Header Ads



அரசை தீர்மானிப்பது மக்கள், அரசியலமைப்பை தீர்மானிப்பது பெளத்த பிக்குகளா..?

இலங்கையில் நல்லவையும் நாகரிகமானவையும் நாட்டுக்கு தேவையானவையும் காலத்துக்குக் காலம் நாசமாகிப் போய்விட அசியல்வாதிகள் மாத்திரமின்றி அவர்களால் தூண்டப்படுகின்ற பிக்குமார் சமூகமும் பெரும் பங்காற்றியிருப்பதை வரலாறு கூறும் இப்படியே சந்ததி சந்ததியாக எதிர்கால சுபிட்சத்துக்கான காரியங்களை சுக்கு நூறாக்குவதால் எவருக்கு எக்கதி ஏற்பட்டாலும் நாட்டுக்கு நிர்க்கதி என்பதை கூறாமல் இருக்க முடியாது.

இலங்கையில் அரசியலுக்கு அப்பால் பௌத்த மத அரசியல் பிக்குகள் அரசியல், இனவாத அரசியல், தேசியவாத அரசியல், நீதிமன்ற அரசியல் எனப் பலகூறுகள் காணப்படுவதால் அரசியலால் நியாயமாகவும், நீதியாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள முடியாத இக்கட்டான நிலை முற்றியுள்ளதை சமகால நிலை உணர்த்தி நிற்கிறது. 

பயங்கரவாதிகளின் அல்லது தீவிரவாதிகளின் இராஜதந்திர பலவீனம் காரணமாக முயற்சிகள் படுதோல்வியடைந்தை போதிலும் கூட இலங்கையின் ஒரு பகுதி பறிபோன நிலையில் இருந்ததை மறுப்பதற்கில்லை. இந்த நிலைமை 2009 ஆம் ஆண்டில் தென்னிலங்கைக்கு தேவைப்பட்ட விதத்தில் நிறைவு கண்டதை நாடு அறியும்.

எவ்வாறாயினும் பறிபோக இருந்த நிலைமைக்கு பதிலீடாக தேசிய நல்லிணக்கம் தேவை இல்லை. புதிய அரசியலமைப்பு தேவையில்லை, அதிகாரப் பகிர்வு தேவையில்லை போன்ற தலைப்புகளை பிரதி ஈடுசெய்ய முனைவதும் கூட ஒரு இராஜதந்திரமற்ற செயல் என்று இலங்கையைப் பொறுத்தமட்டில் கூறலாம்.

நாட்டின் சுதந்திரத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் கட்சிகளுக்கும் கூட எழுபது வயதாகி விட்டது. ஆனால் எழுபது ரூபா பெறுமதியான அளவு கூட அசலான தேசிய நல்லிணக்கம் இன்றுவரையில் கண்டடையப்படவில்லை என்பது கனதியான ஆய்வாளர்களின் கருத்தாகும். தேசிய நல்லிணக்கத்துக்கான பாதை திறபடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அதனை ஒன்றில் அரசியல்வாதிகள் மூடிவிடுகிறார்கள்.

இல்லையேல் பௌத்த பிக்குகள் மூடிவிடுகிறார்கள். அந்த வகையில் தேசிய நல்லிணக்கத்துக்கான விலை கட்சி அரசியல் பௌத்த மதம் எனக் கூற முடிகிறது. இந்த நிலையில் மக்களின் கருத்துகளோடு கட்சிகளின் இணக்கப்பாட்டுடனும் மக்கள் தீர்ப்பு மூலமாகவும் முன்னைய மூன்று சந்தர்ப்பங்கள் போன்றல்லாமல் தனக்கு அல்லது தனக்கான புதிய அரசியலமைப்பொன்றை இலங்கை உருவாக்கிக்கொள்ளப் பார்க்கிறது. அதனை அரசியல்வாதிகளின் கதைகளைக் கேட்டு குளப்பியடிக்கப் பார்க்கிறது பௌத்த பிக்குகள் குழு.

உண்மை உதிர்ந்ததா?

அண்மையில் தினேஷ் குணவர்தனவுக்கு பதில் வழங்கிய மல்வத்து பீட மகாநாயக்கர் ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டின் ஒற்றையாட்சி தத்துவம், பௌத்தத்துக்கு முதன்மை ஸ்தானம் ஆகியவற்றை உறுதி மொழியளித்துள்ளனர். மேலும் இரு தலைவர்களும் நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாடு சீர்குலையமாட்டாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்கள்.

