October 15, 2017

பேரனின் அன்பைத், தேடிய முதியவர்

மதியம் 3 மணி வெய்யில் சுள்ளென்று எரித்துக் கொண்டிருந்தது. தெருவில் ஒரு காகம் குருவி கூட இல்லை. வெயிலுக்கு பயந்து அவை மரத்தின் நிழல்களில் இளைப்பாறிக் கொண்டிருந்தன. தெருக்களில் சிறுவர்களையும் காணவில்லை. வெயிலுக்கு பயந்து வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். ஆனால் ஒரு முதியவர் மட்டும் யாரையோ எதிர்பார்த்தவண்ணம் ஏக்கத்தோடு தெருக் கோடியை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த காதர் அந்த முதியவரை பார்த்து ஆச்சரியத்தோடு கேட்டான்.

'என்ன பாய்... இந்த சுட்டெரிக்கும் வெயிலில் யாருக்காக காத்திருக்கிறீர்கள்'

'ஒன்னுமில்ல தம்பி... சும்மா காத்து வாங்க...'

'காத்து வாங்கவா? என்ன பாய்... எனக்கே இந்த வெயிலை தாங்க முடியவில்லை. 65 வயதாகும் உங்களுக்கு தாங்க முடியுமா?  உடம்புக்கு ஏதாவது ஆகி விடும். வாங்க வீட்டுக்கு போகலாம்...'

'இல்ல தம்பி.... நீங்க போங்க நான் வர்றேன்'

'பாய்.... காரணத்தை சொல்லாம நான் போக மாட்டேன்... என்ன காரணம் உண்மையை சொல்லுங்கள்'

'அது வேற ஒன்னுமில்லப்பா.... என் மகன் அவனது மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை அவனது வீட்டில் ஏற்றுவதில்லை. பேரப்பிள்ளைகளை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் 10 நிமிடத்தில் பள்ளிக் கூடம் விட்டு எனது பேரப்பிள்ளைகள் வந்து விடுவார்கள். என் மகனுக்கும் என் மருமகளுக்கும் தெரியாமல் அந்த பேரக் குழந்தைகளை தெருவில் நிறுத்தி 10 நிமிடமாவது கொஞ்சி விட்டு அனுப்பி விடுவேன். இது பல மாதங்களாக நடக்கிறது. பேரப்பிள்ளைகளை கொஞ்சுவதற்காகத்தான் காத்திருக்கிறேன்' என்றார் பரிதாபமாக...

இதைக் கேட்ட காதருக்கு கோபம் தலைக்கேறியது....

'உங்கள் மகனா பெற்ற தகப்பனை வீட்டில் ஏற்றுவதில்லை. என்ன கொடுமை பாய். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறான். பொதுக் காரியங்களில் ஆர்வமுள்ளவனாகக் காட்டிக் கொள்கிறான். அவனுக்கு இப்படி ஒரு கோர முகமா?  எனது நண்பன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறேன்'  என்றான் காதர்.

'ஊருக்குத்தானே தம்பி.... நல்லா உபதேசம் பண்ணுவான். பெற்ற தந்தையை தவிக்க விட்டுட்டு ஊருக்கு உபதேசம் பண்ணினால் அவனது நல் அமல்களை அவனது முகத்திலேயே இறைவன் தூக்கி எறிய மாட்டானா'

'சரியாக சொன்னீர்கள் பாய். அவனுக்கு போன் போட்டு நாலு டோஸ் கொடுக்கிறேன்.'

'அல்லாவே.... தம்பி அவனுக்கு இந்த செய்தியை சொல்லிடாதீங்க.... அப்புறம் என் பேரப்பிள்ளைகளையும் கெடுத்துடுவான். இப்படியே போகட்டும்' என்றார் பரிதாபமாக.....

அதற்குள் அவரது பேரப்பிள்ளைகள் வந்து விடவே சில திண்பண்டங்களை கொடுத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தார். அந்த முதியவரின் நிலையை எண்ணி நொந்தவாறே தனது வீட்டை நோக்கி நகர்ந்தான் காதர்.

-------------------------------------------------------------------

நபிகள் நாயகம் அவர்கள் நவின்றார்கள்: 'அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)' இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். மக்கள் வினவினார்கள் 'அல்லாஹ்வின் தூதரே, யார்? (அதாவது, யார் இழிவடையட்டும், யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?') 'முதுமைப்பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ - இருவரையுமோ பெற்றிருந்தும் அவர்களுக்குப் பணிவிடை புரிந்து சுவனம் புகாதவன்.'
.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

0 கருத்துரைகள்:

Post a Comment