Header Ads



வாக்கு வங்கியைத் தக்கவைக்கும், தீவிர செயற்பாட்டில் மைத்திரி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் ஆரம்பகட்டமாக கட்சியின் தேர்தல் செயற்பாட்டுக்குழுவை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நீண்ட நேரம் மந்திராலோசனையை நடத்திய அவர், தேர்தல் வியூகங்கள் சம்பந்தமாகவும் ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே மேற்படி குழுவை அவர் அமைத்துள்ளார்.

இந்தக் குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, ஜோன் செனவிரத்ன, தயாசிறி ஜயசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சுயாதீனமாகச் செயற்படும் பொது எதிரணி (மஹிந்த அணி) எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கவுள்ளது.

அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, மைத்திரி அணியின் வாக்கு வீதத்தைவிட கூடுதல் வாக்குவீதத்தை பெறவேண்டும் என்பதே மஹிந்த அணியின் இலக்காக இருக்கின்றது.

இந்நிலையில், மஹிந்த அணியின் மேற்படி திட்டம் நிறைவேறுமானால் அது தனது தலைமைத்துவத்துக்குப் பலவீனமாக அமைந்துவிடும் என்பதாலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிநடைபோட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறியாக இருக்கின்றார்.

அதற்காகவே தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தயார்ப்படுத்தல் நடவடிக்கையில் அவர் குதித்துள்ளார்.

No comments

Powered by Blogger.