Header Ads



நிமோனியா நோயில் இருந்து குழந்தைகளை காக்கும் ஷாம்பு பாட்டில் - டாக்டர் முகமது கண்டுபிடிப்பு


நிமோனியாவால் ஆண்டு தோறும் 9 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளும், சிசுக்களும் உயிரிழக்கின்றனர். நிமோனியா நுரையீரலை பாதிக்கிறது. ஸ்டிரெப்டோகாக்கஸ் அல்லது ஆர்.எஸ்.வி. போன்ற வைரஸ்கள்  நுரையீரலை பாதிக்கின்றன.

இதனால் நுரையீரல் வீங்குவதுடன் திரவத்தால் நிரம்புகின்றன. இதனால் சுவாசத்தின் போது ஆக்சிஜனை உள்ளிழுக்கும் நுரையீரலின் திறன் குறைகிறது. வளர்ந்த நாடுகளில் நிமோனியா பாதித்த குழந்தைகளின் சுவாசத்துக்கு செயற்கை சுவாச கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.

இக்கருவி ஒன்றின் விலை 15 ஆயிரம் டாலர்கள் (ரூ.10 லட்சம்). மேலும் அது சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்களால் இயக்கப்பட வேண்டும். இது வளரும் நாடுகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான செலவை மிகவும் அதிகரிக்கும்.

எனவே மிக குறைந்த விலையிலான சாதாரண கருவியை அதாவது தூக்கி எறியப்பட்ட காலி பிளாஸ்டிக் ஷாம்பு பாட்டிலை வைத்து டாக்டர் ஒருவர் நிமோனியாவில் இருந்து குழந்தைகளை காக்கும் கருவியை கண்டு பிடித்துள்ளார். அவரது பெயர் முகமது ஜோபெயர் சிஸ்டி. வங்காள தேசத்தை சேர்ந்தவர்.

இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பணிபுரியும் போது சுவாசவழி அழுத்தம் தரும் குமிழி கருவியை பார்த்தார். இது தொடர்ச்சியான சுவாசவழி அழுத்தத்தை பயன்படுத்தி நுரையீரல் உருக்குலைவதை தடுத்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை உட்கிரகிக்க உதவும். ஆனால் இதன் விலை அதிகம்.

இவர் வங்காள தேசம் திரும்பிய போது எளிமையான விலை குறைந்த குமிழி சாதனம் பற்றிய ஆய்வை மேற் கொண்டார். இவரும் உடன் பணிபுரிந்த டாக்டரும் இணைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தூக்கி எறியப்பட்ட காலி ஷாம்பு பாட்டிலில் நீர்நிரப்பி அதன் ஒரு புறத்தில் பிளாஸ்டிக் சப்ளை டியூப்களை பொருத்தினார்கள்.

நிமோனியா நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் சிலிண்டரில் இருந்து ஆக்சிஜனை உட்கிரகித்தது. ஷாம்பு பாட்டிலில் பொருத்தப்பட்ட டியூப் வழியாக சுவாசத்தை வெளிவிடும் போது நீரில் குமிழிகள் தோன்றும். அதில் இருந்து ஏற்படும் அழுத்தம் நுரையீரலின் சிறிய காற்றுப் பைகளை திறக்கிறது.

இதன் மூலம் 4 முதல் 5 நோயாளிகளிடம் பரிசோதித்த போது சில மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. தனது இந்த ஆய்வின் முடிவுகளை ‘தி லான்சட்’ இதழில் டாக்டர் சிஸ்டி வெளியிட்டார்.

2 comments:

  1. மாஷாஅல்லாஹ் , அனைவருக்கும் நல்லதோர் சேதி.

    ReplyDelete

Powered by Blogger.