Header Ads



ஷியாம் படுகொலை - மரண தண்டனை கைதி முதுநிலை உயர் பட்டப்படிப்பு பரீட்சை எழுதுகிறார்

இலங்கை வரலாற்றிலே முதல் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் அந்நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதுநிலை உயர் பட்டபடிப்பு தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த தேர்வு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நிலையமொன்றில் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலையின் தலைமை அதிகாரி சந்தன எக்கனாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த சிறை கைதியின் பெயர் இந்திக பமுனுசிங்க. அவர் முன்னர் துணை போலீஸ் பரிசோதகராக பணியாற்றியதாக சந்தன எக்கனாயக்க கூறியுள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசிக்கும் மொஹோமத் ஷியாம் எனும் வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்ததது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்த இந்திக பமுனுசிங்கவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

அந்த தண்டனையை எதிர்த்து அவர், தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

மரண தண்டனை வழங்கப்பட்ட பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் அவர் முதலில் இளங்கலை பட்டத்தை பெற்றுக்கொண்டதாக கூறிய தலைமை அதிகாரி சந்தன எக்கானாயக்க, இலங்கை வரலாற்றில் மரண தண்டனை வழங்கப்பட்ட பின்னர் கைதியொருவர் பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொள்வது இதுவே முதல்முறை என்றார்.

அதன் பின்னர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்ட படிப்பை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட கைதி அனுமதி கோரியதாகவும், அதற்கு சிறைச்சாலைகளின் ஆணையாளர் அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட கைதி உயர் பட்டப்படிப்பு தேர்வை எழுத உள்ளதாக சிறைச்சாலையின் தலைமை அதிகாரி சந்தன எக்கானாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.