October 11, 2017

இலங்கையின் முதல்தர சைக்கிள் ஓட்ட வீரர், என்ற இலக்குடன் பஸ்மில்


– அனஸ் அப்பாஸ் –

கஹட்டோவிட்டையைச் சேர்ந்த முஹம்மத் பஸ்மில் 2011 ஆம் ஆண்டு க.பொ.த சா/தர பரீட்சையுடன் தனது கல்வி வாழ்க்கையை முடித்துக்கொண்ட 22 வயதையுடைய ஒரு சாதாரண இளைஞர்.

சிறு வயது முதலே நண்பர்களுடன் தேசிய அளவில் நடைபெறும் சைக்கிள் ஓட்டப்பந்தயங்களை ஆர்வத்துடன் பார்க்கச் செல்வது அவரது வழமை. பாடசாலைக் கல்வியை அடுத்து, வீடுகளுக்கான தரை ஓடு (Floor Tiles) பதிக்கும் தொழிலை அவர் மேற்கொள்ள ஆரம்பித்தார். அதே நேரத்தில் தன்னிடமிருந்த ஸ்டேண்டர் சைக்கிளை வீதிகளில் ஓடும் பயிற்சியையும் ஒய்வு நேரத்தில் மேற்கொண்டார்.

இந்தப் பயிற்சி, அவரை யக்கலையில் இடம்பெற்ற 150 KM நெடுந்தூர சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பங்கெடுத்த முதல் போட்டியிலேயே 18 ஆவது இடத்தை தட்டிக்கொண்டார் பஸ்மில்.

முஹம்மது முஸம்மில் – பாத்திமா பரீதா தம்பதிகளின் புதல்வரான பஸ்மிலுக்கு, ஆரம்பத்தில் வீட்டிலிருந்து இத்துறையில் அவர் பயிற்சி பெறுவதற்கு அதிருப்தியான சமிக்ஞையே இருந்தாலும், தனது அயராத முயற்சிகளின் விளைவுகள் அந்தக் குடும்பப் பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இனி அவரது பயணமோ தடைகளை உடைத்து வெற்றிப் பாதையில் தொடர் ஊர்வலம் வர ஆரம்பித்தது. இதுவரை 200 இற்கும் மேற்பட்ட போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் என ஒவ்வொரு படித்தரத்திலும் 10 ஆம் இடம் வரையும் அடைவுகளைப் பெற்று சாதனைகளை குவித்திருக்கின்றார்.

சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் தனியாக அல்லது குழுக்களாகவும் பங்குபெறலாம் என்ற ஒரு விதி உண்டு. அந்த வகையிலே இலங்கை போலீஸ் சைக்கிள் ஓட்ட அணி, இலங்கை இராணுவ சைக்கிள் ஓட்ட அணிகளில் இணையும்படி அவரிடம் வேண்டப்பட்டது. இருந்தாலும், அவற்றை விட இலங்கையில் பிரசித்தமான முன்னணி சைக்கிள் ஓட்ட அணி தன்னை வரவேற்கும் காலம் வரும்வரை காத்திருந்தார் பஸ்மில். அவரது எதிர்பார்ப்பு நிதர்சனமானது. ஆம், இலங்கையின் முன்னணி சைக்கிள் ஓட்ட அணியான SLEME அணி பஸ்மிலை தம்முடன் இணையும்படி அழைப்பு விடுத்தது. தற்போது SLEME அணியில் இணைந்து பயிற்சி பெறுகின்றார். இந்தத் தகவலை சைக்கிளை ஓடிக்கொண்டேதான் இப்போது உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் ஸ்டேண்டர் சைக்கிள் ஒட்டத்தில்தான் பலரும் பங்கெடுப்பர். தேசிய அணிகளில் இணைந்தபின்னர் ரேஸிங் சைக்கிள்களில் போட்டிகளில் பங்கெடுப்பர். தற்போது ரேஸிங் சைக்கிளில் போட்டிகளில் பஸ்மில் பங்கெடுக்கின்றார்.

உடல் வலுவைப் பயன்படுத்தி சைக்கிளை பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிச் செல்லும் போட்டிகள் நான்கு வகைப்படும்.

சாலை சைக்கிள் போட்டி (road cycling)
மலைவழி சைக்கிள் போட்டி (moutain cycling)
தடகள சைக்கிளோட்டம் (track cycling)
4 . பி.எம்.எக்ஸ் போட்டி (கடுவெளி சைக்கிள் பந்தய போட்டி (BMX cycling))

இதில் பெரும்பாலான போட்டிகளில் பஸ்மிலுக்கு இப்பொழுது அனுபவம் உண்டு.

அதுமட்டுமன்றி, தேசிய அளவில் பிரம்மாண்டமாக 5 நாட்கள் தொடராக நடைபெறும் இலங்கை ஆகாயப்படை நடாத்தும் “குவன் சவாரி” மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் (SLT) நடாத்தும் 5 நாட்கள் நெடுந்தூர சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இலங்கையின் முதல் தர சைக்கிள் ஓட்ட வீரராக தன்னை உருவாக்குவதே பஸ்மிலின் இலக்கு என்றாலும், உலகத்தரப்படுத்தலில் முதலிடத்திலுள்ள பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எடி மேர்க்ஸ் (Eddy Merckx) இன் சாதனையை முறியடிக்கும் இலக்கை பஸ்மில் நிகழ்த்த முடியுமாக இருந்தால் இனிவரும் பசுமைப் போட்டியாளர்களுக்கும் (Freshers) உலக அரங்கில் சைக்கிலோட்டத்தில் போட்டிபோடும் துணிச்சலை உருவாக்கிய இலங்கையின் முதல் வெற்றியாளர் பஸ்மில் என்ற நாமம் வரலாறு நெடுகிலும் தொடரும்.

2 கருத்துரைகள்:

Good luck Mr Fasmil. Please participate as Srilankan and don't forget to show the patriotism.

Post a Comment