October 02, 2017

உலகில் உள்ள நாடற்றவர்களில் 7 பேரில் ஒருவர் ரோஹிங்கியர்கள்

– நேசன் –

உலகில் உள்ள நாடற்றவர்களில் ஏழு பேரில் ஒருவர் ரோஹிங்கியர்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுவதன்படி, உலகின் நாடற்றவர்கள் தொகையில் ரோஹிங்கியர்களே அதிகமானவர்கள். 2014 இன் கணிப்பின்படி 1.3 மில்லியன் ரோஹிங்கியர்கள் மியன்மாரிலும், 01 மில்லியின் ரோஹிங்கியர்கள் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா, இந்தோனேஷியா, சவூதி அரேபியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

1948 சுதந்திரத்தின் போது அரகான் மாநிலத்தில் வாழ்ந்த மக்களை ரோஹிங்கிய இனமாக அங்கீகரிக்கக் கோரி அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் கப்பார் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே ரோஹிங்கியர்கள் என்ற ஒரு இனம் மியன்மாரிலே இல்லை என்றும், 1824 இலே ஆங்கிலேயர்கள் பர்மாவை ஆக்கிரமித்த போது, பங்களாதேஷில் இருந்து கூலிகளாகக் கொண்டுவரப்பட்டவர்களே இவர்கள். ஆகவே இவர்கள் மியன்மார் பிரஜைகள் அல்ல எனவும் இவர்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்கான வாதங்களாக முன்வைக்கப்படுகின்றன.

ரோஹிங்கிய மக்களில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள், 07-08 ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கு குடியேறியவர்கள் என்பதையும், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் ஒரு பிரதேசமாக, நரமீஹ்லா சுலைமான் ஷாஹ்வின் தலைமையில் அரக்கான் ஆட்சி செய்யப்பட்டது என்பதையும், பர்மாவின் முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினரான ஸூரா பேகம் உட்பட 05 ரோஹிங்கியர்கள் 1951 பாராளுமன்றத்தில் அங்கம் வகித்ததையும் முற்றாகவே இருட்டடிப்புச் செய்து விட்டுத் தான் இவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வலுவான வாதம், அதிகாரவர்க்கத்தின் வசதிக்காக மறக்கடிக்கப்பட்டுள்ளது.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகருகின்ற உலகின் அதிகார பலம், அமைதியாக இருக்கின்ற ஆசியப் பிராந்தியத்தை தனது பலப்பரீட்சைக்கான ஆடுகளமாக மாற்றிவருகின்றதன் அடையாளங்களே தற்பொழுது வெளித்தெரியத் தொடங்கியிருக்கின்றன. பிராந்தியத்தின் வல்லரசுப் போட்டியில் கயிறிழுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க சார்பு இந்தியாவும் கம்யூனிஸ சீனாவும் தத்தமது மேலாதிக்கத்தை இந்தப் பிராந்தியத்தில் நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் விஜயத்தின் பின்னர் கிழிக்கப்பட்ட அமெரிக்க-இஸ்ரேல்-இந்திய இணைகோட்டுக்குப் பின்னர், பிராந்தியத்தில் இந்தியாவின் வல்லாதிக்கத்தை மேம்படுத்தும் முயற்சிகள் பலம் பெற்றிருக்கின்றன. இந்தப் பலப்பரீட்சையின் ஆடுகளமாகவே ரோஹிங்க்யா மாறியிருக்கிறது.

1824 ஆங்கிலேய ஆதிக்கத்தின் பின்னர் கிழக்கிந்தியக் கம்பனியால் கொண்டு வந்து குவிக்கப்பட்ட இந்தியர்களால் பர்மா மக்களின் சுதேசியம் அற்றுப் போவதற்கு எதிராக இளம் சட்டத்தரணி ஆங்சாங் போராட்டம் நடத்தினார். அவருடைய இந்திய எதிர்ப்பு மனப்பான்மையின் தொடராகவே அவரது மகள் ஆங்சாங் சூகியின் சீனசார்பு நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. 1962 இலிருந்து மிலிடரி ஜுன்டாக்களே மியன்மாரில் ஆட்சி நடத்திவருகின்றனர். ரோஹிங்கியர்கள் மீதான இனச் சுத்திகரிப்புக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி மியன்மாருக்கு விஜயம் செய்து, முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மியன்மார் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டியதுடன், இந்த நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்தைச் சார்ந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆளுகின்ற மிலிடரி ஜுன்டாக்களும் அதிகாரமில்லாத தலைவி ஆங்சாங் சூகியும் வேறுவேறு தரப்புகளாக இருந்து நல்லாட்சி நடத்தும் நிலை தான் மியன்மாரிலே நிலவுகிறது.

இந்த வகையில் வளங்கள் நிறைந்த ரக்கெய்ன் மாநிலத்தை யார் அனுபவிப்பது என்பதில் பிராந்திய வல்லரசுகளுக்கிடையே நடக்கின்ற போட்டிதான் மனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைத்து வருகிறது. தமது ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்காக எத்தனை உயிர்களையும் மிருகத்தனமாகப் பலியெடுப்பதற்கு தயங்காதவர்கள் இவர்கள் என்பதற்கு கடந்த கால வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. ஆட்சிக்கெதிராக 1989 இல் தியனென்மன் சதுக்கத்தில் கிளர்ந்தெழுந்த பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 300 க்கும் 1000 க்கும் இடைப்பட்டோரை புல்டோசர் மூலம் அரைத்துக் கொன்ற வரலாறு சீனாவுக்கு இருக்கிறது. அதேபோல 2002 இல் 1000 க்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களை தீயிலிட்டுக் கருக வைத்த சம்பவத்தின் போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் இந்தியாவுக்கும் அதிகாரத்துக்காக மனிதப்படுகொலை புரிவது புதிய அனுபவமல்ல.