தேசத்தின் மீது பற்றுதல் கொண்ட அவ்விருவரும் அவ்வாறு உறுதியளித்திருக்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் வலிதாந்தன்மை தொடர்பில் ஏன் கேள்வி எழ வேண்டும் என்பதே மகாநாயக்க தேரர் தினேஷ் குணவர்தனவிடம் எழுப்பிய வினாவாகும்.

தினேஷ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குழுவினர் வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றிருந்தால் சீர்திருத்தங்கள் தொடர்பில் உத்தேச புதிய அரசியலமைப்பின் ஏதேனும் தீங்கான தீர்மானங்களை எதிர்த்திருக்கலாம் தானே. பண்டார நாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட போது அக்காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதை தினேஷ் குழுவினருக்கு ஞாபகப்படுத்த மகாநாயக்க தேரர் தவறவில்லை.

கூட்டு எதிர்க்கட்சியை போன்ற குழுவினர் அன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நடவடிக்கையை எதிர்த்தனர்.

அதுவே கோரமான யுத்தத்துக்குள் நாட்டைத் தள்ளியது. பெறுமதிமிக்க சொத்துகளை அளித்து அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்குமளவிற்கு மூன்று தசாப்தங்கள் நீடித்தன. அந்த வகையில் மகா நாயக்க தேரர் உள்ளத்தில் எத்தகைய அபிப்பிராயம் கொண்டிருப்பாராயினும் உண்மையை உதிர்த்துள்ளமை பாராட்டுக்குரியதே.

சொற்களால் பதற்றமா? தவறவிடப்படுமா?

உண்மையில் அரசியல்வாதிகள் அதிகாரம், உள்நோக்கம் கொண்டவர்களாக அல்லது பித்துப் பிடித்தவர்களாக இருந்து கொண்டு இடைக்கால அறிக்கையை உத்தேச அரசியலமைப்பு சட்ட வரைபு என்று கூறி பிழையான மனப்பதிவை தோற்றுவித்துக் கொண்டிருப்பார்களாயினும் அது பொய்யானது. விவாதத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள மூன்று நாட்கள் காலப்பகுதியில் உத்தேச அறிக்கையில் அடங்கியுள்ள முன் மொழிவுகளுக்கு புதிய இஷ்டங்களை அல்லது திருத்தங்களை பிரேரிப்பதற்கான அல்லது சேர்த்துக் கொள்வதற்கான பாராளுமன்ற கலந்துரையாடல் பத்திரம் என்றே கூற வேண்டும்.

சொற்களால் பதற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற அரச எதிர்ப்பு சக்திகள் எப்படியும் தேசத்தை திசைதிருப்ப மக்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் பயன்படுத்துகின்றனர். அதற்கு பெரும்பான்மையான பிக்குகளும் விளங்கா மணிமாலைகளாக மாறிவிட்டனர்.

பாராளுமன்றத்தில் கலந்துரையாடலுக்காக அல்லது விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ள இடைக்கால அறிக்கை அதிகார பகிர்வு இல்லாமையிலிருந்து உச்ச அதிகார பகிர்வுக்கு ஆலோசனைகள் முன்வைக்கப்படலாம். உதாரணமாக காணி, பொலிஸ் அதிகாரமற்றதாக 13 ஆவது திருத்தம் உறுதிப்படுத்தப்படலாம்.

காணி பொலிஸ் அதிகாரங்களுடன் 13 ஆவது திருத்தம் உள்வாங்கப்படலாம். அல்லது 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாக அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளவாறாக சமஷ்டி கட்டமைப்புக்கு வித்திடும் வகையில் இரண்டாவது சபை 13 ஆவது திருத்தம் பிளஸ் என்று வரலாம்.

மத்தியில் மூன்று பெரும் சமூகத்தினரிடையே அர்த்தபுஷ்டியானதும், கருத்திற் கொள்ளத்தக்கதுமான பங்கீட்டுடன் சட்டவாக்கல் மற்றும் நிறைவேற்றுத் தத்துவங்கள் சகிதம் மாவட்ட மட்டத்தில் உச்ச அதிகார பகிர்வு ஏற்பாடு கருத்திற் கொள்ளப்பட முடியாததாகும்.

