதிய சாப்பாட்டின் பின்னர் ஓடுவது அங்கேதான்.

சில வேளைகளில் என்னுடைய தாயார் வேலைக்கு அழைத்தாலும் கூட நான் அதிகமான நேரம் சலூனில்தான் இருப்பேன். உண்மையில் அங்குள்ள பத்திரிகையின்ஆரம்ப பக்கம் முதல் கடைசி பக்கம்வரை வாசித்து முடிப்பதுதான் என்னுடைய பழக்கம்.

இந்த அளவு என்னுடைய சிங்கள அறிவுக்கு காரணமாக இருக்கும் அந்தச் சிங்கள சகோதரரை இன்றும் நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

ஏனெனில் வாசிப்பதற்கு என்னைத் தூண்டியது அது எனக்குக் கூடுதலான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை உருவக்கிக்கித்தந்திருக்கின்றது.

அதன்பிறகு நான் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு எனக்கு ஒரு ஆசை இருந்தது பத்திரிகையாளனாக வரவேண்டுமென்று.

அப்போது நான் பரீட்சையை முடித்துவிட்டு பெறுபேறுகள் வருமுன்பு தினகரனில் பயிற்சி பத்த்ரிகையாளராக இணையும் வாய்ப்பு கிடைத்தது.

அக்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சி பதவிக்கு வந்த பின்னர் புதிதாக தொழில்வாய்ப்புகள் வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகளுடைய துணை இல்லாமல்லேக் ஹௌஸ் நிறுவனத்துக்கு போக முடியாது.

என்னுடைய மாவனல்லையில் இருந்த சியார் பிலிகம்மன அவர்களுடைய கடிதத்தோடு முன்னாள் பிரதமர் டி,பி.விஜயதுங்க ஊடகத்துறை அமைச்சராக இருந்தார். அவர் எனக்கு இந்தப் பயிற்சி பத்திரிகையாளராக இணையும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.

அதன் பிறகு முன்னாள் சபாநாயகர் பாக்கிர் மார்க்கார் இந்தத் துறையிலே நிரந்தரமாகத் தொழில் புரிவதற்கான அரசியல் ரீதியான அழுத்தத்தை அப்போதுகொடுத்ததன் காரணமாக1977 டிசம்பர் மாதம் நான் தினகரனில் பயிற்சி பத்திரிகையாளராக நான் இணைந்தேன்.

கேள்வி: ஊடகத்துறைக்குள் பிரவேசித்ததன் பின்னர் நீங்கள் முகங்கொடுத்த சவால்கள் என்ன?

பதில்: உண்மையில் ஊடகத்துறைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு ஒரு ஆசை இருக்கின்றது தங்களுடைய பெயர் வரவேண்டும். எல்லோரும் தங்களைப்பற்றி பேசவேண்டும்என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. சிலவேளைகளில் நாங்கள் இந்தத் துறையிலே இல்லாமல் இருந்திருந்தால் நான் ஒரு பட்டதாரி என்ற வகையில் வேறு ஒரு தொழில் துறையைத் தெரிவுசெய்திருந்தால் உயர்ந்த சம்பள நிலையிலே ஓய்வூதியத்தோடு இருந்திருக்கலாம்.

ஊடகம் என்பது பல சவால்களுக்கு மத்தியில் பயணிக்கும் ஒன்றாக இருக்கிறது.அதனால் ஏன் இந்த துறையை தெரிவு செய்தோம் என்ற எண்ணம் வருவதுமுண்டு.

அதாவது பெருமளவான சுபீட்சமான தொழில் ஒன்றாக இல்லை இலங்கையிலே ஊடகவியலாளர்களுடைய சம்பளம் மிகக்குறைவு, அவ்வாறான கட்டங்களில்இதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு ஆரம்பத்திலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.

உதாரணமாகப் பத்திரிகையிலே இணைந்தால் எங்களை இரண்டாக வகுப்பார்கள். ஒன்று செய்தியாளர்கள் மற்றது உதவி ஆசிரியர்கள். அப்பொழுது உதவிஆசியர்களுக்கு செய்தியினுடைய நுணுக்கங்கள் தெரியாமலிருக்கும் செய்தியாளர்களுக்கு ஒரு பத்திரிகையின் பக்கத்தை சப் எடிட் செய்கின்ற பணி தெரியாமல்இருக்கும்.

