October 10, 2017

அற்புதமான புத்தரின் போதனைகளை, பிக்குகள் அவமதிக்கின்றனர் - விக்னேஸ்வரன்

சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு மீதான விவாதம் தொடர்பாக சிலோன் ருடே ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் முதல் பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது:

கேள்வி: தாங்கள் அண்மையில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தீர்கள். இதன் பின்னர் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் மகாநாயக்க தேரர்கள் தவறான புரிந்துணர்வைக் கொண்டுள்ளதாக தாங்கள் தெரிவித்திருந்தீர்கள். இது தொடர்பாக விளக்கமாகக் கூறமுடியுமா?

பதில்: முதலாவதாக, கூட்டாட்சிக்கான எமது கோரிக்கையானது நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான கோரிக்கையாக மகாநாயக்க தேரர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவதாக, இந்த நாடானது சிங்கள பௌத்த தேசம் எனவும் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்கள் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

மூன்றாவதாக, தேவநம்பிய தீசன் ஒரு சிங்கள மன்னன் என மகாநாயக்க தேரர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்.

இதுபோன்றே அவர்கள் தெரிவித்த பல கருத்துக்கள் தவறான கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தன. ஆனாலும் தற்போது நான் குறிப்பிட்டுள்ள மூன்று விடயங்களைப் பற்றி விரிவாக விளக்க விரும்புகிறேன்.

கூட்டாட்சி என்பது வேறுபட்ட சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் அரசியல் முறைமையே கூட்டாட்சி என அனைத்துலக நாடுகள் கூறுகின்ற அதேவேளையில்,  கூட்டாட்சி என்பது பிரிவினைவாதம் என பௌத்த மதகுருமார்கள் தொடர்ந்தும் கூறிவருகின்றனர்.

அதாவது கூட்டாட்சி என்கின்ற நிர்வாக அலகின் கீழ் வடக்கு- கிழக்கின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கு- கிழக்குப் பிரிந்து செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாக தேரர்கள் அச்சம் கொள்கின்றனர் என நான் நினைக்கிறேன். உண்மையில் இவ்வாறு அச்சப்படுவதற்கான எந்தவொரு காரணமும் இல்லை.

அவ்வாறாயின் கூட்டாட்சியின் கீழ் செயற்படும் நாட்டின் ஒவ்வொரு நிர்வாக அலகும் எதிர்காலத்தில் தனித் தனியாகப் பிரிந்து விடும் எனக் கருதமுடியுமா? இவ்வாறான சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெறவில்லை. பிரென்ஞ் மொழியைப் பேசும் கியூபெக் மக்கள் ஆங்கில மொழியைப் பேசும் கனேடியர்களுடன் இணைந்து வாழ விரும்பினார்கள்.

இந்த வகையில் ஏற்கனவே சிறிலங்காவிலுள்ள ஒவ்வொரு மாகாணமும் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி என்பது மக்கள் தற்போது வாழும் நிலையிலிருந்து பெரியளவிலான வேறுபாட்டை உருவாக்காது.

சிறிலங்காவானது முற்றிலும் கூட்டாட்சி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டால் அதன் பின்னர் இங்குள்ள ஒன்பது மாகாணங்களும் கூட்டாட்சி நிர்வாக உரிமையைக் கொண்டிருக்கும். தற்போதும் கூட சிறிலங்காவிலுள்ள மக்கள் தமது மாகாணங்களிலிருந்து பிற மாகாணத்திற்கு பாரியளவில் குடியேறும் நிலை ஏற்படவில்லை.

கூட்டாட்சி நிர்வாகம் நடைமுறைக்கு வந்தால் தமிழ் மக்கள் அனைவரும் வடக்கு கிழக்கிலும் சிங்களவர்கள் தெற்கிலும் குடியேறி விடுவார்கள் என்கின்ற அச்சம் நிலவுகிறது.  ஆனால் இதில் எவ்வித உண்மையும் இல்லை. இது மக்களின் தெரிவாகும். அவர்கள் சிறிலங்கர்களாக இருப்பதால் பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை வரை தமக்கு விரும்பிய இடங்களுக்குப் பயணம் செய்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.

கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் தாங்கள் பரந்த நகரத்தில் வாழ்வதை உணர்ந்து கொள்ள வேண்டும். கொழும்பு நகரில் சிங்களவர்களை விட சிங்களவர்கள் அல்லாத சமூகத்தவர்களே அதிகம் வாழ்கின்றனர் என நான் நம்புகின்றேன். இந்த வகையில் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கிற்கு குடியேற வேண்டிய தேவையில்லை.

CMஇதேபோன்று வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களும் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை ஏற்படாது. அவர்கள் தொடர்ந்தும் தற்போது தாங்கள் வாழும் இடங்களில் வாழமுடியும். சிறிலங்காவின் மத்திய அரசாங்கம் தற்போது தமிழ் மக்களுடன் எவ்வாறான தொடர்பைப் பேணுகிறதோ அவ்வாறே வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களும் கூட்டாட்சியின் பின்னர் நிர்வாக அலகுடன் தொடர்பைப் பேணமுடியும்.

வடமாகாண சபையில் இரண்டு சிங்கள இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு நாங்கள் சிங்களத்தில் பதில் அளிக்கின்றோம். இவர்களுக்கு சிங்கள மொழியில் ஆவணங்கள் மொழிபெயர்த்து வழங்கப்படுகின்றன. அத்துடன் மொழிபெயர்ப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரரினதும் இவரது சபை உறுப்பினர்களினதும் அச்சம் பயனற்றதாகும்.

அடுத்தது இந்த நாடானது சிங்கள பௌத்த தேசம் என இவர்கள் நம்புகின்றனர். இது தவறானது. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் சிங்கள பௌத்தர்களாக இருக்கலாம். இதன் காரணமாக இந்த நாட்டை ‘சிங்கள பௌத்த’ தேசம் என அழைத்து விட முடியாது.


சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டது கூடத் தவறானது. அத்துடன் இந்தச் சட்டத்தை எதிர்த்தவர்களைக் கொடுமைப்படுத்தியமை மிகவும் மோசமான நடவடிக்கையாகும். இது பெரும்பான்மையினரின் அதிகாரத்துவத்தைக் காண்பிக்கின்றது.

இந்த நாட்டின் ஆதிக்குடிமக்கள் திராவிடர்கள் என அண்மைய கல்வெட்டுக்கள் மற்றும் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சிங்களவர்கள் திராவிட வம்சாவளியினர் என்பதை மரபணுப் பரிசோதனைகள் உறுதிப்படுத்துகின்றன. சிங்கள மொழியானது கி.பி 6ம் நூற்றாண்டின் பின்னரே பயன்பாட்டிற்கு வந்தது.

மகாவம்சமானது பாளி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இது சிங்கள மொழியில் எழுதப்படவில்லை. இதுவே சிங்கள மொழி மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தில் தோன்றவில்லை என்பதற்கான சான்றாகும். 40 சதவீத சிங்கள மொழிச் சொற்கள் தமிழ் மொழியிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம்,  நான்காம் நூற்றாண்டுகளில் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் பௌத்தர்களாவர்.

எமது பிரபலமான இலக்கிய வேலைப்பாடுகள் அதாவது மணிமேகலை போன்றன பௌத்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. இக்காலப்பகுதியில் தென்னிந்தியாவில் பௌத்த தமிழ் கல்விக் கூடங்கள் காணப்பட்டன. ஆகவே சிறிலங்காவின் பௌத்த ஆதிக்குடிகள் தமிழ் மக்களாவர் ((Demala Baudhayo). .