இருபது தலைகளைக் கொண்ட வழிநடத்தல் குழுவில் மூன்று பேருக்கு மேற்பட்டோர் அசலான அதிகாரப்பகிர்வை கொழும்பிலிருந்து நகர்த்துவதற்கு அறவே விரும்பாதவர்கள்.

ஜே.ஆரின் மூல ஆவணம் அவ்வப்போது திருத்தங்களைக் கண்டிருந்தாலும் அதனை முழுமையான முறையில் மாற்றியமைப்பதற்கு அரசியல்வாதிகளும், பௌத்த பிக்குகளும் விடமாட்டார்கள் போல்தான் தெரிகிறது. தென்னிலங்கை புறக்கணிக்கும் வட இலங்கை ஏற்க மறுக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்பணி தேசத்துக்கு தேவைதானா? எனும் கேள்வி ஏழாமலுமில்லை. ஆவணம் தயாரானாலும் அலுவல் நடக்குமா என்கிற எதிரிடையான எண்ணங்களுக்கு மத்தியில், இலங்கையின் நீண்டகால அபிலாஷை தக்கவைத்துக் கொள்ளப்பட முடியாமல் தவறவிட்ட மற்றுமொரு தருணமும் தோன்றலாம்.

எழுதிக்கொடுத்து வாசிக்கப்பட்டதா?

இதேவேளையிலேயே அண்மையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்கள் தலைமையில் மஹாசங்க நிறைவேற்றுக் குழு புதிய அரசியலமைப்பு தேவையில்லை. இருக்கின்ற யாப்பே போதுமானது. ஜனாதிபதி முறை ஒழியக் கூடாது. விரும்பினால் தொகுதிவாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படலாம் எனும் தோரணையில் மகாசங்கம் சார்பில் குரல் கொடுக்கத்தக்க துறவிகள் கூறினர்.

முற்றிலுமாக, அரசுடன் இணைந்திருக்கும் சு.கட்சிக்காரர்கள் மற்றும் பிரிந்து நிற்கும் இனவாதிகள் உள்ளிட்ட சு.கட்சிக்காரர்களின் அபிலாஷைகளை வெளிக் கொணரும் வகையில் எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போன்று மகாசங்க நிறைவேற்றுக் குழு பௌத்த துறவிகள் விளக்கமளித்தனர்.

இத்தகைய நிலைப்பாட்டை விரும்பும் துணைபோகும் நீல அணி முக்கியஸ்தர்கள் சமகாலத்தில் மைத்திரியுடன் இணைத்திருக்காமலுமில்லை. மாகாண சபை முறைமையை எதிர்த்து தேர்தலை பகிஷ்கரித்த நீல அணியினர் அதனை மிகவும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்ட போர்க்கொடி தூக்கிய அவ்வணியினர் அதனை தக்கவைத்துக் கொள்ள முன்மொழிவு செய்துள்ளமையும் விந்தையாகும்.

தப்பித்துக்கொள்ள வெளிநாடு பயணமா?

எவ்வாறாயினும் மல்வத்துபீட மஹாநாயக்கர் நாட்டில் இல்லாத போது அவரது படத்தை பிரசுரித்து அரசியலமைப்பு தேவையில்லை என நிறைவேற்றிய ஏகமனதான தீர்மானத்தை வெளிப்படுத்திய ஊடக நிறுவனங்களை பிரதமர் சாடினார். அவரது சாடல் வேதனையில் வெளிப்பாடாக இருந்திருக்கலாம்.

ஆனால், அதற்கு பதிலளித்த மகாசங்க நிறைவேற்றுக்குழு அதிகாரி சம்பந்தப்பட்ட தீர்மானம், மஹாநாயக்கர்கள் இருவரதும் முழு அனுமதியுடனும் சம்மதத்துடனும் மேற்கொள்ளப்பட்டதாகும் எனத் தெரிவித்துள்ளார். அப்படியானால் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மல்வத்து பீட மஹாநாயக்கதேரர் வெளிநாடு சென்றிருந்தாரோ என்ற பலத்த சந்தேகத்தை பிரதமரின் சாடல் ஏற்படுத்துகிறது.

"மஹா சங்கத்தினரின் தீர்மானத்தை கருத்திற் கொள்ளாமல் உத்தேச யாப்பு முன்கொண்டு செல்லப்படுமானால் விழிப்புணர்வு, தடுத்து நிறுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுதல், அரசு நிராகரித்தால், இறுதித் தீர்மானம் புதிய அரசியலமைப்பிலோ அல்லது அதனை வரைபவர்களிலோ தங்களுக்கு நம்பிக்கையில்லை, நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தயார் போன்ற அம்சங்கள்' அரசாங்கத்துக்குச் சவாலாக அமையலாம்.

