Header Ads



தற்போதைய ஜனாதிபதி தான் ஒரு, தேசப்பற்றாளன் என்று காட்ட முயற்சிக்கிறார்

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகள் என்றால், கடந்த காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதா? என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட் தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு பணம் மற்றும் ஆயுதங்கள் கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது.

இவர்கள் கைது செய்யப்படவில்லை, ஆனால் இவர்கள் கொடுத்த பணத்தையும், ஆயுதத்தையும் வைத்து பயன்படுத்தியவர்கள் எப்படி பயங்கரவாதிகளாகுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 12,000 கைதிகளை சமூகமயப்படுத்தி இருக்கின்றார். 600 கைதிகளை விடுதலை செய்திருக்கின்றார். 20,000 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க தற்போதைய அரசாங்கம் 132 பேருக்கு மட்டும் பயப்படுவது ஏன்? தற்போதைய ஜனாதிபதி தான் ஒரு தேசப்பற்றாளன் என்று காட்டுவதற்கு முயற்சிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்து 16ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கருதி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இதன்போது அருட் தந்தை சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.