Header Ads



கண்ணீரிலிருந்து மின்சாரம்

தண்ணீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல், நமது கண்களில் இருந்து  வெளியேறும் கண்ணீரிலும் மின்சக்தியை உருவாக்கும் நுண்ணிய நொதிப்பொருள் உள்ளது. இந்த மூலக்கூறுகள் வினை ஊக்கியாக செயல்படுவதால்  மின்சக்தி உருவாகிறது என்று அயர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். கோழி முட்டையில் உள்ள வெள்ளைக்கருவில் உள்ளது  போன்றே நுண்ணிய நொதிப்பொருள் மூலக்கூறுகள் கண்ணீரிலும் உள்ளது என்கின்றனர்.

 அயர்லாந்தில் உள்ள லிமெரிக் பல்கலைக் கழகத்தில் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்ட ‘அப்லைடு பிசிக்ஸ்’ இதழில் பிரசுரமான ஓர் ஆய்வு  கட்டுரையில் இந்த தகவலை அப்பல்கலையின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உமிழ் நீர், பால் ஆகியவற்றிலும் இந்த நுண்ணிய  நொதிப்பொருளான மூலக்கூறுகள் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  இந்த நொதிப்பொருள், திரவ வடிவிலான ரசாயன மூலக் கூறுகளாக  தனித்துவம் பெற்றிருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவை. இவை மின்சக்தியை உருவாக்கும் திறன் படைத்தவை. அதாவது கண்ணீரில் உள்ள  நுண்ணிய நொதிப் பொருள், குறிப்பிட்ட அழுத்தத்தில் வினை ஊக்கியாக செயல்பட்டு இயந்திர சக்தியை (மின் சக்தியை) உருவாக்கும் தன்மை  பெற்றுள்ளது என்று கூறியுள்ளனர்.

  இந்த ஆய்வில்  நுண்ணிய புரதப் பொருளை திரவ வடிவிலேயே பிலிம்களில் பயன்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் இந்த பிலிம்கள் மீது செயலாக்க  சக்தியை செலுத்தும்போது மின்சக்தி ஏற்படுகிறது. இதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள், கண்ணீரில்  உள்ள நுண்ணிய நொதிப் பொருள் மூலக்கூறுகள் (புரத பொருள்) ஸ்குவாட்ஸ் போன்று மின்சக்தியை உருவாக்கும் திறன் படைத்தது என்று கணிப்புக்கு  வந்துள்ளனர். ஆனால், இந்த புரதப் பொருள் நுண்ணுயிரி மூலக்கூறுகளாக உள்ளன. 

எனவே இவை மருத்துவ ரீதியில் அணுகவேண்டியவை. இந்த புரதப் பொருள் நஞ்சு அல்லாதவை. எனவே இவற்றை பல புது கண்டுபிடிப்புகளுக்கு  பயன்படுத்தலாம் என்றும் ஸ்டாப்லெடன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மனிதர்கள் உடலில் பயன்படுத்தும் மருத்துவ ரீதியிலான புதிய  கண்டுபிடிப்புகளுக்கு இந்த புரதப் பொருளை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து வருகின்றனர். மருந்துகள் உட்கொள்ளும்போதும்,  உட்செலுத்தும்போதும், உடலில் மருந்துகளை கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் தேவைப்படும் மின்சக்தியை இந்த புரதப் பொருள் மூலம்  உருவாக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது தொடக்க நிலைதான் இது தொடர்பாக இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட  வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.