Header Ads



ரோஹிங்கியா அகதிகளை திரும்பப்பெற மியான்மர் சம்மதம் - வங்காளதேசம்


மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். 

ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்  அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

முன்னதாக, மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி இன்று -02- தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அல்லாஹ்வுக்கே புகல்அனைத்தும்

    ReplyDelete

Powered by Blogger.