Header Ads



இலங்கை பற்றி ஐ. நா. விசேட நிபுணர் முன்வைத்துள்ள பரிந்துரைகள்

போர் வெற்றி வீரர்களை நீதியின்  முன் நிறுத்தமாட்டோம்  என்று எவரும் கூற முடியாது. போர் வெற்றி வீரர்களை   பாதுகாப்பதாக  கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை  மீறுவதாகும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

14 நாட்கள் சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டதன் முடிவில் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே பப்லோ டி கிரெய்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

பரிந்துரைகள்

கால அட்டவணையுடன் கூடிய  பரந்துபட்ட  மற்றும் சுயாதீனமான  நிலைமாறுகால நீதிப்பொறிமுறை ஒன்றை அரசாங்கம்   உடனடியாக  முன்வைக்க வேண்டும்.  அந்த பொறிமுறையானது  உண்மை, நீதி,  நட்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை  உள்ளடக்கவேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக மக்களின் கருத்துக்களை  பெறுவதற்காக நியமிக்கப்பட்ட  சிறப்பு செயலணியின் பரிந்துரைகளின்   நன்மைகளை அரசாங்கம் பெறவேண்டும்.

இதுவரையான காலப்பகுதியில் ஐ.நாவின் உதவிகளை   சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக பயன்படுத்தவில்லை எனத் தெரிகின்றது. எனவே அரசாங்கம்  ஐ.நா.  மனித உரிமை ஆணையாளர் பணியகத்தில் இருந்து மேலும் நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை  உடனடியாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாக கொண்டு வரப்படும் சட்டம் அனைத்துலக தரங்களைப்  பின்பற்றுவதாக அமைய வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்    தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விடயங்களை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டும்.

இராணுவத்தினர் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் தொடர்பான ஒரு வரைபடத்தை  உடனடியாக தயாரிக்க வேண்டும்.  காணி விடுவிப்பு தொடர்பான ஒரு கால அட்டவணை அவசியமாகின்றது. மீளளிக்கப்படாத காணிகளுக்கு நட்டஈடு வழங்குவது அவசியமானதாகும். இது தொடர்பில் இராணுவத்தரப்பினர் மட்டும் முடிவெடுக்காத வகையிலான  திட்டம்  வேண்டும்.

மனித உரிமை காப்பாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் முக்கியமாக பெண்கள் ஆகிய தரப்பினர் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  கடந்த காலங்களில்  செயற்பட்ட   ஆணைக்குழுக்களின்  அறிக்கைகள் ( வெ ளியிடப்படாதவை)  உடனடியாக வெளியிடப்படவேண்டும்.

சுயாதீன தன்மை வெ ளிப்படைத்தன்மை என்பனவற்றின் அடிப்படையில்  காணாமல் போனோர் குறித்த பணியகத்துக்கு  ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.  ஆணையாளர்கள் சிறிலங்காவின் பன்முகத்தன்மைகொண்ட சமூக கட்டமைப்பை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன்  கலந்துரையாடுவதற்காக   பிரதிநிதிகள்  காணாமல்போனோர் பணியகம் சார்பாக நியமிக்கப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  இதற்கான பணியகங்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த காணாமல்போனோர் பணியகத்தை கண்காணிப்பதற்காக   பாதிக்கப்பட்டோரினால்  ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுவை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

தடவியல் விசாரணைகளுக்காக உள்நாட்டு, பிராந்திய, மற்றும் அனைத்துலக உதவிகளைப் பெறலாம். காணாமல்போனோர் பணியகங்களும் செயற்பாட்டில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து செயற்படவேண்டும்.

அனைத்து பாதிக்கப்பட்ட சமூகங்களின் நன்மை கருதி   உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று  நிறுவப்பட வேண்டும். இதற்கு ஒரு பரந்துபட்ட ஆணை வழங்கப்பட வேண்டும்.  இதற்கான சட்டமூலம் விரைவாக கொண்டு வரப்பட வேண்டும்.  உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கான ஆணையாளர் நியமனத்தில்  பாதிக்கப்பட்டோர் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்களை  ஆராய்வது தொடர்பான தற்போதைய நீதி கட்டமைப்பில் காணப்படுகின்ற வரையறைகள்  குறித்து ஆராய்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இடம்பெறவேண்டிய நீதிபதிகளின்  தேசியத்துவம் தொடர்பான விவாதமானது  இந்த செயற்பாட்டை அரசியல் மயப்படுத்தியுள்ளது.   இது தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக ஒரு பரந்துபட்ட திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இது இனம், மதம், உள்ளிட்ட எந்தவொரு விடயத்தையும் கருத்தில்  கொள்ளாது முன்னெடுக்கப்பட வேண்டும்.  இந்தவிடயத்தில் பால்நிலை விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக  பெண்கள், குடும்பத் தலைவிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். நட்டஈடு வழங்குதல் ஆனது உண்மை மற்றும் நீதியை புறந்தள்ளுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. நட்டஈடு செயற்பாடானது பொறுப்புதன்மையுடன் செயற்படவேண்டும்.

இது உண்மையைக் கண்டறியும் ஆணையுடன் தொடர்புபடுவது பயனுள்ளதாக இருக்கும்.  காணி விடுவித்தல் தொடர்பான ஒரு கால அட்டவணையுடன் ஒரு வரைபடம் உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டும்.  இராணுவத்தரப்பினர் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான காணிகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இது  இராணுவத்தரப்பினால் மட்டும் ஆராயப்படக்கூடாது. இதற்கான ஒரு பரந்துபட்ட பார்வைக் கொண்ட ஒரு அமைப்பு  உருவாக்கப்பட வேண்டும்.  காணி விவகாரங்களுக்காக ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

மக்கள் 30 வருடங்களாக தரமற்ற வசதிகளுடன்  வாழ்ந்ததைக் காணமுடிகின்றது.  இது  நடுத்தர வருமானம் கொண்ட நாட்டுக்கு பொருத்தமானதல்ல. இது தொடர்பான கொள்கை ஆராயப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான வீட்டுத்திட்டமானது  மக்களுக்கு பொருத்தமானதாக அமைய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள்   தமது  உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமையை  உறுதிப்படுத்த வேண்டும்.  இவ்வாறு   நினைவுகூரும் செயற்பாடானது நட்டஈடு  பெறுவதைப் போன்ற ஒரு உணர்வைக் கொண்டது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடானது   சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சட்டமா திணைக்களத்திற்கான அதிகாரங்கள்,  பாதுகாப்புத்துறை மீளாய்வு என்பன இங்கு ஆராயப்பட வேண்டும். அரசியலமைப்பு மறுசீரமைப்பு   இடம்பெறும்  தற்போதைய நிலையில் அவசியமாகின்றது.

அனைத்துலக மனித உரிமை தரங்களை உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக  பலவந்தமாக  காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அனைத்துலக  சாசனத்தை சிறிலங்கா  அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.   எனது அறிக்கையில் நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக பல பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளேன். காரணம் நிலைமாறுகால   நீதித்துறையில் முக்கிய  பங்கை  வகிக்க உள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Dear Mr UN,
    All peace-loving Srilankans are happy about your findings.

    ReplyDelete

Powered by Blogger.