Header Ads



18 வயதுக்கு மேற்பட்ட சகலரும், வரி செலுத்த வேண்டும் - பிடி இறுகுகிறது

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு வரிப் பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரியை இரட்டிப்பாக்கும் புதிய திட்டத்துக்கமைய இந்த நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நடுன் குருகே,

“18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றிய விபரங்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பேணவுள்ளது. அவர்களின் வங்கி பரிமாற்றங்கள், கொள்வனவுகள், கொடுப்பனவுகள் கண்காணிப்படவுள்ளன.

இதற்காக, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், வங்கிகள், ஆட்பதிவுத் திணைக்களம், கடன் தகவல் பிரிவு, முதலீட்டுச் சபை உள்ளிட்ட 35இற்கு மேற்பட்ட அரச நிறுவனங்களுடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இந்தக் கண்காணிப்புப் பொறிமுறைக்கு தேசிய அடையாள அட்டை இலக்கம், பெயர் மற்றும் முகவரி என்பன முக்கிய தகவலாகப் பயன்படுத்தப்படும்.

இந்த கண்காணிப்பு பொறிமுறையின் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு, தாமாக முன்வந்து வருமான வரி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு தகவல்கள் பரிமாறப்படும்.

தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் வரி வருமானத்தில், 80 வீதம் மறைமுக வரிகள் மூலமே கிடைக்கின்றன. இதனை 2020ஆம் ஆண்டில், 60 வீதமாக குறைத்து. நேரடி வரி வருமானத்தை 20 வீதத்தில் இருந்து 40 வீதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது, 625 பில்லியன் ரூபாவாக உள்ள வரி வருமானத்தை, 2020இல், 1200 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் மிகப் பெரிய தனியார் கல்வி நிறுவனங்களின்  உரிமையாளர்கள், ஆசிரியர்களை தாமாக வரி செலுத்த ஊக்குவிப்பது குறித்து அவர்களுக்கான கூட்டம்ஒன்று வரும் 24ஆம் நாள் நடத்தப்படவுள்ளது. அவ்வாறு அவர்கள் தாமாக முன்வந்து வரி செலுத்தாவிடின்,கண்காணிக்கப்பட்டு வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

இதுபோன்ற கூட்டங்கள், நிபுணர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் நடத்தப்படும்

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 39 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், 6000 பேர் தான் வரி செலுத்துகின்றனர். இதுபோல உயர் வருமானம் பெறுகின்ற துறைசார் வல்லுனர்கள் பெரும்பாலும் வரி செலுத்துவதில்லை.

புதிய பொறிமுறையின் கீழ் இந்த தவறுகள் சீர்படுத்தப்படும் ” என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. HOPE the service to public also will should be improved.

    ReplyDelete

Powered by Blogger.