October 13, 2017

வடகிழக்கு இணைப்பு, சத்தியமாக சாத்தியமில்லை - மனோ சுமந்திரனுக்கு பதிலடி

வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்பதை இப்போதே அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் பதில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் முகப்புத்தகத்தினூடாகதமது பதிலை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நண்பர் சுமந்திரன் எம்.பி என்னை திட்டி தீர்த்திருப்பதில், எனக்கு அவர் மீது கோபம் எதுவும் இல்லை. இன்று அவருக்கு ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகையால் எவரையாவது சுட்டிக்காட்டி, இவர்கள் ஒன்றும் பேசவில்லை, அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று பேச வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டது.

பாவம் அவர், இப்படி எதையாவது பேசிவிட்டு போகட்டும். முஸ்லிம் மக்களின் ஒப்புதலுடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி, மதசார்பின்மை ஆகியவை, நண்பர் சுமந்திரன் அரசியலுக்கு வரமுன் இருந்தே. இது அவருக்கு தெரியாதது அவரது பிரச்சினை.

ஆனால் இன்று, இந்த நாட்டிலேயும், அரசாங்கத்துக்கு உள்ளேயும், வழிகாட்டல் குழுவுக்கு உள்ளேயும் இவற்றுக்கு சாத்தியம் சத்தியமாக இல்லை. இந்த உண்மையை நான் வழிகாட்டல் குழு அமைக்கப்பட்ட போதே சொன்னேன். ஏனென்றால் இது எல்லோருக்கும் ஆரம்பத்திலேயே தெரியும். இது ஒன்றும் புது விஷயமல்ல.

எனது கொள்கை வேறு. நிலவும் யதார்த்தம் வேறு. இதை உணர்ந்தபடியால், தமிழ் மக்களுக்கு போலியான எதிர்பார்ப்புகளை தர நான் ஒருபோதும் முயலவில்லை.

உண்மையில், நான் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்திருந்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதுடன் நின்றிருப்பேன். ஏனெனில் அதுவே, சொல்லொணா போர்த்துன்பங்களை சந்தித்த ஈழத்தமிழ் மக்கள், சிங்கள தேசத்துக்கு காட்டும் மிகப்பெரிய சமாதான அடையாளம் ஆகும்.

“நாங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கிறோம். உங்கள் கோரிக்கையை ஏற்று, எதிர்கட்சி தலைமையையும் ஏற்கிறோம். ஆனால், வழிகாட்டல் குழுவுக்கு வரமாட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வை தெற்கில் நீங்களே கட்சிகள், மத தலைமைகள் மத்தியில் பேசி, தரக்கூடிய அதிகபட்ச அரசியல் தீர்வை, முடிவு செய்து, அதை ஒரு ஆவணமாக சர்வதேச சமூகம் ஊடாக எங்களுக்கு தாருங்கள். நாங்கள் அதை அப்போது பரிசீலித்து பார்க்கிறோம்.” என்று ஐதேக, ஸ்ரீலசு கட்சி தலைமைகளுக்கு கூறியிருப்பேன்.

ஆனால், கூட்டமைப்பின் வழிகாட்டல் வேறு. அவர்களது கொள்கைவழி வேறு. அவர்களுக்கு எது சரி என்று பட்டதோ, அதை அவர்கள் இன்று செய்துள்ளார்கள்.

இந்நிலையில் இன்று, பேரம் பேச எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் மேசையில் திறந்த புத்தகமாக வைத்துவிட்ட பிறகு எதை நாம் பேசுவது?

கூட்டமைப்பு, வழிகாட்டல் குழுவில் தங்களது அரசியல் யோசனை முன்னெடுப்புகள் பற்றி எங்களிடம் ஒருபோதும் கலந்துரையாடவில்லை. உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் அவர்கள் ஏதேதோ பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் (TPA), தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) எதுவுமே ஒருபோதும் பேசவே இல்லை.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஈழ, மலையக, மேலக பிரதேச பேதங்களையெல்லாம் கடந்த "தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்" என்ற பொது அமைப்பை அமைத்து, அதன்மூலம் பொதுவான பிரச்சினைகளை அடையாளம் கண்டு சிங்கள அரசியல், சமூக, மத தலைமைகளுடன் நாம் கலந்துரையாட வேண்டும் என்ற யோசனையை நான் பல மாதங்களுக்கு முன்பே முன் வைத்தேன்.

அதை ஒரு காத்திரமான யோசனை என்று ஏற்றுக்கொண்டு, தமிழரசு தலைவர் மாவை உட்பட கூட்டமைப்பின் பல எம்பிக்கள், ஏனைய கட்சிகளின் தமிழ் எம்.பிக்கள், என்னிடம் தனிப்பட்டமுறையில் உடன்பாடு தெரிவித்தனர். ஆனாலும் அது ஏன் நடைமுறையாகவில்லை என கூட்டமைப்பு உட்பட எல்லா கட்சி தமிழ் எம்.பிக்களிடமும் தனித்தனியாகத்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். அப்போது இது பற்றிய உண்மை வெளிவரும்.

ஆகவே வழிகாட்டல் குழுவில் தான் மட்டுமே பேசினேன். ஏனையோர் ஒன்றும் பேசவில்லை என்று சுமந்திரன் எம்.பி இன்று பேசுவது பள்ளிகுழந்தைகள் சண்டையிடுவது போன்று மிக சிறுபிள்ளைத்தனமானது. நான் சண்டையிட வரவில்லை. ஏனெனில் நான் பள்ளிச் சிறுவனல்ல.

அவர் மட்டுமல்ல, வடக்கின் அரசியல்வாதிகள் அனைவரும் என் நண்பர்கள்தான். வடக்கில் வாழும் தமிழ் மக்கள் என் இரத்தத்தின் இரத்தங்கள்தான். இந்த உறவு, நண்பர் சுமந்திரன் போன்றவர்கள் அரசியலுக்கு வரமுன்பே, என் உயிர் தோழன் ரவிராஜ் காலத்தில் இருந்து என் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டதாகும்.” என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

3 கருத்துரைகள்:

கௌரவ அமைச்சா் மனோ கணேசன் அவா்கள் யதாா்த்தம் புரிந்த நல்ல மனிதா்

மனோ கணேசன், சுமந்திரன் இருவருமே யதார்த்தம் புரிந்த நல்ல அரசியல்வாதிகள் தான்.

உண்மையிலேயே இவர்கள் இருவரும் மிகச்சிறந்த அரசியல்வாதிகள் தான், ஒரு முஸ்லிமாக இவர்களை மதிக்கிறேன். ஒருவர் யதார்த்தத்தை பேசுகிறார். மற்றவர் அவர் சார்ந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடுகிறார். எமது அரசியல்வாதிகள் இவர்களை பார்த்து வெட்கப்பட வேண்டும். நமது அரசியல்வாதிகள் சமூகத்த விற்று எப்பிடி காசாக்கலாம் என்று பார்பார்கள்.

Post a Comment