அண்மைய டொக்லம் உடன்பாட்டைத் தவிர, இந்தக் கீரியையும் பாம்பையும் ஒரே இடத்தில் வளர்க்கும் எந்த மண்ணுக்கும் இந்த நிலைமை வரும் என்பதைத் தான் ரோஹிங்க்யா உணர்த்துகிறது. இனச்சுத்திகரிப்புக்கான பாடப்புத்தக உதாரணமாக ரோஹிங்க்ய அவலத்தை ஸெய்யித் அல் ஹுஸைன் குறிப்பிட்டது போல, இன்னும் பல பாடப்புத்தக உதாரணங்களை இந்தச் சம்பவங்கள் இதுபோன்ற நாடுகளுக்கு எடுத்துக் காட்டுகின்றன.

கிழக்குலகில் மேலோங்கியிருக்கின்ற மதவாதத்தை தூண்டிவிட்டு அதில் அதிகாரக் குளிர்காய்வது என்பது இந்தப் பாடப்புத்தகத்திலுள்ள முக்கிய உதாரணம். ரோஹிங்க்யர்களில் ஆறு இனக் குழுமங்கள் இருந்தாலும், ரக்கெய்னில் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம்களுக்கும், மியன்மாரில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினையாகவே இந்தப் புவிஅரசியல் பிரச்சினையைக் காட்ட முயற்சிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இலங்கையருக்கு மத்தியில் இந்தப் பருப்பு வேகவில்லை.

அடுத்ததாக, தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வந்தவர்களையே எதிரியாகச் சித்திரித்து தமது அக்கிரமத்தை நியாயப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள். 1947-48 களில் ரோஹிங்யர்களின் இன உரிமையை நிலைநாட்டுவதற்காக போராடிய முஜாஹிதீன்கள் குழுவினர் 1955 இல் அடக்கப்பட்டதில் இருந்து ரோஹிங்ய மக்கள் இனவன்முறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவென அண்மையில் உருவாகிய ARSA அமைப்பு தமது நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர்களை அழித்தொழிப்பதற்கே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் மிலிடரி ஜுன்டாக்கள் காரணம் கற்பித்தனர். இந்த ”நியாயமே” இலங்கையிலுள்ள ஊடகங்களுக்கும் பேசுபொருளாக அமைந்தது கவனிக்கத்தக்கது. அடிமேல் அடி விழுகின்ற போதும் தமது இனத்துக்கென்று ஆர்ப்பரித்துக் கொண்டு முன்னே செல்லுகின்ற முன்ரோஷக் குழுக்களுக்கு இதுவொரு பாடப்புத்தக உதாரணமாக அமைகிறது.

அகிம்சைக்கு முற்றிலும் மாற்றமான வகையில் அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தின் பின்னால் இருந்து செயற்பட்டது 969 இயக்கத்தின் பௌத்த தலைவர் அசின் விராது என்பது உலகம் அறிந்த உண்மை. இருந்த போதிலும், இந்தப் பயங்கரவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, அவரைத் தேடிப் படை எடுக்கவோ அல்லது அவரால் பாதிப்புக்குள்ளாகின்ற மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு அமைதிப்படை அனுப்பவோ எந்த உலக அமைப்புக்களும் முன்வரவில்லை. பயங்கரவாதம், பயங்கரவாதி, அப்பாவி மக்கள் என்பதெல்லாம் அவரவர் வசதிக்கேற்ப செய்து கொள்ளப்படும் கற்பிதங்கள் தான் என்பதற்கு ரோஹிங்க்யா நல்லதொரு பாடப்புத்தக உதாரணம்.

கீரியையும் பாம்பையும் ஊட்டி வளர்க்கின்ற இலங்கைச் சரணாலயத்தின் மக்களுக்கும் இதில் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. நாட்டிலே தற்போது விதைக்கப்பட்டு வருகின்ற பகைமை உணர்வுகள் மனிதத் தன்மையை குழிதோண்டிப் புதைக்கும் அளவுக்கு வளர விடாமல் சகல இனங்களும் கவனம் செலுத்த வேண்டும். வெளிச்சக்திகளின் தேவைக்காக நாட்டிலே அடாவடித்தனம் புரிவதைத் தவிர்த்து சகல இனங்களையும் இணைத்து நாட்டை வளப்படுத்துகின்ற முறைமை பற்றியே நமது அவதானம் இருக்க வேண்டும்.

கடலிலே தத்தளித்த ரோஹிங்யர்களை காப்பாற்றிக் கரைசேர்த்து உரியவர்களிடம் ஒப்படைக்கின்ற பணியை 2008 ஆம் ஆண்டிலிருந்து நமது கடற்படை செய்து வருகின்றது. கடற்படையின் இந்த மனிதாபிமான உணர்வு தான் இன்று நாட்டுக்குத் தேவைப்படுகிறது. ரோஹிங்யர்களின் பிரச்சினையையும் அப்போது தான் நமக்கு மனிதாபிமானப் பிரச்சினையாகப் பார்க்க முடிகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment