Header Ads



விரைவில் சாட்டையைச் சுழற்ற ஆரம்பிப்போம் - மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத்

வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவின் கையிலே கிடைத்ததும் தேர்தல் ஆணைக்குழு சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்து விடும் என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் கலப்புத் தேர்தல் முறை சட்ட ஏற்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு கிழக்கு ஏறாவூர் அல்முனீறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்த கொண்டு உரையாற்றும்போதே எம்.எம். முஹம்மத் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கலப்புத் தேர்தல் முறையில் உள்ள சில ஏற்பாடுகள் சர்ச்சைக்குரிய விடயங்களாக இருக்கலாம். ஆனாலும் அவை இந்த நாட்டின் ஒரு கோடி 86 இலட்சம் வாக்காளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினால் சட்டமாக்கப்பட்டவையாகும்.

எனவே இது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையாகும்.

தேர்தல் ஆணைக்குழு சட்டத்தை இயற்றுவதில்லை. சட்டத் திருத்தம் செய்வதுமில்லை. தேர்தல் ஆணைக்குழு நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே கவனத்தைச் செலுத்தும்.

அதேவேளை, எல்லை நிர்ணயம் சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள அச்சுப் பிழைகளையும் இன்ன பிற தவறுகளையும் திருத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிக விரைவில் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வர இருக்கின்றன. அவை வெளிவந்ததும் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சாரும்.

இலங்கையில் தொகுதிவாரித் தேர்தல் முறை, வட்டாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை, என்றெல்லாம் இருந்து அதன் பின்னர் 1978ஆம் ஆண்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாறியது.

இது பட்டியல் முறையாகவும் பின்னர் விருப்பத் தேர்வு முறையாகவும், இருந்தது. அது மக்களுக்கு சகிக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டதன் பின்னர், விரும்பத் தேர்வு முறை நீக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கம் நாடெங்கும் உருவானது.

அதன் விளைவாக 2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபை சட்டம் என்ற ஒரு ஏற்பாட்டின் மூலம், வட்டார முறைமூலம் 70 வீதப் பிரதிநிதிகளும் தோல்வியடைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் மூலம் 30 வீதமும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு நடைமுறை இருந்து வந்தது.

இந்த நடைமுறையிலும் முன்னேற்றம் கண்டதாக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி 14ஆம் இலக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.” என்றார்.

No comments

Powered by Blogger.