Header Ads



பாகிஸ்தானின் கிரிக்கெட்டுக்கு, இலங்கை உதவ வேண்டும் - வக்கார் யூனிஸ்


பாகிஸ்தானில் லாகூருக்கு வந்து ரி 20 போட்டியில் பங்கேற்குமாறு இலங்கை அணிக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன் வக்கார் யூனிஸ்  அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை  பாகிஸ்தான் அணிகளுக்கிடையே தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.  இப்போட்டி முடிவடைந்ததும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும். அதன் பின் இரு ரி20 போட்டிகள்  நடைபெறவுள்ளன.  இதில் இரண்டாவது ரி20 போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் என பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாகிஸ்தான் சென்று இந்தப் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை இறுதி முடிவு எடுக்காத நிலையில், அங்குள்ள பாதுகாப்பு நிலைமை தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அதன் பின்னரே இப்போட்டியில்  பங்குபற்ற லாகூர் செல்வதா இல்லையா என முடிவெடுக்கும்.

 இந்த நிலையில் பாகிஸ்தான் வந்து லாகூரில் ரி20 போட்டியில் பங்கேற்குமாறும் அங்கு பாதுகாப்பு சூழ்நிலை சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ், கடந்த எட்டு வருடங்களாக பாகிஸ்தானில்  ஓரிரு சர்வதேச போட்டிகளே நடைபெற்றுள்ளதாகவும் அதனை மேம்படுத்த இலங்கை அணியால் உதவ முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி கடந்த எட்டு வருடங்களாக பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.  மனோரீதியாகவும் வீரர்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.  இதனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இதனை மேம்படுத்த சர்வதேசம் உதவ வேண்டும்.

தற்போதைய நிலையில் லாகூரில்  இலங்கையுடனான கடைசி ரி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அணி உதவ வேண்டும். அவர்கள் அங்கு வருவார்கள் என தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க இலங்கை உதவும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.