October 27, 2017

“கம்மல்துறை வரலாறும், வாழ்வியலும்” - நூலாசியர் தாஜுதீனுடனான நேர்காணல்

நீர்கொழும்பில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில், கொச்சிக்கடைக்கு அருகில் உள்ள பலஹத்துறை என அழைக்கப்படும் மிகப் பழைமையான கம்மல்துறை கிராமத்தின் “கம்மல்துறை வரலாறும், வாழ்வியலும்” எனும் முதல் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டாளர் கலாபூஷணம் M.J.M தாஜுதீன் அவர்களுடனான நேர்காணல் இங்கு தரப்படுகின்றது. இந்நேர்காணல் இன்றைய "நவமணி" பத்திரிகையில் பிரசுரமானது.

நேர்காணல் : அனஸ் அப்பாஸ்

உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை வழங்க முடியுமா?

நான் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி பலஹத்துறையில் பிறந்தேன். A.C.M. ஜலால்தீன் – சமூனா உம்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் நான். கற்றது கம்மல்துறை அல்-பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம். 1964 இல் க.பொ.த சாதாரண தர பரீட்சையிலும், 1979 இல் க.பொ.த உயர்தர பரீட்சையிலும் சித்திபெற்றேன். வாசிப்பில் இருந்த மோகத்தால் எனது ஊடகப் பிரவேசம் 1980 இல் நிகழ்ந்தது.

முதலில் “தினபதி” “சிந்தாமணி” பத்திரிகைகளில் கொழும்பு நிருபராக இணைந்தேன். செய்திகளை சேகரிப்பது, தலைப்பு செய்திகளை சேகரிப்பது, கட்டுரைகள் வரைவது, கவிதைகள் மட்டுமன்றி சிறுகதைகள் வரைவது என நான் எழுதிகொண்டே சென்றேன். பின்னர், வெள்ளிதோறும் வெளிவரும் “இஸ்லாமிய பூங்கா” பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

தினபதி நிறுவனம் மூடப்பட்டதும், “தினகரன்” பத்திரிகையின் நீர்கொழும்பு நிருபரானேன். 1995 இல் தினகரனில் “உதவி ஆசிரியராக” நியமனம் பெற்றேன். 1998 இல் ஊடக டிப்ளோமா பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றேன். 55 ஆவது வயதில் தினகரனில் இருந்து ஓய்வு பெற்றேன். இரு வாரங்கள் கழியவும் இல்லை “வீரகேசரி” “மெட்ரோ” பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக நியமனக் கடிதம் வந்தது. அங்கு பணியாற்றும் முதல் வருடத்திலேயே அரசாங்க தகவல் திணைக்களத்தில் இருந்து, அரச உத்தியோகபூர்வ இணையத்தளமான www.news.lk இல் பிரதம ஆசிரியராக நியமண அழைப்பு வந்தது. இங்கு பணியாற்றிய 10 வருடங்களை பொற்காலம் எனலாம். யுத்த கள நிலவர சேகரிப்பு, இராணுவ விவகார செய்தியிடல் என முக்கிய பல அனுபவங்களை அதில் பெற்றேன். இவ்வாறு ஊடகப்பயணம் 35 வருட சேவையை எட்டியது. 2016 ஆம் ஆண்டு ஊடகத்துறைக்கான “கலாபூஷணம்” விருது கிடைத்தது. தற்போது ஓய்வுக் காலம் என்றாலும் ஊடகங்களின் அழைப்புகள் இன்னும் ஓயவில்லை. தற்போது தொழில்சூழலை மறந்து வீட்டு சூழலில் பேரப்பிள்ளைகளுடன் வாழ்கின்றேன்.

கம்மல்துறை வரலாறு நூல் வெளியிடுவதற்கான காரணம் என்ன?

