Header Ads



ரணில் வெளிநாட்டில் நின்றபோது, ரவி நடத்திய மது விருந்து - விசாரணை ஆரம்பம்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்லாந்து நாட்டு விஜயம் செய்திருந்த போது, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சந்திப்பொன்றை ஒன்றை நடத்தியமை குறித்து உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம உட்பட பிரதமருக்கு நெருக்கமான சில அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு அறிவித்துள்ளனர்.

இதற்கு அமையவே விசாரணைகள் நடத்தப்படுகிறது. ரவி கருணாநாயக்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவருக்கு நெருக்கமானவர்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாது ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான மற்றுமொருவர் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ரவி கருணாநாயக்க ஏற்பாடு செய்த இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிய உணவு, இராப்போசனம் மற்றும் வெளிநாட்டு மது விருந்துடன் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவில் தங்க ஆடம்பர அறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது தொடர்பாக கலந்துரையாட இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும்,  சந்திப்பில் பிரதமருக்கு நெருக்கமான அமைச்சர்களை விமர்சிக்கவே அதிக நேரம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் நாட்டுக்கு வெளியில் இருக்கும் போது தலைமைத்துவத்திற்கு அறிவிக்காது நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சந்திப்பொன்றை நடத்தியமை குறித்து பிரதமர் நாடு திரும்பியதும் அவரிடம் தெளிவுப்படுத்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.