Header Ads



முஸ்லிம் எயிட் (Muslim Aid) விடுத்துள்ள உருக்கமான அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும்

31 மியன்மார் அகதிகளுக்கு நேற்று ஏற்பட்ட நெருக்கடி தொடர்பான தெளிவுபடுத்தல்

அன்புடையீர்,

உண்மையில், இவ்வாறான ஒரு செய்தியினை விடுக்க வேண்டும் என நான் கருதியிருக்கவில்லை. ஆனாலும் பலர் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்களுக்கு ஊடாகவும் சகோ. அஷ்கர் கான் வெளியிட்ட செய்தியினை அடிப்படையாக் கொண்டு எம்மை நோக்கி கேள்விகளைத் தொடுக்கவும் விளக்கங்களைப் பெறவும் ஆரம்பித்தனர். அந்தவகையில் மேற்படி நெருக்கடி நிலைமை குறித்து நமது சமூகத்திற்கு விளக்கம் தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் காரணமாகவே ரோஹிக்கா 31 அகதிகளுக்கு நேற்று ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பாக நமது சமூகத்திற்கு விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் முஸ்லிம் எய்ட் இன் இலங்கைக்கான பணிப்பாளர் என்ற வகையில் எனது பொறுப்பாகும்.  

நேற்று 26ம் திகதி 31 ரோஹிங்கா முஸ்லிம் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் சகோ. அஷ்கர் கான் வெளியிட்டிருந்த செய்தியில் முஸ்லிம் எய்ட் அமைப்பு முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்த தொணியிலும் இலங்கை முஸ்லிம்களின் ஆபத்தான நிலைமைக்கு காரணமாகின்றது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அகதிகளுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு முஸ்லிம் எய்ட் வருகை தந்து மியன்மார் அகதிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் அஷ்கர் விமர்சித்திருந்தார்.   

ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக வருகின்ற மக்களைப் பராமரிப்பது முஸ்லிம் எய்ட் அமைப்பிற்கு இதுவொன்றும் முதல் தடவையல்ல. குறிப்பாக, முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அமைப்பானது 2008ம் ஆண்டில் இலங்கைக்கு வந்த 55 மியன்மார் அகதிகளையும், 2013 இல் இலங்கை வந்த 170 அகதிகளையும் யுஎன்எச்சிஆர் இன் தலைமையில் கீழ் பராமரிக்கும் முழுமையான பொறுப்பினை ஏற்று அப்பொறுப்பினை செவ்வனே செய்து முடித்தது. இவ்வாறாக மியன்மார் முஸ்லிம் அகதிகளைப் பராமரித்து, பாதுகாத்து, தொழில் பயிற்சிகள் வழங்கி, ஆங்கில மொழியினைக் கற்பித்து அவர்கள் வேறுநாடுகளுக்குத் தஞ்சம் பெற்றுச் செல்வதில் முஸ்லிம் எய்ட் முழுமையான பங்களிப்பினை கடந்த வருடங்களில் வழங்கியுள்ளது. இந்த அடிப்படையில்தான் இம்முறையும் 31 அகதிகளுக்கும் உதவ முஸ்லிம் எய்;ட் முன்வந்தது.

2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி இலங்கையில் கரைசேர்ந்த 31 மியன்;மார் அகதிகளையும் நீதிமன்றத்தினூடாக யுஎன்எச்சிஆர் பொறுப்பேற்று வழமைபோன்று முஸ்லிம் எய்ட் ஒரு சிறந்த கெயர் டேக்கர் என்பதை அங்கீகரித்து எம்மைக் கேட்டுக் கொண்ட கோரிக்கையினை நாம் மறுத்திருந்தால் அது அச் சமூகத்தினருக்குச் செய்யும் ஒரு துரோமாகவும் மனிதநேயப் பணிக்கு விரோதமான செயற்பாடாகவும் அமைந்திருக்கும். 