62 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அரசியலமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு போன்ற நீண்டகால இலங்கையின் அபிலாஷைகளுக்கு ஆணை வழங்கியுள்ளனர். ஆனால், தூண்டுதல்களின் பேரில் சில மஹாசங்க துறவிகள் ஒன்றிணைந்து மக்கள் ஆணைக்கு எதிராக தீர்மானம் எடுத்துள்ளனர். அப்படியானால் அரசை தீர்மானிப்பது மக்கள் அரசியலமைப்பை தீர்மானிப்பது பௌத்த துறவிகளா? என்கிற கேள்வி எழுகிறது.

இந்தப் பின்னணியில் அரசியல்வாதிகள், ஊடகங்கள் மீது ஜனாதிபதி பிரதமர் ஒன்றிணைந்து இணைப்பாய்ச்சல் மேற்கொண்டுள்ளனர். பத்திரிகைகள் எழுதுவது யாவும் பொய் என்றளவுக்குச் சாடியுள்ளனர். நடக்காததையும் நடக்க முடியாததையும் வகைதொகையற்ற விதத்தில் எழுதித் தள்ளுவது போன்று கொதிப்படைந்துள்ள பிரமையை இரு தலைவர்களிடத்திலும் காணமுடிகிறது.

இதேவேளை இடைக்கால அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கும் தருணத்தில் கூட்டு எதிர்க்கட்சி அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. திட்டமிடலில் மகிந்த ராஜபக்ஷவின் பங்காற்றுகையும் இருந்துள்ளது. உண்மையில் 10 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்த தலைவர் என்ற வகையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைப்பதற்கு பதிலாக அதிகாரத்தை அடைவதற்கான ஒரு முன்னேற்பாட்டு நடவடிக்கை அவரது நடைமுறை அரசியலில் பிரதிபலிப்பது ஒன்றன்று. தப்பபிப்பிராயங்களை வளர்ப்பதிலன்றி நல்லபிப்பிராயங்கள் வளர்வதில் அவரது பங்காற்றுகையிருப்பதே சாலச்சிறந்ததாகும்.

எனவே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தை தீர்மானித்த மக்களுக்கு புதிய அரசியலமைப்பையும் தீர்மானிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். சரியோ பிழையோ பௌத்த துறவிகள் குறுக்கீடு செய்வதோ இடையீடு செய்வதோடு மக்களை குழப்புவதோ நிறுத்தப்பட வேண்டும். அதிகாரத்துக்காகப் போராடுகின்ற அரசியல்வாதிகளுக்கும் இதனை பிக்குமார்களே புரியவைக்க வேண்டும்.

மக்கள் தீர்ப்புக்காக அரசியலமைப்பு ஆவணம் முன்வைக்கப்படுகையில் அதனை எதிர்த்து பிரசாரம் செய்யும் தங்களது உரிமையை எதிர் அணியினர் தக்கவைத்துக் கொள்ளலாம். பதவியில் இருந்த ஜனாதிபதியை தோற்கடித்த மக்களால் புதிய அரசியலமைப்புக்காக பதவியிலுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய சர்வஜன வாக்கெடுப்பை மக்களால் தோற்கடிக்க முடியாது என்பதுமல்ல, மக்களுக்கான சந்தர்ப்பம் மதவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் அன்றி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

1 comment:

  1. 62 லட்சம் வாக்குகளில் 12 லட்சம் முஸ்லிம் வாக்குகளும் 90% சிங்கள வாக்குகளும், நாட்டில் ஒரு ஆட்சிமாற்றத்திற்காக வாக்களித்தனரே தவிர ஒருபோதும் ஒற்றையாட்சி இல்லாமல் போவதற்காக வாக்களிக்கவில்லை. அரசியலமைப்பு மாற்றதிற்கான சர்வஜன வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட வேண்டும் அதன் பின்னர் ஆணை வழங்கியவர்களை பற்றி முடிவு செய்யலாம் சும்மா ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை இதனோடு முடித்துப்போட்டு வெளிநாடு சக்திகளின் தேவைக்கேற்ப அரசியலமைப்பில் கை வைக்க முடியாது

    ReplyDelete

Powered by Blogger.