October 08, 2017

5 ஆம் ஆணடு, புலமைப் பரிசில் என்ற மாயை

−சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்−

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் 5 ம் ஆண்டு புலமைப் பரீட்சை பெரும்பாலானோா் முக்கியத்துவம் கொடுக்கும் ஒன்றாக அமைந்து உள்ளது.பரீட்சை எழுதும் மாணவர்களை விட பெற்றோர்களுக்கு அழுத்தமும் ஆர்வமும் கூடுதலாக இருப்பதால் "பெற்றோரின் பரீட்சை" என்று பரவலாக விபரிக்கப்படுகின்றது.

இப்பரீட்சைக்கு நீண்ட சரித்திரம் உள்ளது.இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் C W W கன்னங்கார அவர்களினால் 1943- 47 காலப்பகுதிகளில் நாடளாவ ரீதியில் 54 மத்திய மகா வித்தியாலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன.இப்பாடசாலைகளை குறிவைத்து கிராமப் புற மாணவர்களுக்கு நகர்ப்புற வசதிகூடிய பாடசாலைகளில் படிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பரீட்சையே இந்த புலமைப்பரிசில் பரீட்சை.அன்று இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு விடுதி வசதியுடன் சிறந்த பாடசாலைகள் வழங்கப்பட்டன.மாணவர்களுக்கு குளிப்பதற்கு சோப் கூட இலவசமாக அன்று  வழஙகப்பட்டதாம்.ஆனால் காலத்துக்கு காலம் வரும் கல்விக் கொள்கை மாற்றங்களால் இன்று இலவச சீருடைக்குப் பதிலாக பண வவுச்சர்கள் வழங்கப்படுவதுபோல் விடுதியுடன் வழங்கும் ஏனைய உதவிகளுக்குப் பதிலாக பணம் வழங்கும் முறை அமுலானது.அன்று வழங்கிய புலமைப் பரிசிலின் பெறுமதி இன்றைய கால கட்டத்துடன் ஒப்பிட்டால் மாதாந்தம் ரூபா 10000/ இற்கும் மேற்பட்டது.ஆனால் இன்று மாணவர்களுக்கு வழங்கும் நிதியுதவியோ மிகவும் சொற்பமானது.இதே நிலைதான் சீருடைக்கு வழங்கப்படும் வவுச்சருக்கும் காலம் செல்லும் போது நடக்கக்கூடும்.

இன்று 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் என்றும் சித்தியடையாத மாணவர்கள் என்றும் பரீட்சை பெறுபேற்றுக்குப் பின்னர் வகைப்படுத்தப்படுகின்றனர்.உண்மையில் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கத்தகுதி பெற்றவர்களே சித்தியடைந்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.O/L அல்லது A/L பரீட்சையில் 75 புள்ளிகளுக்கு மேல் எடுப்பவர்கள் A தரம் பெற்றவர்கள்.ஆனால் 5ம் தரத்தில் 75 புள்ளிகளுக்கு மேல் எடுத்தாலும் மாவட்ட வெட்டுப்புள்ளியை சராசரி தாண்டவில்லை எனில் சித்தியடையாதவர் என அழைக்கப்படுவது விந்தையானதே.


அது ஒரு புறமிருக்க அரசும் ,பாடசாலைகளும் ,ஏனையோரும்   வெட்டுப்புள்ளியை தாணடியவர்களை மட்டும் பாராட்டுவது ஏனைய மாணவர்களின் உளநிலையைப் பாரியளவில் பாதிக்கின்றது.அரசினால் இப்புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அதன் காரணமாக நல்ல புள்ளிகளைப் பெற்றாலும் பரீட்சை தோல்வி என்று தற்கொலை செய்யும் நிலைக்குக் கூட சிறார்களை இட்டுச் செல்வது கவலைக்குரியது.இக்கட்டுரையை எழுதும் போது நுவரஎளிய மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சோகமான செய்தி கிடைத்தது கவலைக்குரியது.இன்னும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.மாணவரகளின் உள்ளங்களில்  இவ்வாறான பாதிப்புக்களை உருவாக்க  பிரதான காரணமாக  பெற்றோர்களும் சில வேளைகளில் இருக்கின்றனர்.பரீட்சையில் குறைவான புள்ளிகளை பெறும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை கடுமையாக தண்டிக்கின்றனர்.ஆனால் செய்ய வேண்டிய விடயம் அவர்களை ஆறுதல் படுத்துவதே.

மாணவர்களின் எதிர்காலத்தில் நிதியுதவியையும் வேறு நகர்ப்புற பாடசாலையையும் பெற்றுக் கொள்ள உதவும் இப்பரீட்சையின் நோக்கம் இன்று திசை மாறியுள்ளது.பெரும்பாலான மாணவர்களுக்கோ பெற்றோருக்கோ இதன் பலாபலன்களை பற்றிய அறிவு இல்லை.அதைப் பற்றிய விளக்கமும் பாடசாலைகளில் மாணவர்களுக்கோ பெற்றோருக்கோ வழங்கப்படுவதுமில்லை.பெற்றோரும் பிள்ளைகளை எவ்வாறாவது சித்தியடையச் செய்யவேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதேயன்றி அனுகூலம் பிரதிகூலம் பற்றி சிந்திப்பதில்லை.

அதே போல் தங்களது பாடசாலையில் சித்தியடைந்த எண்ணிக்கையை வைத்து பெருமை கொள்ளும் பாடசாலைகள் O/L,A/L பெறு பேறுகளில் மெளனம் காக்கின்றன.

புலமைப் பரிசில் நிதியுதவி பெறும் ஒரு மாணவனுக்கு வருடத்துக்கு அரசு வழங்கும் நிதியுதவி வெறுமனே ரூ.5000/- மட்டுமே.உயர்தரம் பூர்த்தியாகும் வரை 7 வருடங்களுக்கு மொத்தமாக இன்றைய கொடுப்பனவுபடி கிடைப்பது ரூ35,000/-மட்டுமே.ஆனால்  பரீட்சைக்குத் தயாராகுவதற்கு மாணவர் ஒருவருக்கு புத்தகம் என்றும்,டியூசன் என்றும்,கருத்தரங்கு என்றும் ஏறக்குறைய 50000/− செலவாகிவிடும். எனவே இன்று நிதியுதவியை எதிர்பார்த்து இப்பரீட்சைக்கு தயாராகுவது முட்டாள்தனமான செயல்.நகர்ப்புற சிறந்த பாடசாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை சேர்க்க நாடும் பெற்றோர் பிள்ளைகளை தயார் படுத்துவது மட்டுமே பொருத்தமானது.அது பொருளாதார வசதி குறைநதவர்களுக்கு எட்டாக்கனி.

எனவே 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்ற மாயையிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும்.இப்பரீட்சையில் தோற்றி தமது பிள்ளைகளிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை பெற்றோர்கள் புரிந்திருக்க வேண்டும்.ஆகவே இந்த விடயத்தில் பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூகத்தில் தெளிவூட்டலை மேற்கொள்ளல் வேண்டும்.அதன் மூலம் இந்த மாயையிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும்

3 கருத்துரைகள்:

This is a utter useless examination...as a whole it will downgrade the standard of students in future

But students wo really need financial help but can study get benefit from this rite

Scholarships has to be given for students for kids whose parents are having hard time paying their school feel not for everyone.

Post a Comment