October 13, 2017

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் என்னாவது? சந்தேகத்துடன் நோக்கப்படும் ஹமாஸ் - பத்தா உடன்பாடு


பலஸ்தீனத்தின் போட்டி அமைப்புகளான ஹமாஸ் மற்றும் பத்தாவுக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் மத்தியஸ்தத்தில் அந்நாட்டு தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தையை அடுத்தே நேற்று இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான உடன்படிக்கை விபரம் நேற்று பின்னேரம் கெய்ரோவில் இடம்பெறவிருந்த செய்தியாளர் மாநாட்டில் வைத்து வெளியிடப்படவிருந்தது. இது பற்றிய பேச்சுவார்த்தை கெய்ரோவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இடம்பெற்றது.

இந்நிலையில் பலஸ்தீன தலைவர் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஒற்றமை முயற்சியாக ஒரு மாத காலத்திற்குள் காசாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று பத்தா அமைப்பின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு தசாப்தத்தில் காசாவுக்கான அப்பாஸின் முதல் விஜயமாக இது இருக்கும்.

அதேபோன்று ஹமாஸ் கட்டுப்பாட்டு காசா மீது அப்பாஸ் முன்னெடுத்திருக்கும் தடைகளும் விரைவில் அகற்றப்படும் என்று அந்த பத்தா அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியானின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “எகிப்தின் அனுசரணையில் பத்தா மற்றும் ஹமாஸுக்கு இடையில் இன்று (நேற்று) உடன்பாடு எட்டப்பட்டது” என்று குறிப்பிட்டபோதும் அது பற்றி மேலதிக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த உடன்படிக்கையின்படி, காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரபா எல்லை, மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பத்தா ஆதிக்கம் செலுத்தும் பலஸ்தீன அதிகார சபையின் கீழ் வரவிருப்பதாக பேச்சுவார்த்தை தரப்புகள் ஊடக தெரியவருகிறது.


ஐக்கிய அரசு ஒன்றை அமைக்க அனைத்து பலஸ்தீன தரப்புகளும் அடுத்த இரண்டு வாரங்களில் பரந்த பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு மாதத்திற்கு குறைவான காலத்தில் அப்பாஸ் காசாவில் இருப்பார்” என்று காசா பகுதியின் சிரேஷ் பத்தா தலைவர் ஒருவரான சக்கரியா இல் அகா குறிப்பிட்டார்.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அப்பாஸ் அண்மையில் மேற்கொண்ட மிக முக்கிய நடவடிக்கையாக காசாவின் மின்சார கொடுப்பனவுகளை குறைத்தார். இதனால் அந்த பகுதிக்கு நாளொன்றுக்கு சில மணி நேரமே மின்சாரம் கிடைக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

“அண்மையில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் முடிவுக்கு வரும்” என்று அகா உறுதி அளித்தார். 2007 ஆம் ஆண்டு சிவில் யுத்தம் என்று வர்ணிக்கும் அளவுக்கு இடம்பெற்ற மோதல் ஒன்றுக்கு பின்னர் பத்தாவிடம் இருந்து காசாவின் அதிகாரத்தை ஹமாஸ் கைப்பற்றியது. அது தொடக்கம் இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நீடித்து வந்தது. முந்தைய பல சமரச முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

மறுபுறம் காசாவின் எல்லையை ஒட்டி இருக்கும் தனது சினாய் தீபகற்பத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் எகிப்து அதிக தீவிரம் காட்டுகிறது. இந்த பகுதியில் எகிப்து இராணுவத்திற்கு எதிராக ஜிஹாத் போராளிகள் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சமரச பேச்சுவார்த்தையை எகிப்து உளவுப் பிரிவு தலைவர் காலித் பவ்சி, நெருக்கமாக அவதானித்து வருவதாக எகிப்து வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் ஆயுத பிரிவு

காசாவின் சிவில் அதிகாரத்தை பலஸ்தீன அதிகார சபைக்கு விட்டுக்கொடுக்க ஹமாஸ் கடந்த மாதம் இணங்கியது. எனினும் அந்த அமைப்பின் பலம்மிக்க ஆயுதப் பிரிவின் எதிர்காலம் பற்றிய விடயம் இரு தரப்புக்கும் இடையில் இழுபறிக்கு உள்ளான ஒன்றாக காணப்படுகிறது.

இஸ்லாமிய அமைப்பான ஹமாஸை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தனது தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளது.

இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசா பெரும் மனிதாபிமாக அவலத்தை எதிர்கொண்டிருந்தபோதும் 2008 தொடக்கம் இந்த பகுதி இஸ்ரேலுடன் மூன்று கொடூர யுத்தங்களை சந்தித்துள்ளது.

எனினும் மோசமடைந்திருக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் கடுமையான மின்சார தட்டுப்பாட்டால் நெருக்கடியை சந்திக்கும் ஹமாஸ் எகிப்தின் உதவியை நாடியுள்ளது. இதன்மூலம் எகிப்துக்கான ரபா எல்லையை திறக்க ஹமாஸ் எதிர்பார்த்துள்ளது.

இந்த எல்லைக்கடவை அண்மைய ஆண்டுகளில் பெரும்பாலும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதில் காசா பகுதிக்கான மின்சார உற்பத்திக்கு எரிபொருள் வழங்கவும் எகிப்து இணங்கியது.

இதற்கு பதிலாக தனது போட்டி அமைப்பான பத்தாவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் முந்தைய பல சமரச முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. இந்நிலையில் தற்போதைய சமரச உடன்படிக்கை குறித்து சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகிறது.

பலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் ரமி ஹம்தல்லாஹ் கடந்த வாரம் 2015 க்கு பின் முதல்முறை காசாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவரது அமைச்சரவை அதிகாரிகள் அங்குள்ள அரச திணைக்களங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் இந்த நகர்வுகள் ஓர் அடையாள நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எகிப்து, இஸ்ரேல் மற்றும் மத்தியதரைக் கடலை எல்லைகளாகக் கொண்ட இரண்டு மில்லியன் மக்கள் வாழும் காசாவில் ஹமாஸ் அமைப்பே தொடர்ந்தும் ஆதிக்க சக்தியாக உள்ளது.

குறிப்பாக ஹமாஸில் 25,000 போராளிகள் உள்ள அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையின் எதிர்காலமே பெரும் கேள்வியாக உள்ளது.

இந்த சமரசர உடன்படிக்கை சர்வதேச முயற்சியில் இடம்பெறும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தையையும் குழப்பும் ஒன்றாக உள்ளது. ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

Post a Comment