Header Ads



25 UNP எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐ.தே.க. எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் 25 ஐ.தே.க. எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசு மேலும் பிற்போடவுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ஐ.தே.க. வின் 25 எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம், தேர்தல் ஒத்திவைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர். 

உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தாது ஒத்திவைக்கப்படுவதன் மூலம், தேர்தலை சந்திக்க அரசு தரப்பினர் அஞ்சுவதாக பொது எதிரணியினர் மக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருவதாகவும் இது அவர்களுக்கு சாதகமாக அமைவதுபோல் தென்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

தான் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதை விரும்பவில்லையெனவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் வெகுவிரைவில் நடத்துவதற்கு தான் விரும்புவதாகவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், தேர்தலுக்கு முன்னர், தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கவேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில், தான் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கேட்கவில்லையெனவும் அவர் தானாகவே பதவி விலகியதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். 

இந்தச் சந்திப்பில் ரவி கருணாநாயக்க, ஆசு மாரசிங்க, கேக்க அப்புகாமி, முஜிபுர் ரஹ்மான் , ஜே.சி. அலவத்து வெலே, சமந்த கமகே, வடிவேல் சுரேஷ், சமிந்த விஜேய சிறி உட்பட  25 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.