தாய் - தந்தை பெயர் அறியாத பிள்ளை சமூகத்தால் நிச்சயமாக ஒதுக்கப்படுவான். சீரளிக்கப்படுவான். அதுபோன்றே, ஒரு நாடு, ஒரு கிராமம் அதன் பூர்வீக வரலாற்றை தெரிந்திராதபோது ஏனைய சமூகங்கள் அவர்களை ஒதுக்கும், அல்லது நசுக்கும். இதற்கு இன்று உலகில் ஏராளமான உதாரணங்களைப் பார்க்கின்றோம். நான் பிறந்த பலஹத்துறை (கம்மல்துறைக்கு மறுபெயர்) என்னை தாலாட்டி, சீராட்டி வளர்த்தது. அதனால் அதன் மீது எனக்கு பற்று, பாசம் இருக்கின்றது. அதன் பூர்வீகத்தை அறியும் ஆவலும் எழுந்தது. அங்கிருத்து தொடங்கியது தேடல். இருந்தும், எழுத்துமூலமான ஆவங்கள் எதுவும் கிடைக்கவேயில்லை. எனது முயற்சி முற்றுப்பெறவில்லை. 1997 காலப்பகுதியில் வாழ்ந்துவந்த முதியவர்களை அணுகினேன், பழைய நினைவுகளை தூண்டிவிட்டேன், பேசச் சொன்னேன், எனது ஒளிப்பதிவு நாடாவில் பதிந்துகொண்டேன். நினைவாற்றல் உள்ள பலரை சந்தித்ததில் பல விடயங்களை தொகுத்தெடுத்து புத்தகமாக்க அது பெரிதும் உதவியது. 

பல வருட முயற்சியில் 20 முதியவர்களிடம் தகவல் பெற்றேன். கொழும்பு BMICH மண்டபத்தில் அகில உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு – 1985 என நினைக்கின்றேன், அதில் “கம்மல்துறை கிராமம் உருவாகிய வரலாறு” என்ற ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தேன். அங்கு வெளியிடப்பட்ட நூலில் “வரலாறு” பக்கத்தில் அது இடம்பிடித்தமை ஒரு சிறந்த அங்கீகாரம் எனலாம். எமதூரின் முதல் எழுத்துமூலமான ஆவணமும் அதுவே. அதன் தொடர்ச்சியே புத்தகமாக கொண்டுவரும் ஆர்வத்தை என்னில் அதிகரித்தது. இறைவன் எனக்குத் தந்த எழுத்தாற்றலை நான் சிறந்த முறையில் பயன்படுத்தினேன் என்ற திருப்தியை இந்நூல் தந்திருக்கின்றது “அல்ஹம்துலில்லாஹ்”

ஊரில் யாரும் தொடாத ஒரு பகுதியை எனது எழுத்துக்கள் தொட்டிருக்கின்றன. எனது எதிர்பார்ப்பும் நிறைவேறியது. வருங்கால சந்ததிக்காக வரலாற்றை கொடுத்திருக்கின்றேன்.

நூலின் உள்ளடக்கம் குறித்து சற்று கூற முடியுமா?

