Header Ads



முஸ்லிம் சமூகம், கோட்டை விடுமா..?

-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு இழுபறிகளுக்குப்பின்னர் திருத்தங்களுடன் இச்சட்டமூலம் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு  வெற்றிகரமாக மூன்றிலிரு பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது.   

அந்த வகையில் புதிய கலப்பு முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த மாகாண சபை தேர்தல் தொகுதிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயக் குழு ஒன்றை அரசாங்கம் நியமித்துள்ளது.

கே.தவலிங்கம் தலைமையிலான இந்தக் குழுவில், பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, முன்னாள் தேர்தல் ஆணையாளர் சிறிவர்த்தன, பேராசிரியர் சங்கர விஜயசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறித்த குழுவினரே மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை வரையறை செய்யவுள்ளனர். மாகாணசபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல் நடத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதி வரையறைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 2018 மார்ச் மாதத்தில் அரசு நடாத்த தீர்மானித்துள்ள நிலையில் அவசர அவசரமாக எல்லை நிர்ணய விவகாரத்தை நிறைவு செய்வதற்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு 5 இல் அமைந்துள்ள இலங்கை நில அளவையாளர் தலைமையக தொகுதியில் மேற்படி எல்லை நிர்ணயக் குழு தற்பொழுது பணிகளை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதியிற்கு முன்னர் குறுகிய கால இடைவெளியில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக நிறுவனங்களும் பொதுமக்களும் தமது ஆலோசனைகளை மேற்படி குழுவிடம் சமப்பிக்குமாறு ஊடகங்களில் விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொகுதி மற்றும் விகிதாசார கலப்புத் தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாரிய அளவில் குறைவதற்கான அபாயம் இருப்பதனை பல்வேறு தரப்புக்களும் கருத்தாடலுக்கு எடுத்திருந்த நிலையில் இந்த சட்டத் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் மூன்றிலிரு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் புதிய தேர்தல் முறை குறிப்பாக முஸ்லிம்களதும் மலையக மக்களதும் பிரதிநிதித்துவங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

என்றாலும் குறைந்த மாகாண சபைகளுக்கான புதிய எல்லை நிர்ணயத்தின் பொழுது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை ஓரளவேனும் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அவர்கள் ஓரளவு செறிவாக வாழுகின்ற பிரதேசங்களில் எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ள முடியுமா என்பது பற்றி அந்தந்த சமூகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. 
        
மலையக தலைமைகள் மிகவும் தீவிரமாக மேற்படி விவகாரத்தை கையாண்டு வருகின்றமையை அறிய முடிகின்றது, மலையகத்தில் ஓரளவு செறிவாக வாழும் கட்டமைப்பை அவர்கள் கொண்டுள்ளமை அவர்களுக்கு பல சாதகமான காரநிகளிக் கொண்டுள்ளன.

வடக்கில் செறிவாக வாழும் தமிழ் மக்களிற்கும் புதிய தேர்தல் முறை பாதிப்புக்களை  ஏற்படுத்துவத்ற்கில்லை, தென்னிலங்கையில் சிதறி வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் கிழக்கில் வாழும் முஸ்லிம்களை பொறுத்த வரையிலும் மேற்படி தேர்தல் முறை மாத்திரமன்றி எல்லை நிர்ணய முன்னெடுப்புக்களும் பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரச யந்திரத்தை முழுமையாக நகர்த்தி உரிய ஆய்வுகளை உடனடியாக செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு முஸ்லிம் சிவில் சமூகமும் புத்தி ஜீவிகளும் தமது வரலாற்றுக் கடமையை செவ்வனே செய்வதற்கு முன்வரல் வேண்டும்.

கிழக்கிழங்கையை பொறுத்தவரை முஸ்லிம்களது சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப மாகாணசபை தொகுதி நிர்ணயங்களை மேற்கொள்வதோடு வெறுமனே அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கைகளுக்கு அப்பால் விகிதாசாரத்திற்கு ஏற்ப தொகுதிகளிற்கு கீழ்வரும் காணி இயற்கை வளங்கள்  மற்றும் அபிவிருத்தி சார் காரணிகளையும் கவனத்திற்கொண்டு தமது ஆய்வு அறிக்கைகளை யோசனைகளை மேற்படி எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்பிக்க வேண்டும்.

தென்னிலங்கையை பொறுத்தவரை முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் தமது பிரதிநிதிகளை பெறக்கூடிய வகையிலும் இன்னும் சில பகுதிகளில் தீர்மானிக்கின்ற சக்தியாக திகழமுடியுமான வகையிலும் தமது ஆய்வுகளை மேற்கொண்டு யோசனைகளை முன்வைக்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களிற்கான எல்லை நிர்ணய முன்னெடுப்புக்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற பொழுதும் முஸ்லிம் சமூகத் தலைமைகள் எல்லை நிர்ணயம் தொடர்பான தமது நிலைப்பாடுகளை முன்வைக்காத நிலையிலும் தேர்தல்முறை சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும், அரசியல் யாப்பினால் உறுதிப்படுத்தப்படவேண்டிய முஸ்லிம்களது பிரதிநிதித்துவம் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் தயவில் விடப்பட்டுள்ளமை எமக்கு நாமே இழைத்துக் கொண்ட மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.  
   
அரசியல் தலைமைகளால் அரச யந்திரத்தினால் அரச அதிகாரிகளினால் செய்யப்பட வேண்டிய இவ்வாறான பணிகளை சிவில சமூகத் தலைமைகள் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் தனித்து செய்வது சிரம சாத்தியமான விடயமாகும், அந்த வகையில் மேற்படி விவகாரம் தொடர்பாக சமூகத் தலைமைகளை வழிநடாத்தவும் சகலரையும் ஒன்றிணைத்து தேசிய அளவில் எடுக்கப்படுகின்ற முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்குமாக தேசிய ஷூரா சபை ஒரு நிபுணர் குழுவினை நியமித்துள்ளது.

மேற்படி நிபுணர் குழுவுடன் தொடர்பு கொண்டு தத்தமது பிரதேசங்கள் தொடர்பான யோசனைகளை முன்வைக்கவும் தேவைப்படுகின்ற நிபுணத்துவ ஆலோசனைகளையும் கள ஆய்விற்குத் தேவைப்படுகின்ற சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு சமூகத்தின் சகல தரப்புக்களும் முன்வருதல் வேண்டும். 

No comments

Powered by Blogger.