Header Ads



மியன்மாருக்கான அமெரிக்க இராணுவ உதவிகள் வாபஸ் - பொருளாதார தடை பற்றியும் ஆராய்வு


மியன்மார், ரகைன் மாநிலத்தில் உள்ள தனது சிறுமான்மை ரொஹிங்கிய முஸ்மிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா அந்த நாட்டுக்கான இராணுவ உதவிகளை வாபஸ் பெற்றுள்ளது.

மியன்மார் இராணுவ அதிகாரிகள் மீதான பயண சலுகைகளையும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கைவிட்டிருப்பதோடு பொருளாதார தடைகளை விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.

மியன்மாரில் இருக்கும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரொஹிங்கிய மக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருப்பதாக பங்களாதேஷின் ஐ.நா தூதுவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவே படை நடவடிக்கை மேற்கொள்வதகாவும் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதில்லை என்றும் மியன்மார் இராணுவம் நியாயம் கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் “அட்டூழியங்களுக்கு காரணமான எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் பொறுப்புக் கூறுவது அவசியமானதாகும்” என்று கூறப்பட்டுள்ளது. “மியன்மார் ரக்கை மாநிலத்தில் இடம்பெறும் அண்மைய ரொஹிங்கிய மற்றும் ஏனைய சமூகத்தினர் மீதான வன்முறை, அத்துமீறல்கள் குறித்து நாம் மிக அவதானத்துடன் உள்ளோம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மியன்மாரின் இராணுவ தலைமைகளே பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கடந்த வாரம் கூறியிருந்தார். நிலைமை குறித்து அமெரிக்கா மிக அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த வன்முறையை இன சுத்திகரிப்பு ஒன்றுக்கான பாடப்புத்தக உதாரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

கடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் 600,000க்கும் அதிகமான அகதிகள் மியன்மாரில் இருந்து எல்லை கடந்து பங்களாதேஷை அடைந்துள்ளனர். முன்னர் இடம்பெற்ற வன்முறைகளில் இருந்து தப்பி வந்த 300,000 ரொஹிங்கிய அகதிகள் ஏற்கனவே பங்களாதேஷில் உள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் பங்களாதேஷை அடைய காத்திருப்பதாக பங்களாதேஷின் ஐ.நா தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொஹிங்கியர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். அவர்கள் ரக்கைன் மாநிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாத மியன்மார் அரசு, பங்களாதேஷில் இருந்து வந்த நாடற்றவர்கள் என எடுத்துக்கொள்கிறது.

வீடு வீடாக வந்து கொலைகளில் ஈடுபடுவது, கிராமங்களுக்கு தீமூட்டுவது குறித்து ரொஹிங்கிய அகதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ரக்கைன் மாநிலத்தின் நிலைமை குறித்து பார்வையிட்ட சர்வதேச ஊடகவியலாளர்களும் இதனை உறுதி செய்துள்ளனர். 

1 comment:

  1. This one of the best humanitarian effort by USA. We need more likes this from developed countries.

    ReplyDelete

Powered by Blogger.