இன்றைய இளம் சந்ததிக்கே தெரியாத பல விடயங்கள், வாழ்ந்து மரணித்த முதியவர்களின் துணையுடனும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் அமைவிடம், அமைவிட முக்கியத்துவம், ஊரின் பெயர் உருவான வரலாறு, தர்கா உருவான வரலாறு, பலஹத்துறை பத்து என அழைக்கப்படும் கந்தூரி நடைபெற்ற முறைகள், கொடியேற்றம், ஆரம்ப குடிகள் குறித்த ஆய்வு விபரம்,  பள்ளிவாயல் கட்டப்பட்ட வரலாறு, முதல் கதீப், முஅத்தின் விபரம், கேனிமுல்லை குடியேற்றம், பள்ளிவாயல் காணிகள் விபரம், மாயாபஜார் உருவாக்கம் குறித்தும், ஊரின் முன்னேற்றத்திற்கு பங்களித்த சேர். ராசிக் பரீத் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சோனகர் சங்கம், ஆற்றப்பட்ட சேவைகள், கடற்றொழில், கடல் குத்தகை, கடல் கந்தூரி, முற்கால சமூக ஒழுங்கு, ஒய்வு, பொழுதுபோக்கு, இலக்கிய பங்களிப்பு, இஸ்லாமிய நாடக அரங்கேற்றங்கள், ஊரின் முக்கிய அறிஞர்களில் சிலரான அறிஞர் U.M. தாஸிம், மௌலவி M.J.M ரியாழ், அப்துல் ஜவாது ஆலிம், மௌலவி M.A.M. முபாரக், டாக்டர் U.M. நுபார் பாருக், மௌலவி A.R.M. ரூஹுல் ஹக் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய குறிப்புக்கள், குர்ஆன் மத்ரசாக்களின் தோற்றம், அவை நடாத்தப்பட்ட முறை, ஹம்சு சொல்லுதல் எனும் இஸ்லாமிய இலக்கியமுறை, கொச்சிக்கடை ஜமாஅத் – பலஹத்துறை ஜமாஅத் முறுகல், மையவாடிப் பிரச்சினை, பலரும் அறியாத இந்திய வம்சாவளி மயானம், பலஹத்துறை இனக்கலவர விபரம், ஆரம்பகால நிர்வாக சபை உறுப்பினர் விபரம் என பல விடயங்கள் அடங்கியுள்ளன.

நூல் வெளியீட்டில் பங்களித்தவர்கள் குறித்து..

முற்றாக நூலை தொகுத்த பின்னர் கிடப்பில் இருந்த நூலாக்க வேலைகளை உற்சாகமூட்டி, செலவுகள் தொடர்பில் பங்களித்தவர் சவுதியில் இஸ்லாமிய பரப்புரை செய்துவரும் எமதூரை சேர்ந்த முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள். வெளிநாடுகளில் பணிபுரியும் எமதூரைச் சேர்ந்த சர்தார் ஜமீல், M.S.M. முஸம்மில், A. J. உம்முன் தாஹிரா ஆகியோருடன் தனது நிதிப் பங்களிப்பையும் சேர்த்து மௌலவி முஜாஹித் ரஸீன் அனுப்பினார்.

நூல் வெளியீட்டு முழுப் பொறுப்பையும், சகல பொறுப்புக்களையும் “பலஹத்துறை கலை இலக்கிய வட்டம்” ஏற்றதும், அதற்கான செலவுகளை எனது தந்தையின் பெயரில் இயங்கும் “ஜலால்தீன் பவுண்டேஷன்” அனுசரணை வழங்க தயாராகினர். இந்த கூட்டு முயற்சிக்கு பங்களித்த அனைவருக்கும் கம்மல்துறை சார்பில் நான் நன்றி சொல்கின்றேன்,

கம்மல்துறை மண்வாசனை குறித்து சில வரிகளில் சொல்லுங்களேன்.

பலஹத்துறை மக்களின் பேச்சு, நடை, உடை, பாவனை என்பன ஏனைய இடங்களை விட சற்று தனித்துவமானது. “என்ன சேதி” என ஆரம்பித்து அவர்களின் உரையாடல் நகரும். சுற்றிவர சிங்கள மொழி பேசும் மக்களின் தாக்கமும் இருப்பதால் சிங்களம் கலந்தே சொற்கள் அமைந்திருக்கும். உதாரணமாக, பரால, பால்க்க, சல்லி, வாஸி போன்ற சில சொற்களை குறிக்கலாம். மேலும், அரபு மொழி கலந்தும் பேசுகின்றனர். உதாரணமாக, துனியா, ஆகிரா, தவாபு, மலக்குல் மவ்த், அதாபு, தவாபு, பாயிதா, ஹக்கு, ரிஸ்கு, கப்ரு, முசீபத்து இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

அதுபோன்றே, இந்தியர்களும் வாழ்ந்த இடம் என்பதால் செந்தமிழ் சொற்களும் இங்கு உயிர்வாழ்கின்றன. உதாரணமாக, சுடுநீருக்கு பதிலாக வெந்நீர் என்பர், சிறு கோப்பைக்கு “வத்தல்” என்பர். பாத்திரங்களுக்கு “ஏனம்” என்பர், தகவல் என்பதற்கு “தாக்கல்” என்பர்.

