Header Ads



மைத்திரியின் முழக்கத்திற்கு என்னாச்சு, சந்திரிக்கா களமிறங்குகிறார்...!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகியுள்ள நிலையில் அவற்றுக்கு முடிவுகட்டி ஒருமித்த தீர்மானமொன்றை எடுக்க களமிறங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் சு.க வின் சிரேஷ்ட ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் வெஸ்மினிஸ்டர் எனப்படும் பிரதமர் தலைமையிலான ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது.

அதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதி முறைமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே தனது முதலாவது நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முழக்கமிட்டிருந்தார்.

அதன் அடிப்படையிலேயே 19ஆவது திருத்தச் சட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி நாடாளுமன்றத்துக்கு முழுமையான அதிகாரத்தைக் கொடுக்கும் சரத்துகள் இடம்பெற்ற போதிலும், முழுமையாக நிறைவேற்று முறைமையை நீக்க சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன் பின்னர் அந்நடவடிக்கை கைவிடப்பட்டிருந்த போதிலும் சு.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் நிறைவேற்று அதிகாரம் தொடரவேண்டுமெனக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் தொடர்வது குறித்து ஐ.தே.கவுக்கும், சு.கவுக்கும் இடையில் பரஸ்பர விரோதம் கடந்த காலத்தில் நிலவிவந்த சூழலில் தற்போது அது உள்வீட்டுப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

சு.கவின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் நிறைவேற்று அதிகாரத்துக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ள போதிலும் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஏற்கனவே, பொது எதிரணிக்கும் சு.கவுக்கும் பிரச்சினைகள் முற்றியுள்ள சூழலில் இந்த விவகாரம் சு.கவின் அடுத்தகட்ட நகர்வுகளுக்குச் சவால்விடும் காரணியாக மாறிவிடும் என்பதால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க சமாதானப் புறாவாக சந்திரிகா களமிறக்கப்பட்டுள்ளார்.

விரைவில் சந்திரிகா இதுபற்றி கட்சியின் அனைத்து தரப்புக்களுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.

No comments

Powered by Blogger.