Header Ads



வேர்களிடம் கேள், என் விலாசத்தைக் கூறும்...


என்ன கேட்கிறாய் என்னிடம்?
என் மண்ணிலே 
வாழ்ந்ததற்கு 
ஆதாரம் கேட்கிறாயா?

கால் நூற்றாண்டு கடந்து 
தாயக மண்ணில் 
கால் பதிக்க வந்தால் 
கேள்விகளால் - நீ 
வேள்வி செய்கிறாய்!
ஆயிரம் கேள்விகளால் 
காயப்படுத்துகிறாய்!

ஆண்டாண்டு காலமாய் 
வாழ்ந்த எமை 
பூண்டோடழித்ததை 
ஊரறியும்..உலகறியும்..

ஒக்டோபர் தொண்ணூறில் 
வெளிச்சத்தில் நிகழ்ந்த
அந்த இனச்சுத்திகரிப்பு
இருண்டு போனதேன் 
உன் விழிகளுக்கு!

வாழ்ந்ததற்கு 
ஆதாரம் கேட்கிறாயா?
இனி வாழ்வதற்கு 
ஆதாரம் கேட்கிறாயா?

வாக்குப்பதிவு கேட்கிறாய்
இடிந்து கிடக்கும் 
இந்த வீட்டில் 
என் வாழ்க்கைப்பதிவு
தெரியவில்லையா உனக்கு!

உள்ளதையெல்லாம் 
உரித்துக் கொண்டு
இருநூறு போதுமென்று 
வேரோடு பிடுங்கி 
வீசிய வேளையில் 
எம் வாழ்க்கையோடு 
வாக்கையும் தானே 
வெட்டி விரட்டினார்கள்!

இறுதிப் பயணமாக 
இருக்கட்டும் என்றுதானே
எங்கள் உறுதியையும்
கிழித்து வீசினார்கள்!

அன்று ஜின்னா மைதானத்தில்
எம் வாழ்க்கையைக் கிழித்த
அவர்களிடமன்றோ
நீங்கள் கேட்கவேண்டும்
எங்கள் வாக்குகளை..
எங்கள் உறுதிகளை..
எங்கள் ஆவணங்களை..

புன்னகையை விற்றுக் 
கண்ணீரைக் கடன் வாங்கிய
அந்த நாட்கள் 
ஈரலிப்பாகவே இருக்கின்றது
இன்னும்!..

சொந்த மண்ணின் சுகமிழந்து 
சொந்த பந்தம் யாவுமிழந்து
கண்ணீரில் வாழ்ந்தகாலம்
யாழ். அஸீம் 

எம் மண்ணிலே மறையுமென 
மீண்டு வந்தால்...
வெந்த புண்ணிலன்றோ
வேல் பாய்ச்சுகிறாய்!...

ஆண்டு பல சென்றாலும் 
இன்னும் மாறாத அன்புடன்
எமை அணைத்திடும் 
இனிய தமிழ் மக்களுடன் 
இணைந்து வாழ 
இதயத்தோடு இதயம் சேர 
உறவுகளை உயிர்ப்பிக்க 
ஆர்வமுடன் வந்தோம் நாம்!

வீட்டுதிட்டமென 
விருப்புடன் வந்தால் 
வந்தேறு குடிகளைப் போல் 
வெறுப்புடன் நோக்குகிறாய்!..
இறுக்கமான நிபந்தனைகளால் 
குரல்வளையை நெரிக்கிறாய்!

வீட்டுத் திட்டமிது
வீடு வழங்கும் திட்டமா?
வீடு வழங்காமலிருக்கத் திட்டமா?

என்ன கேட்கிறாய்.. என்னிடம்
என் மண்ணிலே வாழ்ந்ததற்கு 
ஆதாரம் கேட்கிறாயா?

என் மண்ணில் 
ஆழப்புதைந்திருக்கும் 
வேர்களிடம் கேள் 
என் விலாசத்தைக் கூறும்!

ஓங்கி வளர்ந்த 
அந்தத் தென்னையிடம் கேள் 
என்னை அடையானம் காட்டும்!

பட்டுப் போன- இந்த 
மரங்களிடம் கேள்!
விட்டுப் போன – என் 
வாழ்வின் சுவடுகளைக் காட்டும்!

பூத்துக் குலுங்கும் - இந்த 
மல்லிகையிடம் கேள்!
மண்வாசம் மறவாத 
என் சுவாசத்தைக் கூறும்!

இடிந்து கிடக்கும் 
இந்த வீட்டைக் கேள்
என் இதயத் துடிப்பின் 
ஆயிரம் வலிகளைக் கூறும்!

தவழ்ந்து விளையாடிய – என் 
தாய் மண்ணைக் கேள்
என் காலடித் தடங்களை 
ஒவ்வொன்றாய்க் காட்டும்!

சிதைந்து கிடக்கும் 
செங்கல்லிடம் கேள்!
என் இரத்தமும் வியர்வையும் 
கலந்திருப்பதைக் கூறும் !

இதை விட வேறென்ன
ஆதாரம் வேண்டும் உனக்கு!

 Yarl Azeem

5 comments:

  1. Evargaludana naam ...vadakku kilakku enaiththu vallvathu ????,????

    ReplyDelete
  2. Evargaludana naam ...vadakku kilakku enaiththu vallvathu ????,????

    ReplyDelete
  3. சம்பந்தன் ஐயாவுக்கும் மாவைசேனாதிராஜ ஐயாவுக்கும்.சுமந்திரன் சேர்ருக்கும். கூடவே சிவாஜிலிங்கத்துக்கும் ஒவ்வொரு பிரதி அனுப்பி வையுங்கள்.

    ReplyDelete
  4. Ya Allah help my brothers and sisters to get back thier own homeland where they grew with..... place human feelings in the heart of those who oppose this returning of residence.

    ReplyDelete
  5. இதை விடவும் கொடுமை என் தாய் மண்ணில் அல்ல ,என் தாய் வீட்டிலே எனக்கும் என் மற்றைய சகோதரிக்கும் உரிமை இல்லை என என் மூத்த சகோதரியால் விரட்டி அடிக்கப்பட்டோம் .உரிமையை கேட்டபோது பொலிசில் இல்லாததை சொல்லி யாழ் மண்ணுக்கும் எங்களுக்கும் உரிமை இல்லை என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது .

    ReplyDelete

Powered by Blogger.