Header Ads



இப்படியும் ஒரு அமைச்சர், இராஜதந்திர மட்ட விசாரணை முன்னெடுப்பு

மாதம் ஒரு தடவை மாத்திரம், இரகசியமான முறையில், ஓர் இரவை மட்டும் கழிக்க வெளிநாடு சென்று விட்டு நாடு திரும்பும் அமைச்சர் ஒருவர் தொடர்பில், இராஜதந்திர மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அமைச்சர், வௌிமாவட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஒன்றின் தலைவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, சிங்கள ஊடகமொன்று வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“குறித்த அமைச்சர், தமது இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, இரகசியமான முறையில் ஒவ்வொரு மாதமும் சென்னைக்குச் சென்று, இரவைக் கழித்துவிட்டு, மீளவும் மறுநாள் நாடு திரும்பியுள்ளாரென, முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

“இரவு வேளையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் விமானத்தில் சென்னைக்குச் சென்று, மறுநாள் பகல் நேர விமான சேவையில் நாடு திரும்புகிறாரெனவும் தெரியவந்துள்ளது.

“இப்பயணம் தொடர்பில், அரசாங்கத்துக்கோ, தூதரகத்துக்கோ, இராஜதந்திர ரீதியில் எவ்வித அறிவிப்புகளையும் விடுக்கவில்லை” என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜதந்திர சட்டத்திட்டத்தின் படி, அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, அறிவிக்க வேண்டியது அவசியமாகும். தனிப்பட்ட விஜயம் என்றாலும், குறித்த நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது அவசியமானது. அவ்வாறு அறிவித்தால் மாத்திரமே, அவரது பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், குறித்த அமைச்சர், எவ்வித அறிவிப்பையும் விடுக்காமல் சென்றுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது. சில சமயங்களில், அவரது பணயங்களுக்கு, உதவியாளர் ஒருவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது இரகசியப் பயணம், கடந்த மாதம் இந்திய பாதுகாப்புத் தரப்பினருக்கு கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர்களது ஒரு நாள் பயணம், எந்நோக்கத்துக்கானது என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.