நான்கு நாயனார்கள் தோன்றிய போது தமிழ் மக்கள் பௌத்தத்தைக் கைவிட்டார்கள். இதன் பின்னர் பௌத்தர்களாக இருந்த தமிழ் மக்கள் தமது விசித்திரமான ஆன்மீக மற்றும் பக்தி வெளிப்பாட்டின் மூலம் இந்துக்களாக மாறினர். இந்தச் சந்தர்ப்பத்தில் பௌத்தம் இந்துமதத்தால் மறைக்கப்பட்டது.

முன்னைய காலத்தில் வடக்கு கிழக்கில் வாழ்ந்த மக்களால் பௌத்தம் நிராகரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் இன்று எஞ்சியுள்ள தொல்பொருளியல் சான்றுகள் தமிழ் பௌத்தர்களால் விடப்பட்டதே அன்றி சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமானதல்ல.

ஆகவே நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களில் பௌத்த மதம் பெரும்பான்மையாக இருந்தாலும் கூட வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் பௌத்த மதத்தை நிராகரித்து இந்து மதத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கூட்டாட்சி மற்றும் மதச் சார்பற்ற நிர்வாக அலகாகச் செயற்பட முடியும்.

பௌத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்பது புத்தருக்கோ அல்லது அவரது போதனைகளுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதை நோக்காகக் கொண்டதல்ல. பௌத்த மதகுருமார்கள் தமக்கென தனியிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அரசாங்கத்திலும் நிர்வாகத்திலும் தலையீடு செய்வதற்காகவுமே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அற்புதமான புத்தரின் போதனைகளை பௌத்த தேரர்கள் தமது நடவடிக்கைள் மூலம் அவமதிக்கின்றனர். பௌத்த மதம் போதிக்கும் அடிப்படை நெறிமுறைகள் அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளன. இதற்கேற்ப நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் புத்தரின் போதனைகளுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும். ஆனால் இதனை எவரும் கருத்திற்கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்.

தொண்டுக்களைச் செய்யும் கிறிஸ்தவர்கள், சகோதரத்துவத்தைப் பேணும் முஸ்லீம்கள், தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்தும் இந்துக்கள் ஆகியோரும் அரசியல் யாப்பில் சமமாக மதிக்கப்பட வேண்டும். பௌத்த மதத்திற்கு அரசியல் யாப்பில் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வடக்கு -கிழக்கில் தேவையற்ற இடங்களில் பௌத்த வணக்கத்தலங்களை உருவாக்குவதற்கும் மறைமுகமாக எமது மக்களை மதம் மாற்றுவதற்கும் வழிவகுக்கப்படுகிறது.

தேவநம்பிய தீசன் சிங்கள மன்னன் எனக் கூறப்பட்டுள்ளமை வரலாற்று ரீதியாகத் தவறானதாகும். அவர் வாழ்ந்த காலத்தில் சிங்கள மொழி நடைமுறையிலில்லை. இவரது உண்மையான பெயர் தேவனை நம்பிய தீசன் என்பதாகும். அதாவது கடவுளை நம்பியவர் என்பதே இதன் கருத்தாகும். இது தமிழ்ப் பெயராகும்.

ஆகவே தமிழ் மக்கள் மீது குற்றம் காண்பதற்கு முன்னர் அஸ்கிரீய மகாநாயக்க தேரர்கள் தம்மிடையே காணப்படும் தவறான புரிந்துணர்வுகள் மற்றும் பிழையான நம்பிக்கைகளை இல்லாதொழிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை பேராசிரியர்களான பத்மநாதன், சிற்றம்பலம், இந்திரபாலா (இவர் 2005ல் கடைசியாக ஒரு நூலை வெளியிட்டிருந்தார்) போன்ற தமிழ் வரலாற்றாசிரியர்களின் நூல்களை மகாநாயக்க தேரர்கள் வாசிப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிய முடியும்.

வழிமூலம்      – Ceylon today
ஆங்கிலத்தில் – Sulochana Ramiah Mohan
மொழியாக்கம் – நித்தியபாரதி

0 கருத்துரைகள்:

Post a Comment