தற்போது மியன்மாரிலும் இலங்கையிலும் நிலைவும் நிலவும் சூழலில் மேற்படி 31 அகதிகளையும் பொறுப்பேற்றுப் பராமரிப்பது எந்தளவிற்கு ரிஸ்க் ஆன விடயம் என்பது தெரிந்தும் கூட மனிதநேய மற்றும் சமூக நேய கடப்பாடு காரணமாக நிர்க்கதியான இந்த மக்களுக்கு முஸ்லிம் எய்ட் உதவ முன்வந்தது. தனிப்பட்ட முறையில் முஸ்லிம் உம்மாவின் மீது எனக்கும் பொறுப்புக் காரணமாகவும் இவ் அகதிகளை நான் பொறுப்பேற்றேன் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். 

இந்த 31 அகதிகள் விடயத்தில் ஒட்டுமொத்தப் பொறுப்பு யுஎன்எச்சிஆர் இற்கு உரியது என்பது யுஎன்எச்சிஆர் அமைப்பின் திட்டவட்டமான நிலைப்பாடாகும். எந்தவொரு சந்தர்ப்பதிலும் அவர்களைப் பராமரிப்பது முஸ்லிம் எய்ட் அமைப்பு என்ற விடயம் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தத் தேவையில்லை என்பதும் இவ் அகதிகள் தொடர்பான முடிவுகள் எதனையும் யுஎன்எச்சிஆர் அமைப்பு மாத்திரமே எடுக்கும் என்பதும் எமக்கும் யுஎன்எச்சிஆர் அமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையாகும். 

கல்கிசை பராமரிப்பு நிலையத்திலிருந்த அகதிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் விவரங்களும் கல்கிசை பொலிசாருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்களின் பாதுகாப்பும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே பொலீஸ் பாதுகாப்பு ரோந்தும் அவ்வீதியில் நடைமுறையில் இருந்து வந்தது. சம்பவம் நடைபெற்றதற்கு முதல் நாளிலும் இவ்வாறாக பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடயங்களை முஸ்லிம் எய்ட் முறையாக உறுதிப்படுத்தியிருந்தது. 

எனினும், சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு வந்திருந்த பொலீஸ் அதிகாரிகளுக்கு உரிய ஆவணம் வழங்கப்பட்ட நிலையிலும் தமக்கு எதுவும் தெரியாதென அவ் அதிகாரிகள் தெரிவித்தமைக்கு நாம் பொறுப்பேற்க முடியாது. இரண்டு மணித்தியாலங்கள் ஆகியும் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் அங்கு வரவில்லையென அஷ்கர் விமர்சனம் செய்கின்றார். இதற்கு உண்மையான விளக்கம் என்னவென்றால், நாம் ராஜகிரியவிலிருந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தபோது, எம்மை அங்கு செல்ல வேண்டாம் எனவும் முழுப்பொறுப்பினையும் தாம் எடுத்துக் கொள்வதாகவும், அகதிகள் பாதுகாப்பினை பொலிசார் பார்த்துக் கொள்வதெனவும் பொலிஸ் நிலையம் சென்று நிலைமையை விளக்கும்படி;யும் யுஎன்எச்சிஆர் எமக்கு ஆலோசனை வழங்கியிருந்தது. 

மேலும், முஸ்லிம் எய்ட் நிலைமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டிற்கு வருகின்றேன். உண்மையில் என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கின்றது என்பதை  சம்பந்தப்பட்ட தரப்பாகிய எம்முடன் முதலில் தொடர்பு கொண்டு அறிந்து கொண்ட பின்பே செய்தியை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே ஊடக தர்மமாகும்.  நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அங்கு வந்திருந்த இனவாத தீவிரவாத கும்பல் சம்பந்தப்பட்ட அனைவரையும் முஸ்லிம் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.  யுஎன்எச்சிஆர் இன் ஆலோசனையையும் மீறி முஸ்லிம் எய்ட் தன்னை அங்கு அடையாளம் காட்டியிருந்தால் முஸ்லிம் எய்ட் அமைப்பும் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிச்சயம் மீடியாக்களுக்கு முன்னிலையில் தீவிரவாத கும்பல் முத்திரை குத்தியிருப்பார்கள். முஸ்லிம் எய்ட் அமைப்பு இலங்கையில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மானுட நேயப் பணிகளை ஆற்றிவருகின்ற, எதிர்காலத்திலும் ஆற்றவேண்டிய பொறுப்புள்ள நிறுவனமாகும். ஒரு சம்பவத்தை மாத்திரம் கண்டு உணர்ச்சி மேலீட்டு செயற்பட்டு ஒரு பாரிய மனித நேய அமைப்பினை ஆபத்தில் சிக்கவைப்பதுதான் பொறுப்பற்ற செயலாகும். இந்த சாதாரண உண்மையை நமது சமூகம் புரிந்து கொள்ளும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். 

தவிர, உடனடியாக நாம் கல்கிசை பொலீஸ் நிலையம் சென்று உயர் அதிகாரிகளுடன் வாதிட்டோம். சகல விடயங்களும் பொலிசாருக்கு உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டு, அவசியமான ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தும் ஏன் சம்பவம் நடந்த இடத்தில் எதுவும் தெரியான கூறினீர்கள் என நாம் வாதிட்டோம். எப்படியாவது சூழலில் நிலைமையைச் சமாளித்து, அகதிகளைப் பாதுகாக்கவே அவ்வாறு செய்தோம் எனக் கூறி உயர் பொலீஸ் அதிகாரிகள் எம்மிடம் மன்னிப்புக் கோரினர் என்பதை பகிரங்கப்படுத்த நாம் விரும்பவில்லை. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி பொலிசாருடன் முறுகலை ஏற்படுத்தி மேலும் நிலைமை மோசமாக்குவது நமக்கே தீங்காக முடியும்.  இலங்கையில் சட்ட ஒழுங்குகளை மதித்துச் செயற்பட்டு வரும் மனித நேய அமைப்பு அவ்வாறு அவசரப்பட்டு நடந்து கொள்ள முடியாது என்பதை நமது மக்களும் சமய, சமூகத் தலைவர்களும் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். 

அகதிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை முஸ்லிம் எய்ட் உறுதி செய்ய ஆவண செய்தது.  குழப்பத்தை ஏற்படுத்தி, வேண்மென்றே பிரச்சனையை உருவாக்கிக் காரியம் சாதிக்க வேண்டும் நினைக்கும் முட்டாள்தனமான, முரட்டுக் கும்பலுக்கு உண்மையை தெளிவுபடுத்த முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை.

மேலும், இவ் அகதிகளைப் பராமரிக்கும் சேவையினை முஸ்லிம் எய்;ட் எந்தவித பிரச்சாரமும் இன்றி அமைதியாகவே செய்து வந்தது. பப்பளிசிட்டி கொடுப்பதன் பாரதூரம் இவ்விடயத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் அறிவோம். உண்மையில் அஷ்கர் கான் அவர்களின் செய்திக்குப் பின்னர்தான் இதர சமூகத்தைச் சேர்ந்த பலர் போன் செய்து நீங்களா மியன்மார் அகதிகளைப் பராமரிக்கின்றீர்கள் என விசாரிக்கின்றனர்.  முஸ்லிம் எய்ட் இப்பிரச்சனையை அதற்குப் பொறுப்பான யுஎன்எச்சிஆர் இன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் இப்பிரச்சனையை அரசாங்க மட்டத்தில் தீர்க்கும்படி நாம் கேட்டுக் கொண்டுள்ளோம்.    

எல்லாவற்றிற்கும் மேலாக நமது மக்களின் பாதுகாப்பும், அகதிகளின் பாதுகாப்பும், முஸ்லிம் எய்ட் மற்றும் அதன் உறுப்பினர்களின் பாதுகாப்பினையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விட்டு, நாம் எமது மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.  இப்பிரச்சனையை சரியான முறையில் கையாள்வதற்கு தமது ஒத்துழைப்புகளை வழங்கிய சட்ட ஆலோசர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது சார்பிலும் முஸ்லிம் எய்ட் சார்பிலும் ஆழந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

பைசல் காண்
முஸ்லிம் எய்ட் இலங்கைக்கான பணிப்பாளர் 

2 comments:

  1. It is good lesson for people like Azkaflrkhan who act on emotional feelings to destroy a good working groups. Let us be not hero's on our meetings... but do good if not sit calm and let others to do their good work without harming them.

    ReplyDelete
  2. Very positive & decent explanation. We must learn and follow diplomacy in all levels.

    ReplyDelete

Powered by Blogger.