Header Ads



துருக்கி - அமெரிக்கா முறுகலா..?


துருக்கி மற்றும் அமெரிக்கா இராஜதந்திர முறுகல் காரணமாக பெரும்பாலான விசா சேவைகளை பரஸ்பரம் இடைநிறுத்தியுள்ளன.

துருக்கி தூதரகங்கள் மற்றும் பணியாளர்களுக்கான அமெரிக்க அரசின் கடப்பாடுகள் பற்றி ‘மீளாய்வு’ செய்ய வேண்டி இருப்பதாக வொஷிங்கடனில் உள்ள துருக்கி தூதரகம் அறிவித்துள்ளது.

இதே போன்ற ஓர் அறிவிப்பை அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னதாக வெளியிட்டிருந்தது.

துருக்கியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தோல்வி அடைந்த இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் மத குரு ஒருவருடன் தொடர்புபட்டதாக ஸ்தன்பூலில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இந்த கைது அடிப்படை அற்றது என்று கண்டனம் வெளியிட்ட அமெரிக்கா இரு நாட்டு உறவையும் பாதிக்கும் என்று எச்சரித்தது.

எனினும் துருக்கி பிரஜையான ஆண் ஒருவரே கைதுசெய்யப்பட்டவர் என்று அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குடியேற்ற விசா அல்லாத அனைத்து விசா சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அமெரிக்கா ஆரம்பத்தில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பதில் நடவடிக்கையாக துருக்கியும் அமெரிக்கா மீது இதே கட்டுப்பாடுகளை விதித்தது.

சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, வர்த்தகம் மற்றும் தற்காலிக பணிகளுக்காகவே குடியேற்றம் அல்லாத விசா விநியோகிக்கப்படுகிறது.

2016 ஜுலை இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மதகுரு பதுல்லாஹ் குலனை நாடு கடத்தும் படி துருக்கி பல மாதங்களாக அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. 

No comments

Powered by Blogger.