Header Ads



புதிய யாப்பை, உருவாக்க போராடுவோம் - அமில தேரர்

புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லையென தேரர்களுக்கோ வேறு அமைப்பைச் சார்ந்தவர்களுக்கோ கூற முடியாது. ஜனவரி 8ஆம் திகதியும் ஓகஸ்ட் 17ஆம் திகதியும் புதியதொரு யாப்பை உருவாக்குமாறு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. 63 இலட்சம் பேரின் நிலைப்பாட்டை ஒரு சிலரால் நிராகரித்து விட முடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில் தேரர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் சவால்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தம்பர அமில தேரருக்குமிடையில் நேற்று மாலை (26) அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமருடன் விரிவாக கலந்துரையாடினேன். பிரதமர் ஒரு பக்கத்திற்கும் சார்பானவர் அல்ல எனத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருப்பது சட்டமூலமொன்றோ சட்டவரைவொன்றோ அல்ல. அது இடைக்கால அறிக்கை மாத்திரமே இடைக்கால அறிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கை குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெறும்.

அதன் மூலம் அரசியலமைப்பு எவ்வகையில் அமைய வேண்டும் என்பது எல்லோருக்கும் புரிய ஆரம்பிக்கும். ஒவ்வொரு கட்சியும் அமைப்புக்களும் முன்வைத்த கருத்துக்கள் மாத்திரமே இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இது வெளிப்படையாக பகிரங்க விவாதத்திற்கு உட்படுத்தப்படும். அப்போது தேரர்களுக்கும் தங்களது ஆலோசணைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என பிரதமர் தன்னிடம் குறிப்பிட்டதாக தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய தம்பர அமில தேரர், அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு யாருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படைத்தன்மை மிக்கதாக அமைய வேண்டும். லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு நாடு முழுவதிலும் மக்கள் கருத்துக்களை பெற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

 முழுப்பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. ஆறு உப குழுக்களினதும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. பிரதமரின் தலைமையில் 21 பேரை கொண்ட அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவும் உள்ளது. இவையெல்லாக் கட்டங்களையும் தாண்டி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அது நிறைவேற்றப்படவுள்ளது.

இதுவல்லாமல் 47,71,78 காலப்பகுதிகளில் கொண்டு வந்ததை போன்று புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படக்கூடாது. மிகவும் ஜனநாயகபூர்வமான முறையில் யாப்பு உருவாக்கம் நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இன்று பிரதமருடன் கலந்துரையாடினோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான ஜனநாயக முறைகளுக்கமைய புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களையும் சங்கைக்குரிய தேரர்களையும் தௌிவூட்ட வேண்டிய பாரியதொரு பொறுப்பு எமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விழிப்பூட்டல் நடவடிக்கைக்கு புதியதொரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், எதிர்வரும் காலத்தில் அவ்வமைப்பின் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நற்பணிக்கு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மக்கள் தௌிவுட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் வகையில் புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவையெல்லாவற்றையும் உறுதிப்படுத்த புதியயொரு அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் எனக் குறிப்பிட்ட அவர், அன்று பொருள் பலம், அதிகார பலம், ஊடகப் பலம் ஆகிய மூன்றினையும் கையில் வைத்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய எமக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அரசியலமைப்பை கொண்டு வருவது ஒன்றும் கடினமான விடயமல்ல என்றும் தெரிவித்தார். ஜனவரி 08, ஓகஸ்ட் 17ஆம் திகதி போராடியது போன்று நாம் அரசியலமைப்புக்காக வேண்டியும் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

ஹெட்டி ரம்ஸி 

No comments

Powered by Blogger.