Header Ads



"முதலமைச்சர் பதவியை வழங்குவதென்பது முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியாது"

"முதலமைச்சர் பதவியை வழங்குவதென்பது முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியாது. ஒரு சமூகத்துடைய தனித்துவ அரசியல் அடையாளங்களையும், அதன் அடிப்படையிலான அபிலாசைகளையும் மறுதலித்து விட்டு இன்னுமொரு சமூகம் தான் விரும்பும் அரசியல் தீர்வை திணிக்க முயற்சிக்கக்கூடாது. அந்த அணுகுமுறை தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க ஒரு போதும் உதவப்போவதில்லை. மத்திய அரசில் பலமான அமைச்சுப் பதவிகளை வழங்குவதானது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக முடியாது என்பது போலவே வடகிழக்கை இணைத்து விட்டு முதலமைச்சர் பதவியை வழங்குவது என்பதும் முஸ்லிம்களுக்கான தீர்வாக முடியாது", என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

 காத்தான்குடியில் இடம் பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:

"இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு  வழங்கப்பட வேண்டும் என்பதிலும்  மாகாணங்களுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. 

அரசியல் தீர்வாக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றிருந்தால் அது என்ன நியாயங்களின் அடிப்படையில் செய்யப்படவேண்டுமென்பதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இங்குதான் பிரச்சினை இருக்கிது. வடக்கையும் கிழக்கையும் இணைத்துத்தான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நடக்கப் போகின்றது என்ற அச்சம் தரக்கூடிய ஆருடமான செய்தி ஒன்று இப்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. 
முதலில் இடைக்கால யாப்பு அறிக்கையில் சில விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வடக்கும் கிழக்கும் தனியாக இருக்க வேண்டும் என்பதும் வடக்கும் கிழக்கும் இணையலாம் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. யாப்புருவாக்க குழுவிலே அங்கம் வகித்த கட்சிகளின் ஏகோபித்த முடிவுகள் இடைக்கால அறிக்கையின் பிரதான முன்பகுதியிலும், முரண்பட்ட கருத்துக்கள் பின்பகுதியிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.


 வடக்கும் கிழக்கும் இணையலாம் என்ற கருத்தும், வடக்கும் கிழக்கும் இணையக் கூடாது என்ற கருத்தும் இருவேறு தரப்பினர்களினது தனிப்பட்ட கருத்துக்களாக இருக்குமாயின், அது எப்படி பிரதான அறிக்கையிலே எல்லோரும் ஏற்றுக் கொண்ட கருத்தாக  உள்ளடக்கப்பட்டது? 

இதைத் தொடர்ந்து இப்போது  தமிழ் தரப்பு அரசியல் தலைமைகள் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். 

முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள். அப்படி  வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஒத்துழைத்தால் அதற்கு பகரமாக முஸ்லிம் முதலமைச்சர் பதவியை தருவதற்கு தாம் தயாராய் இருப்பதாக சம்பந்தன் அவர்கள் சொல்லியிருக்கிறார். 'ஒரு நல்ல படித்த கண்ணியமான மனிதரை வடகிழக்கு முதலமைச்சராக நாங்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்'என்று சம்பந்தன் ஐயா சொல்லியிருக்கிறார்.

இங்கு தான் நாங்கள் சுயாதீனமாகவும் தைரியமாகவும் நமது மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை ஏனைய தமிழ், சிங்கள தலைமைகளுக்கு முன்னால் பேச வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால் இதுவிடயத்தில் எல்லோரும் அடக்கி வாசிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள் மக்களுடைய அபிலாஷைகளை வெளியே சொல்வதற்கு பயப்படுகின்றார்கள். நல்லாட்சிக்கான  தேசிய முன்னணி இந்த விடயத்தை மிகத் தெட்டத் தெளிவாக எல்லா இடங்களிலும் சொல்லி வந்திருக்கிறது. வடக்கிலே நாங்கள் தேர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்த போது வட மாகாண மக்களது அரசியல் உரிமைகளை மிகத் தெளிவாக வலியுறுத்தினோம். வட மாகாண சபையிலே வட-கிழக்கு இணைப்பு தொடர்பான ஒரு சட்ட முன்மொழிவு வந்த போது அதனை  ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும்  நாம் சொல்லியிருந்தோம். இதை வேறு எந்தக் கட்சிகளும் செய்யவில்லை. 

அதற்கு அப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளோடு பேசுகின்ற போது நாம் மிகத் தெளிவாக இந்த விடயங்களைச் சொல்லியிருக்கிறோம். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சொல்கின்ற விடயம் இதுதான். அரசியல் தீர்வு என்பது மக்களுக்கான தீர்வே அல்லாமல் அரசியல்வாதிகளுக்கான தீர்வாகவோ கட்சிகளுக்கான தீர்வாகவோ இருக்க முடியாது. 