அந்தக் காலகட்டத்திலே சிவகுருநாதன் தினகரனின் ஆசிரியராக இருந்தார். ஆரம்பத்திலே என்னை அவர் அடையாளம் கண்டார் நான் லேக் ஹௌஸில்இணைந்து இரண்டு மாதத்தில் பாராளுமன்றத்துக்கு செய்தி சேகரிக்க அனுப்பினார்.

அதற்கு என்னுடைய மொழி அறிவு ஒரு பிரதான காரணமாக அமைந்திருந்தது. ஊடங்களில் மூத்த அறிவுடைய அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களைத்தான்பாராளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் ஏனெனில் அந்த இடம் மிகவும் சர்ச்சைக்குரிய இடமாகும். ஆனால் நான் ஆகஸ்ட்டிலே இணைந்தேன் டிசம்பர் 12ம் திகதிஎன்னை அவர் பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்
பழைய பாராளுமன்றத்திலிருந்து என்னுடைய பணி ஆரம்பமானது.

கேள்வி: ஊடகத்துறைக்குள் பிரவேசிக்கும் பலருக்கும் உங்களைப்போல உச்சம் தொட முடிவதில்லை. அந்த வகையில் உங்களது இன்றைய வளர்ச்சிக்கும்வெற்றிக்கும் காரணமாக எதுவெல்லாம் அமைந்தது?

பதில்: உண்மையில் என்னுடைய விடா முயற்சி. பல மொழி அறிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அத்துடன் மேலதிக பயிற்சிகளை பெறுவதாகும். என்னுடையபட்டப்படிப்போடு ஊடகத்துறையிலே சர்வதேச மட்டத்திலே இருக்கக்கூடிய பல டிப்லோமாக்களை செய்ய முடிந்தது.

அத்தோடு களனி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தைப் படித்து முடித்திருக்கின்றேன். என்றாலும் துரதிஷ்ட வசமாக எனக்கு இருக்கின்ற வேலைப்பளுக்களின் மத்தியில் என்னுடைய பக்கத்தில் இருக்கின்ற தவறால் அதனுடைய ஆய்வறிக்கையைக் கொடுக்காததால் எனக்கான பரீட்சை முடிவுகளைத் தராமல் இருக்கிறார்கள்.

அதனோடு பண்டாரநாயக சர்வதேச கற்கை விவகாரங்களுக்கான சர்வதேச பட்டப்பின் படிப்பினை நான் முடித்திருக்கின்றேன். இவ்வாறு எங்களுடையஆற்றல்களை வளர்த்துக்கொள்கின்ற பொழுது எங்களை எந்த ஒரு இடத்திலிருந்தும் நிராகரிக்க முடியாது.

ஒரு காலகட்டத்தில் அரசியல் காரனக்ளுக்காக என்னைத் தினகரனில் இருக்கும்பொழுது பலி வாங்கினார்கள்.  என்னை தினமினவுக்கு இடமாற்றினார்கள். நான் நினைக்கின்றேன் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம். இவ்வளவு காலமாக தமிழ் வாசகர்களோடு இருந்த எனக்கு, ஐந்துவருட காலமாக தினமினவிலே பணிபுரிகின்ற வாய்ப்பு கிடைத்தது.

முழு இலங்கைக்கும் என்.எம் அமீன் என்றால் யாரென்று தெரிகின்ற வாய்ப்பை எனக்குத் தந்தார்கள். உண்மையில் அதனை நான் அரசியல் பழிவாங்கலாககருதவில்லை பின்னர் என்னுடைய வளர்ச்சிக்கு அது மிகவும் உதவியது.

நான் ஏன் இதனைச் சொல்கின்றேன் என்றால் இவ்வாறு எல்லா விடையங்களையும் படித்துக்கொண்டேன்.  உதரணாமாக எனக்கு சப் எடிட்டராக இருந்ததால் பத்திரிகையில் பக்கங்களை வடிவமைக்கக் கற்றுக்கொண்டேன்.  இக்கால கட்டத்தில் எனக்கு சிவகுருநாதன் இளைஞர் வட்டம் என்ற பகுதியை பொறுப்பாகத் தந்தார்.

எனக்கு இளைஞர் வட்டத்தை எப்படி பக்கம் போடுவது என்பதே தெரியாது.சில சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரியாதவனுக்கு ஏன் இதனைக் கொடுத்தார்கள் என்று கடிந்துகொண்டதுமுண்டு.

