Header Ads



சிவாஜிலிங்கத்தின் பச்சை துரோகத்தை, தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள்

"தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்குள் ஜனாதிபதி வருவார், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் என்பது திட்டமிட்டு நடைபெற்ற ஒரு விடயம், ஜனாதிபதி வருவதற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடயம் கூறப்பட்டிருந்தது" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்...

"கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அந்த போராட்டத்தை குழப்பும் வகையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆளுநரை சந்தித்தார். தொடர்ந்து சனிக்கிழமை ஜனாதிபதி வருகையின்போது ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும்போது ஜனாதிபதி அந்த வழியால் வருவார், போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுடன் பேசுவார் என்பது முன்னதாகவே தெரிந்திருந்தது.

அது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கூறப்பட்டும் இருந்தது. அப்போது நாங்கள் கூறியது, ஜனாதிபதியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை, ஏற்கனவே அரசின் பங்காளி கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மேற்படி அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் மற்றொரு பங்காளியான அமைச்சர் மனோகணேசன் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பாக பேசியிருக்கின்றார். எனவே ஜனாதிபதிக்கு இந்த அரசியல் கைதிகளின் வழக்கு மாற்றப்பட்ட விடயம் நன்றாகவே தெரியும். எனவே ஜனாதிபதிக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என கூறினோம்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி வந்தார். முன்னர் கூறியதைபோல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்தார். அப்போது முதலில் ஓடி சென்று பேசியவர் எம்.கே.சிவாஜிலிங்கம் மட்டுமே. இந்த சிவாஜிலிங்கம் அரசியல் கைதிகளின் குடும்பங்களை பயன்படுத்தி பொய் வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் கைதிகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கிறார். அதன் ஊடாக அரசாங்கத்துக்கு துணைபோகிறார். எனவே தன்னுடைய நலனுக்காக இவ்வாறு செயற்படும் சிவாஜிலிங்கத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும். இல்லையேல் அவர் செய்யும் பச்சை துரோகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்". 

No comments

Powered by Blogger.