Header Ads



மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா வழங்க திட்டம் - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு


இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. 

அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது. 

இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார். 

அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார். 

இலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பாடசாலை கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 

இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. 

இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பாடசாலை செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பாடசாலை செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பாடசாலை செல்லாதவர்கள் என கூறப்படுகின்றது. 

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் " மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது" என கூறுகின்றது. "அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது" என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார். 

"கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்துகின்றார். 

இந்த யோசனையை "மாணவர்களின் வரவுக்கு கொடுக்கும் லஞ்சம் "என விமர்சிக்கின்றார் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரான சிதம்பரபிள்ளை நவரெத்தினம். 

"இந்த யோசனை பாடசாலை நிர்வாகத்தையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தும். பெற்றோர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது போன்று அனுப்புவார்கள். மாணவர்கள் வரவு பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் பாடசாலைகளில் நிர்வாக முறைகேடுகளுக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவர் கூறுகிறார். 

"இடை விலகல் மற்றும் பாடசாலை செல்லாத மாணவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வதற்காக பிரதேச ரீதியாக சிறப்புப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 

(பிபிசி)

3 comments:

  1. Bussiness education system started now!

    ReplyDelete
  2. சமுகப்பெயர்வை ஏற்படுத்துவதில் கல்வியின் பங்கு கணிசமானது. இலங்கையின் கல்வி முறையில் நிலையான கொள்கையை வகுத்து தொழிபடுவதன் மூலம் உயர்ந்தபட்ச சமுகப்பெயரவை அடைவதற்கு எத்தனிக்கலாம்.
    இதில் மாணவர் இடைவிலகல் கல்வியின் முதலீட்டில் பாரிய சிதைவினை ஏற்படுத்தி வருவது மறுப்பதற்கில்லை. அதற்காக இத்திட்டம் பொருத்தமான நடைமுறையாக அமையப்போவதுமில்லை.
    இச்சந்தர்ப்பத்தில் பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள கல்வியமைச்சர் கல்வியில் முதற்தர நாடான பின்லாந்தின் அனுபவங்களை அறிந்து வருவது அவசியமாகும்.
    பரீட்சைக்காக மாணவர்களை நெட்டுரு பண்ணுகின்ற கல்விமுறையை நீக்கி ஜனநாயக வகுப்பறைகளை உருவாக்கி மாணவர்கள் விரும்புமிடமாக பாடசாலைகள் மாறாதவரை இடைவிலகலும் நிழல்போல் தொடர்ந்து கொண்டேவரும்.

    ReplyDelete
  3. 19 years old should be in University or Vacational and training education, not in the School

    ReplyDelete

Powered by Blogger.