வடக்கிலுள்ள மக்களுக்கும் அரசியல் தீர்வு வேண்டும். கிழக்கிலுள்ள மக்களுக்கும் அரசியல் தீர்வு வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்காமல் இந்தத் தீர்வை வழங்க முடியாது என்று தமிழ்த் தலைமைகள் சொன்னால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் எதனை தீர்ப்பதற்கு வடக்கு கிழக்கு இணைப்பு தேவைப்படுகின்றது? என்ற நியாயத்தை அவர்கள் எமக்கு தெளிவாக சொல்ல வேண்டும். இந்த விடயத்தை பொது மேடையில் உங்களிடம் கேட்பதற்கு முன்னால்  தமிழ் மக்களின் தலைமைகளிடம், சம்பந்தன் ஐயா அவர்களிடம், சட்டத்தரணி சுமந்திரன் அவர்களிடம் நாம் நேரடியாக கேட்டிருக்கின்றோம். 

 வடக்கு கிழக்கு இணைக்கப்படுகின்ற போது கிழக்கு முஸ்லிம்களுடைய , கிழக்கிலே வாழ்கின்ற ஏனைய மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் பாதிக்கப்படுகின்றன; நசுக்கப்படுகின்றன என்ற விடயங்களை நாம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

 ஒன்றை நாம் தெளிவாக முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்த வரை அவர்களின் அரசியல அடையாளம் தமிழ் மொழியாகும். முஸ்லிம்கள் அவர்களின் அரசியல் அடையாளமாக தமிழ் மொழியை எடுத்துக் கொள்ளவில்லை. எம்முடைய மத, கலாசார தனித்துவமே எங்கள் அரசியல் அடையாளங்களாகும்.  இங்குதான் தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் விடயத்தில் தவறு விடுகிறார்கள். முஸ்லிம்ளுடைய அரசியல் தனித்துவத்தை அரசியல் அடையாளத்தை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறர்கள்.

ஒரு சமூகத்துடைய அரசியல் அடையாளத்தை மறுத்து விட்டு இன்னுமொரு சமூகம் தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது. சம்பந்தன் ஐயா அவர்கள் கூறிய அந்தக் கருத்தைப் பார்த்த பொழுது எனக்கு கவலையாக இருந்தது. 'முஸ்லிம்களுடைய தனித்துவ அரசியல் அடையாளத்தை விட்டு விட்டு தமிழ் பேசும் மக்களாக மட்டும் எம்மோடு சேர்ந்துக் கொள்ளுங்கள். வடக்கு கிழக்கை இணைய விடுங்கள் இதற்குப் பகரமாக நாங்கள் ஒரு முதலமைச்சர் பதவியை தருகின்றோம்' என்று சொன்னால் இது எந்த வகையில்  நியாயமாகும்.


அப்படியென்றால் 'இப்போது யுத்தம் முடிந்து விட்டது; நாட்டில் பிரச்சினைகள் எதுவும் கிடையாது; சமத்துவமான உரிமை தருகிறோம்; சமமான அபிவிருத்தியைத் தருகின்றோம்; மத்திய அரசில் பதவிகளைத் தருகின்றோம்; உங்களில் ஒருவரை உபஜனாதிபதியாக்குகின்றோம்; நீங்களும் சமஷ்டி கோரிக்கையை விட்டு விடுங்கள்' என்று பெரும்பான்மை அரசாங்கம் சொன்னால் தமிழ்  மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா? இல்லை. ஏனென்றால் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினை பதவிகளில் தங்கியிருக்கவில்லை. எனவேதான் இத்தனைக் காலமாக அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அமைச்சர்களாக இல்லை. மந்திரிகளாக இல்லை. வெளிநாட்டுத் தூதுவர்களாக அவர்களின் ஆட்களை அனுப்புவதில்லை. ஆனால் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதில் மட்டும் மிக கவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

மத்திய அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சராக இருப்பதென்பது அவர்களுடைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக முடியாது. அதுபோல முஸ்லிம் முதலமைச்சரைத் தருவது முஸ்லிம்களுடைய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு அல்ல என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

எமது அரசியல் அடையாளங்களை நாம் துணிச்சலாக சொல்ல வேண்டும். இந்த நாட்டில் இன ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய இலங்கை ஒரு புதிய தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அது ஒவ்வொரு மக்களதும் அரசியல் உரிமைகளையும் தனித்துவ அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு பலமான சமூகம் இன்னொரு சமூகத்தின் உரிமைகளை அடக்கிவிட்டு, நசுக்கி விட்டு தேசிய இணக்கப்பாட்டையும் ஐக்கியத்தையும் பற்றி பேசமுடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

2 comments:

Powered by Blogger.