என்றாலும் குறுகிய காலத்துக்குள் நான் எல்லாவற்றையும் பழகி இருக்கின்றேன். அவ்வாறு பழகியதன் காரணமாக எனக்கு ஒரு பத்திரிகையினுடைய எல்லா விடையங்களையும் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் எந்த தொழிலுக்கு சென்றாலும் அந்த தொழிலில் உள்ள எல்லா நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். நீந்தத்தெரிந்தால் உங்களை எந்த கடலில்போட்டாலும் நீந்தி வருவீர்கள் இல்லையேல் கஷ்டம்தான்.

என்னை தினமினவுக்கு இடமாற்றியதற்குபின்னர் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு தலைப்புச் செய்திகளை எழுதுகின்ற ஒருவனாக மாறினேன். எனவே எந்ததுறையாக இருந்தாலும் எமக்கான ஆற்றல்களை வளர்த்துக்கொண்டால் மாத்திரமே எமக்கான இடத்தை தர மறுக்க முடியாது.

கேள்வி: ஒன்றை பெற வேண்டுமாக இருந்தால் ஒன்றை இழக்க நேரிடும் அந்த வகையில் உங்களது எழுத்து துறைக்காக நீங்கள் இழந்தவற்றைக் கூற முடியுமா?

பதில்: நிம்மதியை இழந்ததுண்டு. ஏனைய ஒரு தொழில் செய்தால் ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போகலாம் ஆனால் இங்கு அப்படியல்ல.

சில வேளைகளில் நான் தினகரனில் பணி புரிகின்ற பொழுது கொழும்பிலே நான் தன்கியிருந்ததுண்டு. என்னுடைய அறைக்கு வேலை முடித்து சென்று ஓய்வுஎடுக்க முற்படும்போது சிவகுருனாதன் மீண்டும் தொலைபேசி அழைப்பு தருவார்.
இன்று இரவு நேரம் வேலை செய்கின்ற சப் எடிட்டர் வரவில்லையப்பா வந்துவிடு என்பார்கள். அப்படியான சந்தர்ப்பங்களால் ஓய்வை இழந்திருக்கின்றோம்.

நான் வேறொரு தொழிலை செய்திருந்தால் என்னால் உயர்ந்த மட்டத்துக்கு வந்திருக்க முடியும் என்றாலும் நான் பிரபல்யம் பெற்றிருக்க மாட்டேன்.

உலகத்திலே கிட்டத்தட்ட இருபத்து ஐந்து நாடுகளுக்குச் சென்றிருக்கின்றேன். இதில் நான் இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரமே என்னுடைய சொந்தபணத்தைச் செலவு செய்திருக்கின்றேன். ஒன்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மற்றொன்று என்னுடைய சகோதரியின் சத்திர சிகிச்சைக்காக இந்தியா சென்றதாகும். மற்றவை எல்லாமே என்னை அழைத்து பயணச்சீட்டு அனுப்பி சென்றவைதான்.

உலகத்திலுள்ள எத்தனையோ நாடுகளின் அரச தலைவர்களிடம் ஒன்றாக நின்று பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி மற்றும்பிரதமருடைய செய்திகளைத் திரட்டி அனுப்புகின்ற வாய்ப்பு என்னுடைய பத்திரிகைக்கு மாத்திரமின்றி பி பி சி சிங்கள சேவைக்கும் 2001ம் ஆண்டில் ஆண்டு பிரதமர்ரணில் விக்கிரம சிங்கவுடன் ஐ.நா சென்றபோது கிடைத்தது.

ஆகவே நான் நினைக்கின்றேன் சில இழப்புகள் இருக்கின்றன, அந்த இழப்புகளை ஈடு செய்யக்கூடிய அளவுக்கு இத்துறையில் பெற்றிருக்கின்ற பிரபல்யம், மற்றவர்களுக்கு உதவக்கூடிய வாய்ப்பு அவையெல்லாம் குறித்து நான் பெரும் மகிழ்ச்சியடைவதுண்டு.

நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களை உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த நாட்டில் நிறையே பேருக்கு வழிகாட்ட வாய்ப்பு கிடைத்தது. அதனைநான் ஒரு பெரும் பேராகக் கருதுகின்றேன்.

கேள்வி: புதிய தலைமுறையினரின் ஊடக பயணத்தில் அல்லது கலைப்பயணத்தில் உங்களைப்போன்ற மூத்த எழுத்தாளர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைகின்றது.?

