October 13, 2017

சரணடைவதன் மூலம் தமிழ் - முஸ்லிம் புரிந்துணர்வை கட்டியழுப்ப முடியாது

"தமிழ் மக்கள் தமக்கு வேண்டியதை கோருவதற்கான உரிமையை கொண்டிருக்கின்றார்கள் என்பது போலவே, முஸ்லிம் மக்களும் நமது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான சகல உரிமையினையும் கொண்டிருக்கின்றார்கள் . ஒவ்வரு சமூகங்களினதும் பக்கமுள்ள நியாயங்களை பேச வேண்டும், அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதுபோலவே அவர்களின் கோரிக்கைகள் அடுத்த சமூகங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் இழப்புகளையும்  உரிய நேரத்தில் உரிய முறையில் சுட்டிக்காட்டியாக வேண்டும். அதை விடுத்து, 'புரிந்துணர்வு' என்கின்ற போலியான சந்தர்ப்பவாத அரசியல் கோஷங்களினால் அர்த்தமுள்ள புரிந்துணர்வினையோ அல்லது தமிழ்-முஸ்லிம் அரசியல் நல்லிணக்கத்தையோ ஏற்படுத்த முடியாது. இதனை மு.கா.தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் இனிமேலாவது புரிந்த கொள்ள வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியாலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வட-கிழக்கு இணைப்பு தொடர்பாக SLMC ஏன் மௌனம் காக்கிறது என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வினவப்பட்ட வேளை அதன் தலைவர் அமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்குமுகமாகவே இவ்வாறு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

NFGG தவிசாளரின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளதாவது:

"வட-கிழக்கு இணைப்பு தமிழ் தரப்பினரால் வலியுறுத்தப்படுகின்ற நிலையில் அது பற்றி மௌனம் காத்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீம்,  தமிழ் மக்களுடனான புரிந்துணர்வை உருவாக்குவதற்காகவே தாம் மௌனம் காப்பதாக காரணம் சொல்லியிருக்கிறார். வெளிப்படையில் அவர் அவ்வாறு கூறிய போதிலும் வட- கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தரப்பினருடன் ஏற்கனவே உடன்பாடு கண்டு விட்டது என்ற விடயம் தற்போது அம்பலமாகியிருக்கிறது. 
வட –கிழக்கு இணைப்பு என்ற விடயம் கிழக்கு மக்களை பொறுத்தளவில் பாரதுரமான ஒன்றாகும். குறிப்பாக முஸ்லிம்களை பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக தமக்கிருக்கின்ற அரசியல் பலத்தினையும் வட-கிழக்கு இணைப்பானது பறிக்கின்ற அதேவேளை , அரசியல் ரீதியான பல அபாயங்களையும் அது ஏற்படுத்துகின்றது, 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீம் கூறும் 'தமிழ்-முஸ்லிம் புரிந்துணர்வு' என்ற கோசம் நேர்மையான ஒன்றல்ல என்பதனை அவரது கடந்த கால நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. இரு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பது ஒவ்வொருவரினதும் தரப்பிலுள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பதன் மூலமும்   தவறுகளிருப்பின் அவற்றை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டப்படுவதன் மேலமுமே கட்டுயெழுப்பப்பட முடியும்.
 அந்த வகையில் வட கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களின் பக்கத்தில் உள்ளன நியாயங்களை பேசுவதற்கு தயங்குவது போலவே, பல கடந்த கால சந்தர்பங்களில் தமிழ் மக்களின் பக்கமுள்ள நியாயங்களுக்காக குரல் கொடுப்பதில் மு. காங்கிரஸ் தலைவர் தொடர்ந்தும் தவறிழைத்தே வந்திருக்கின்றார். தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மைகளை புறக்கணித்து விட்டு நமது சந்தர்ப்பவாத அரசியல் இலாபங்களுக்கவே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார். அதற்கு வரலாற்றில் பல சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடியும்.
  யுத்தம் நடந்த காலாங்களில் கடுமையான அவசரகாலச் சட்டமென்றினை அரசாங்கம் அமுல்படுத்தி வந்தது .இந்த சட்டத்தினை பாவித்து ஏராளமான அப்பாவி தமிழ் மக்கள் மோசமாக வதைக்கப்பட்டனர். இன்றும் கூட பலர் சிறைகளிலே வாடுகின்றனர். ஆனால், இந்த அவசாரகாலச்சட்டங்களை நீடிப்பதற்கான அனுமதி கோரி ஒவ்வரு மாதமும் பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்புக்கு கொண்டு வருகின்ற போது அதற்கு எவ்வித ஆட்சேபனையும் நிபந்தனையும் இன்றி மு. காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஆதரவு அளித்தே வந்திருக்கிறார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சில வேளைகளில் அவசரகாலச் சட்டம் தேவைப்படலாம். ஆனால் இன்னும் ஒரு சமூகத்தின் பழி தீர்த்து தண்டிப்பதற்காக அதனை பயன்படுத்த முடியாது. இந்த நியாயங்களை தமிழ் மக்கள் சார்பாக ரவூப் ஹக்கீம் அவர்களோ அல்லது அவருடைய கட்சியோ உரத்துப, பேசியது கிடையாது. அவ்வாறு செய்திருந்தால் அது தமிழ் முஸ்லிம் புரிந்துணர்வுக்கான அத்திவாரமாக அமைந்திருக்கும். அத்தோடு, நெடுங்காலமாக நீதியமைச்சாரக இருந்த மு.கா.தலைவர் , சிறையில் வாடும் அப்பாவி தமிழ் இளைஞர்களுக்கு நீதி வழங்குவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவும் இல்லை.


     அதுபோலவே, இறுதிக்கட்ட யுத்தத்தில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க உதவுமாறு கோரி சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் சென்றனர். அவர்களின் நீதிக்காக ஒத்துழைக்கா விட்டாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் இருந்தும் மு. காங்கிரஸ் தலைவர் தவிர்ந்திருக்க வேண்டும் . அவர் அவ்வாறு செய்ய வில்லை. தமிழ் மக்கள் கோரும் நீதி வழங்கப்படக்கூடாது என்ற பிரச்சாரத்தை மு. காங்கிரஸ் தலைவர் ஜெனிவா வரை சென்று செய்திருந்தார். தமது சந்தர்ப்பவாத அரசியல் இலாபத்திற்காக அவர் அவ்வாறு நடந்து கொண்டமையானது தமிழ் –முஸ்லிம் நல்லுறவில் அசைக்கமுடியாத வடுவை உண்டாக்கி இருக்கின்றது. 
அதுபோலவே, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த தருணத்தில் தமிழ் –முஸ்லிம் புரிந்ணர்வு அடிப்படையில் கிழக்கின் ஆட்சியை அமைப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட 'முதலமைச்சரை விட்டு தருகிறோம், ஆட்சி அமைப்போம் வாருங்கள்' என அழைப்பு விடுத்தது. அந்த அருமையான சந்தர்பங்களை பயன்படுத்தி கிழக்கில் தமிழ் –முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைகளை பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்க முடியும். அந்த உடன்பாட்டின் அடிப்படையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் அடிப்படையிலான கூட்டாச்சியினை உருவாக்கி இருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் தமிழ் -முஸ்லிம் புரிந்துணர்வுக்கான பாரிய பங்களிப்பாக அது அமைந்திருக்கும்.  பொன்னான அந்த வாய்ப்பையும் தூக்கி வீசி எறிந்து விட்ட மு.கா.தலைவர் , மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் வழமை போல மறந்து விட்டு மகிந்தவுடன் இணைந்தார். 
இவ்வாறு வரலாற்றில் நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். தமிழ் –முஸ்லிம் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கான இது போன்ற சந்தர்பங்களில் அதற்கு வேட்டு வைக்கும் வகையிலேயே மு.காங்கிரஸ் தலைவர் நடந்து கொண்டார். அந்தந்த சந்தர்பங்களில் தமக்கும் தனது கட்சிக்கும் அரசியல் ரீதியாக இலாபம் தரக்கூடிய நிலைப்பாடுகளையே மோற்கொன்டரே, தவிர தமிழ் –முஸ்லிம் உறவையும் புரிந்துணர்வையும் முதன்மைப்படுத்தி அவர் நடந்து கொள்ள வில்லை. தமிழ் –முஸ்லிம் மக்களின் பக்கமுள்ள நியாயங்களினதும் நீதியினதும் அடிப்படையில் அவர் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை. தாம் சார்நிருந்த பெரும்பான்மை அரசாங்கங்களை திருப்திப்படுத்தி தமது பதவி நிலைகளை பாதுகாக்கும்  வகையில் மாத்திரமே அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்திருந்தன.
 வரலாறு இவ்வாறு இருக்க, முஸ்லம் மக்களின் பக்கமுள்ள நியாயங்களை பேச வேண்டிய இந்த முக்கியமான தருணத்தில் மெளனம் காப்பது தமிழ் மக்களுடனான புரிந்துணர்வை ஏற்படுத்த போவதில்லை. கடந்த காலங்களை போலவே, மு.காங்கிரஸ் தலைவருக்கும் அவரது கட்சிக்கும் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு உபாயமாகவே அது அமைய முடியும்.
    இந்த தீர்க்கமான தருணத்தில் வட கிழக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளையும் அதன் பின்னணி யதார்த்தங்களையும் பேசியே ஆக வேண்டும். தமிழ் மக்கள் தமக்கு வேண்டியதை கோருவதற்கான உரிமையை கொண்டிருக்கின்றார்கள் என்பது போலவே, முஸ்லிம் மக்களும் நமது அரசியல் கோரிக்கையை முன்வைப்பதற்கான சகல உரிமையையும் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை மறந்து விடக்கூடாது. இதனை மு காங்கிரஸ் தலைவர் இனிமோலாவது புரிந்துகொள்ள வேண்டும். 'புரிந்துணர்வு' என்கின்ற போலியான சந்தர்ப்பவாத அரசியல் கோஷங்களினால் அர்த்தமுள்ள புரிந்துணர்வு எதையும் ஏற்படுத்த முடியாது. ஒவ்வரு சமூகங்களின் பக்கமுள்ள நியாயங்களை பேச வேண்டும், அதற்காக துணை நிற்க வேண்டும், அதுபோலவே அவர்களின் சில கோரிக்கைகள் அடுத்த சமூகங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் இழப்புகளையும்  உரிய நேரத்தில் உரிய முறையில் சுட்டிக்காட்டியாக வேண்டும் .
ஒரு சமூகம் இன்னும் ஒரு சமூகத்தின் முன்னால் சரணடைவதன் மூலமோ அல்லது நமது அரசியல் நியாயங்களை பேச வேண்டிய நேரங்களில் பேசாமல் அடக்கி வாசிப்பதன் மூலமோ சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை கட்டியழுப்ப முடியாது என்பதனை மு .காங்கிரஸ் தலைவர் புரிந்துகொள்ள முடியும்.

2 கருத்துரைகள்:

You are a true genius, my best wishes to shine in the politics, why don't TNA appoint him as CM of combined north and east

சிறந்த பேச்சு...

Post a Comment