September 27, 2017

மியன்மார் அகதிகள் பற்றிய உண்மையை, உரத்துச்சொல்லும் கீர்த்தி தென்னக்கோன்

இலங்கைக்கு வருகைத் தந்த எந்தவொரு வெளிநாட்டவருக்கும் நிலையான குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்குரிய எந்தவீதமான சட்டரீதியான அதிகாரங்களும் இதுவரை இலங்கை சட்டங்களில் இல்லை என, இலங்கை மனித உரிமை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இன்று (27) தெரிவித்தார்.

மியன்மார் அகதிகள் தொடர்பில், DM செய்திச்சேவை கேள்வியெழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நடுக்கடலிலே படகின் மூலம் செல்வது எங்கே என தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்த முப்பது மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்​களைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

இவர்கள் வடக்கு கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போதுதான், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, வடக்கில் சிலகாலம் தங்க வைக்கப்பட்டார்கள். பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டின் காரணமாக, அவர்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனர்.

இலங்கைக்கு மியன்மாரிலிருந்து முதலாவதாக அகதிகள் வருகை தந்தது 2008 மார்ச் மாதம் ஆகும். இதன்போது, 55 அகதிகள் வருகை தந்திருந்தனர். இவர்கள் மீண்டும் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோன்று, மியன்மாரிலிருந்து இரண்டாவது முறையாக 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், 101 அகதிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இவர்களும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்பி அனுப்பப்பட்டனர். இதன்போது, ஐக்கிய நாடுகள்  சபை தலையிட்டு, அவர்களுக்கு  அகதிகள் என்ற அந்தஸ்தை வழங்கி அமெரிக்கா, கனடா நாடுகளிலுள்ள அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உரிமைகள் ஊடாக அவர்களது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.

1948 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கத்துக்கு, வெளிநாட்டிலிருந்து வரும் எந்தவொரு நபருக்கும் நிலையான குடியுரிமை அந்தஸ்தை வழங்குவதற்கு முடியாமல் இருக்கின்றது. அதனால்  மியன்மாரிலிருந்து வருகை தந்துள்ள அகதிகளுக்கும் இலங்கை குடியுரிமையை வழங்குவதற்கு  எந்தவிதத்திலும் அரசாங்கத்துக்கு முடியாது.

உலகத்தில் இருக்கக் கூடிய நாடுகளில், நிலையான குடியுரிமையை  ​வெளிநாட்டவருக்கு வழங்குவதற்கு, சட்டரீதியான அங்கிகாரத்தை வழங்க முடியாத நாடுகளில் ஒன்றாகத்தான் இலங்கை காணப்படுகின்றது. அதனால், இலங்கைக்கு வருகை தருகின்ற எந்தவொரு நாட்டின் அகதிக்கும் அடைக்கலம் கொடுத்து, நிலையான குடியுரிமையை வழங்க முடியாது இருக்கின்றது.

ஆதலால், குறித்த சட்டம் எவ்வாறு பாரதூரமானது என்றால், இந்தச் சட்டத்தின் மூலம் பார்க்கின்றபோது, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டுப் பெண்ணொருவரைத் திருமணம் முடித்தால், திருமணமான பெண்ணுக்கு நி​லையான குடியுரிமை கிடைக்கமாட்டாது அவருக்கு வழங்கப்படுவது நீண்டகால விசா மாத்திரமே ஆகும்.

இப்போது இலங்கையில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற மியன்மார் அகதிகளில் ஏழு ஆண்களும் ஏழு பெண்களும் அடங்கலாக 31 பேர் இருக்கின்றனர். ஏனையவர்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களாவர்.  இதில் 30க்கும் மேலாக இலங்கைக்கு வருகைதந்த ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவருக்கு பிள்ளை பிறந்துள்ளது, அவ்வாறு, இலங்கையில் பிறந்த பிள்ளைக்குக் கூட இலங்கைக் குடியுரிமை கிடைப்பதில்லை. அதற்குரிய சட்டரீதியான அங்கிகாரமும் இல்லை. அதற்கு மேலதிகமாக திருட்டு கடவுச்சீட்டின் மூலமாக நான்கு பேர் இலங்கைக்கு வருகைத் தந்திருக்கின்றனர். மொத்தமாக 35 பேர் இலங்கையில் தற்போது இருக்கின்றனர்.

இவர்களில் 2015 ஒக்டோபர் ஐந்தாம் திகதியும் 2017 ஏப்ரல் 30ஆம் திகதியும் வருகை தந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய, இந்த அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன்தான் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு வேண்டிய உணவுகள், ஆடைகள் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய சகல உதவிகளும்  இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. அவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையினால் தான் வழங்கப்படுகின்றது.

இவர்களுக்குரிய அடைக்கலத்தை வழங்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை மேலைத்தேய நாடுகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்​கொண்டு வருகிறது. அதேபோன்று இப்போது இருக்கின்ற 35 மியன்மார் அகதிகளும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போன்று அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்குரிய அகதிகளான அந்தஸ்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என, மனித உரிமை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment