Header Ads



கோதுமைமா இறக்குமதியை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கமாட்டோம் - ரிசாத்

கோதுமைமா இறக்குமதியை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கோதுமை மா ஒரு கிலோவுக்கான செஸ்வரி 15 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின் போது மகிந்த ஆதரவு பொது எதிரணி எம்.பி.யான கனக ஹேரத் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் கூறுகையில்; 

 இலங்கைக்கு  2013 ஆம் ஆண்டு 1251 மெற்றிக் தொன் கோதுமை மாவும் 2014 இல் 1603, 2015 இல் 972, 2016 இல் 745 மெற்றித் தொன் கோதுமை மாவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையில் கோதுமை மாவின் தலா நுகர்வை கணிப்பீடு செய்வதற்கான ஆய்வு 3 வருடங்களுக்கொரு முறை நடத்தப்படுகின்றது. இதற்கமைய 2012  2013 ஆம் ஆண்டுகளில் தலா கோதுமை மா நுகர்வு 564.4 கிலோ கிராமாக காணப்பட்டது.  2016 ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போதிலும் முடிவு இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை, 2012 ஆம் ஆண்டு கோதுமை மா கிலோ ஒன்றுக்காக 15 ரூபா செஸ் வரி விதிக்கப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டு 20 ரூபாவாகவும் 2014 ஆம் ஆண்டு 25 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டது. 

தற்போது நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கோதுமை மா இறக்குமதியை அரசு அனுமதித்துள்ளது. கோதுமை மாவை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்காக கோதுமை மா கிலோ ஒன்றுக்கான செஸ் வரியும் 15 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. கோதுமை மா இறக்குமதியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காது என்றார்.

No comments

Powered by Blogger.