Header Ads



கோவில்களில் மிருகங்களைப் பலியிட்டு, வேள்வி நடத்த நீதிமன்றம் தடை


இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், எனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை  பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இத் தடை உத்தரவினை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  உத்தரவிட்டுள்ளார்.

இந்து கோவில்களில் மிருகபலியிடல் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்கு பிரதேச சபைகள் உள்ளுராட்சி சபைகள் அனுமதி வழங்குவதாகவும், அது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதிருப்பதாகவும், இத்தகைய  மிருகங்களை வதை செய்து, மிருகபலி செய்வது தொடர்பாக தடையீட்டு எழுத்தாணை வழங்கக்கோரி அகில இலங்கை சைவமகாசபை வழக்கொன்றை சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தது.

மேற்படி வழக்கு தொடர்பாக இறுதி தீர்பை வழங்குவதற்காக இன்றைய தினம் மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்படி தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.