கம்மல்துறை மண்வாசனையை இன்னும் நீட்டினால், எலிகோம்ப, கரபட, குசினி, அமெரிக்க மா, பம்பாய் வெங்காயம், மைசூர் பருப்பு, சீனி புளியங்கா, சொளகு, செரட்ட புட்டு, நீத்துப் பெட்டி, அப்பிள் பலத்துக்கு “அப்பக்கா”, கடலை பொறுத்தவரை மணல் திட்டிற்கு “வித்தன்”, வாங்கல், பிலாகொட்ட பூச்சி, மாலையில் பிடிக்கும் மீன் “மயக்கத்து மீன்” என நீள்கின்றது. இவை அண்மையில் உள்ள நீர்கொழும்பு நகரவாசிகளை விட இக்கிராமவாசிகள் தனித்துவமானவர்கள் என்பதை காட்டி நிற்கின்றது.

கம்மல்துறையின் பொக்கிஷங்கள் குறித்து சுருக்கமாக கூற முடியுமா?

கிழக்காசியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக போற்றப்படும் U.L.M. தாஸிம் (நத்வி) (அல்-அஸ்ஹரி) அவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவரே. ஊருக்கு மட்டுமன்றி தேசிய ரீதியிலும் இவர் ஆன்மீகப் பணி, பொதுப்பணி என்பவற்றில் முதன்மையானவர். ஜாமிஆ நளீமிய்யாவின் ஆரம்ப அதிபராக பணியாற்றி அவர் உருவாக்கிய புத்திஜீவிகளை இதற்கு சான்றாகக் கூறலாம். அதேபோன்றே மௌலவி ரியாழ் அவர்களின் தியாகம், ஜமிய்யதுல் உலமா என்றாலே ரியாழ் மௌலவி என்று பேசப்பட்ட காலம் இருந்தது. உலமாக்களுக்கு சிறந்த உதாரண புருஷராக இன்றும் போற்றப்படுகின்றார். அதேபோன்று பள்ளி நிர்வாகங்களில் பணிபுரிந்த இன்னும் பலரை கம்மல்துறையின் போக்கிஷங்களாகக் கூறலாம்.

உங்களின் எதிர்பார்ப்புக்கள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து..

இந்த வரலாற்று நூல் வெளியானதன் பின்னர் “பலஹத்துறை கலை இலக்கிய வட்டம்” குழு ஒத்துழைப்புடன் கலைஞர்களை, கவிஞர்களை ஊக்குவிக்க எண்ணியுள்ளேன். ஊரின் பழங் கவிகளைத் திரட்டி நூலாக்க ஆசை உள்ளது. குறைந்தபட்சம் மூன்று  மாதத்திற்கொருமுறை சஞ்சிகை ஒன்று ஊரில் வெளிவர ஆவண செய்ய வேண்டும். தேசத்திற்கு பயன்தரும் நிறைய நூல்களை வெளியிட ஆசை உள்ளது, இந்த மண்ணிலிருந்து அவை உதயமாக வேண்டும். சகல வசதிகளுடனுமான பொது நூலகம் ஒன்று இவ்வூரில் அமைய வேண்டும். தனி அமைப்புக்களின் பரிபாலனைக்கு சென்றால், மழைக்கு முளைத்த காளான்களாய் அந்த நூலகம் காணாமல் செல்லும்நிலை ஏற்படும் என்ற அச்சம் எனக்கு உள்ளது. அரச அனுசரணையில் ஊர் அமைப்புக்களின் அபிவிருத்தி சார் ஒத்துழைப்புடன் அது பயணிக்க வேண்டும். அரச சம்பளத்துடன் ஒரு முழுநேர ஊழியர் அந்த பொது நூலகத்தை பரிபாலிக்க வேண்டும். இவை அனைத்தும் நனவாக என்னால் முடிந்தவற்றை செய்ய தயாராக உள்ளேன்.

0 கருத்துரைகள்:

Post a Comment