Header Ads



மைத்திரிக்கு நோபல் பரிசா? மகிந்தவின் விளக்கம் இதோ..!

இந்த நாடும் இந்தத் தேசமும், தங்களுடைய அரசியல் வேறுபாடுகளை மறந்து, நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றமை" பற்றி மகிழ்வடையவும் பெருமைப்படவும் வேண்டும் என, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நேற்று (03) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

"நொபெல் சமாதானப் பரிசுக்காக, ஜனாதிபதியின் பெயரைக் குறும்பட்டியலில் சேர்த்திருக்கின்றமை என்பது, பூகோள சமுதாயம், இலங்கை மீதும், தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி மீதும் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உண்மையிலேயே நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறாரா என்பது தான், இங்குள்ள கேள்வியாக அமைந்துள்ளது.

இலங்கையின் ஊடகங்கள் பலவற்றிலும், "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமாதானத்துக்கான நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் -பட்டுள்ளார்" என்ற செய்தி, தொடர்ச்சியாகக் கூறப்பட்டது.

இந்தச் செய்தி, இவ்வாண்டு பெப்ரவரி மாதமளவில், "ஒஸ்லோ சமாதான ஆராய்ச்சி நிறுவகம்" என்ற, அரசசார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் எழுதிய, ஒரு கட்டுரையை மூலமாகக் கொண்டே வெளியிடப்படுகிறது. அந்தக் கட்டுரை, ஆண்டின் ஆரம்பத்தின் எழுதப்பட்டாலும், இப்போதே, இலங்கை ஊடகங்களால் கவனஞ்செலுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. அதில் அவர், சமாதானத்துக்கான நொபெல் பரிசை வெற்றிகொள்ள அதிக வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கருதுகிறார் என்று கூறியிருந்தார்.

இந்த அமைப்பு, நொபெல் பரிசுகளை வழங்கும் செயற்குழுவோடு, எந்தவிதமான உத்தியோகபூர்வமான தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை. நொபெல் பரிசுகள், தகுதிபடைத்த சிலரால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அவ்வாறு பரிந்துரைக்கக்கூடிய வாய்ப்பை அந்தப் பணிப்பாளர் கொண்டிருந்தாலும், அதில் அவர் ஈடுபடுவதில்லை என்பதை, வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அத்தோடு, அதே பணிப்பாளரால், சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட குறும்பட்டியலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக, சமாதானத்துக்கான நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுபவர்களின் விவரங்களை, அதற்கான குழு, குறித்த பரிசு வழங்கப்பட்டு 50 ஆண்டுகளின் பின்னர் தான் வெளியிடும். எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உண்மையிலேயே யாராலும் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்டாரா என்பது, 50 ஆண்டுகளின் பின்னரேயே தெரியவரும்.

எனவே அதுவரை, இது குறித்து உறுதியான எந்த ஆதாரங்களும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

No comments

Powered by Blogger.