Header Ads



ஒட்டுமொத்த ரோஹின்ய கிராமங்களையும், அழிப்பதுதான் மியன்மாரின் நோக்கம் - ஐ.நா. அறிக்கை


மியன்மார் பாதுகாப்பு படைகள் வடக்கு ரகைன் மாநிலத்தில் இருந்து அரை மில்லியன் ரொஹிங்கிய மக்களை கொடூரமான முறையில் துரத்தி அவர்களின் வீடுகள், பயிர்களுக்கு தீ வைத்திருப்பதோடு கிராம மக்கள் திரும்புவதை தடுப்பதாக ஐ.நா மனித உரிமை அலுவலகம் நேற்று அறிவித்தது.

கடந்த மாதத்தில் பங்களாதேஷுக்கு தப்பி வந்த 65 ரொஹிங்கியர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் பொலிஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே மியன்மார் இராணுவத்தின் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளில் சித்திரவதை, கொலை மற்றும் கற்பழிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த இராணுவ நடவடிக்கை இன அழிப்புக்கான பாடப் புத்தக உதாரணம் என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் செயித் ராத் அல் ஹுஸைன் வர்ணித்திருந்தார்.

இந்நிலையில் அல் ஹுஸைனின் ஜெனீவா அலுவலகம் தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

“வடக்கு ரகைன் மாநிலத்தில் மியன்மார் பாதுகாப்பு படைகள் திட்டமிட்டு ரொஹிங்கியாக்களின் சொத்துகளுக்கு தீமூட்டுவதும், அவர்களது குடியிருப்புகள் மற்றும் ஒட்டுமொத்த கிராமங்களை அழிப்பதும் நம்பகமான தகவல்கள் மூலம் வெளிப்படையாகிறது. மக்களை துரத்துவது மாத்திரமன்றி தப்பிச் சென்ற பாதிக்கப்பட்ட ரொஹிங்கியர்கள் தமது வீட்டுக்கு திரும்புவதையும் தடுத்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

மியன்மாரில் நீடிக்கும் வன்முறைகளால் சுமார் 520,000 ரொஹிங்கிய மக்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஷின் கொக்ஸ் பசார் சென்று கடந்த செப்டெம்பர் 14 தொடக்கம் 24 வரை பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலம் பெற்றே ஐ.நா மனித உரிமை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.