பதில்: நாங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக நான் தலைமை தாங்குகின்ற முஸ்லிம் மீடியா போரம் ஊடாக கிட்டத்தட்ட ஊடகம் தொடர்பாக இந்த நாட்டின் இளைய தலைமுறையினரை அறிமுகப்படுத்துவதற்காக நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டகருத்தரங்குகளை நடத்தி இருக்கின்றோம்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த நாட்டின் ஒரு பிரதேசத்துக்கு சென்று அங்கிருக்கின்ற தமிழ் முஸ்லிம் மாணவர்களை இணைத்து அவர்களுக்கானஊடகத்துறை வழிகாட்டல்களைச் செய்கின்றோம்.

அதேபோல ஊடகத்துறையிலே இருக்கின்றவர்களுக்கும் எத்தனையோ பயிற்சி முகாம்களை நடாத்தி அவர்களுடைய தகமைகளை மேம்படுத்துவதற்காகப் பலநடவடிக்கைகளை நாம் எடுத்திருக்கின்றோம்.

கேள்வி: வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகள் அல்லது ஊடகவியலாளர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனைகள் என்ன?

பதில்: தங்களுக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றி தகமைகளை வளர்த்துக்கொண்டால் நிச்சயமாக அவர்களுக்கு உரிய இடம் கிடைக்கும்.

ஓர் இடத்தில் மறுத்தாலும் மற்றுமொரு இடத்தில் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆகவே ஆற்றல்களை வளர்த்துக்கொள்வது குறிப்பாக இலங்கையில்ஊடகத்துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு மும்மொழி அறிவு மிக முக்கியமானது.

தமிழில் நாங்கள் எவ்வளவு புலமை பெற்றிருந்தாலும் எங்களுக்கு அது போதாது குறைந்த பட்சம் சிங்களத்தை மிகச் சிறப்பாக அறிந்திருக்க வேண்டும் கூடவேஆங்கிலத்தையும் அறிந்திருந்தால் மிகச்சிறந்த ஊடகவியலாளராக மிளிர முடியும்.

மொழி ஆற்றல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கணணி அறிவைப் பொறுத்த வரையில் மூத்த தலைமுறையினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்இப்பொழுது புதியவர்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கின்றது ஆகவே கலைத்துறையாகட்டும், ஊடகத்துறையாகட்டும் மொழியாற்றல் என்பது முக்கியமான ஒன்றாகநான் கருதுகின்றேன்.

கேள்வி: இறுதியாக இந்த நேரத்தில் உங்களது வாழ்க்கையில் இவ்வாறான நிலைக்கு வரக் காரணமான யார் யாருக்கெல்லாம் நன்றி கூற ஆசைப்படுகிண்றீகள்..?

பதில்: உண்மையிலே என்னுடைய பெற்றோரின் பொறுமை மற்றும் வழிகாட்டல் எங்களது படிப்புக்கு தடைபோடாமல் பெரும் தியாகத்துக்கு மத்தியில் எம்மைவளர்த்தார்கள்.

என்னுடைய கிராமத்தில் அந்த காலத்தில் பீடிக்கைத்தொழில் பிரபல்யமாக இருந்தது. அப்பொழுது குறுகிய நேரத்தில் பல நூறு ரூபாய்களைச் சம்பாதிக்கும்வாய்ப்பு இருந்தது. இதனால் எமது கிராமத்தில் நாக்கு படிக்கக்கூடிய பலர் வறுமை காரணமாக அதற்கு பலியானார்கள், அவர்கள் உயர் நிலையினை அடையத்தடையாக இருந்தது என்னுடைய பெற்றார் என்னை அந்தப் பக்கத்துக்கு தள்ளாது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு என்னைப் படிக்க வைத்தார்கள்.என்னுடையபெற்றோருக்கு சதா நான் நன்றி செலுத்த வேண்டும்.

அத்துடன் இந்த ஊடகத்துறையில் இரவு பகல் பாராது வேலை செய்வதால் என்னுடைய மனைவி பிள்ளைகளின் மகிழ்ச்சிகரமான வாய்ப்புக்கள் என்னால்இழக்கப்பட்டது உண்மையில் அவர்களுக்கும் அவர்களுடைய பொறுமைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூற வேண்டும். ஏனெனில் இந்தத் துறையில் வளச்சிகாண அதுவும் ஒரு காரணமாகும்.

– நேர்காணல் ; செட்டிகுளம் சர்ஜான் – 

No comments

Powered by Blogger.