Header Ads



பெண்களைத் தேடி அலையும், அரசியல் கட்சிகள்


உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாதம் 335 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழு இறங்கியுள்ளது.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் சட்டங்களின் படி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், குழுக்களின் பட்டியல் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்.

அத்துடன் புதிய தேர்தல்முறையின் படி, 60 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 40 வீதமான உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

25 வீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற விதிமுறை முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடத் தொடங்கியுள்ளன.

சபை ஒன்றில் 25 வீதமான பெண் வேட்பாளர்கள் நேரடியாகத் தெரிவு செய்யப்படாவிடின், அங்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் குறிப்பிட்ட கட்சியில் இருந்து பெண் வேட்பாளர்களை நியமிக்குமாறு கோரப்படும்.

சபை ஒன்றின் அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற வாக்குகளும் கணக்கிடப்பட்டு, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும். என்றும் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசியலில் பெண்களின் பங்களிப்பும், ஆர்வமும் குறைவாக உள்ள நிலையில், பெண் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.