Header Ads



விளையாட்டமைச்சர் தயாசிறிக்கு, கௌரவ கறுப்புப்பட்டி

விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவுக்கு தென்கொரியாவின் பிரபல குகிவோன் டைகொண்டோ தலைமையகத்தினால் 7ஆம் தரத்தைக் கொண்ட டைகொண்டோ தற்காப்புக்கலை கௌரவ கறுப்புப்பட்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய அரசின் அழைப்பின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது சர்வதேச டைகொண்டோ சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் சொவு சுங்வோனால் இவ் விசேட கறுப்புப்பட்டி வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டைகொண்டோ விளையாட்டின் உலகின் முதல்நிலை பயிற்சியகமாக விளங்குகின்ற குகிவோன் டைகொண்டோ அமைப்பினால் உலக நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கு 6ஆம் தரத்திலான கறுப்புப்பட்டி வழங்குவதே வழக்கமாக இருந்து வந்துள்ளளது.

எனினும், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வூசூ உள்ளிட்ட இன்னும் ஒரு சில தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டுள்ளதால், தொடர்ச்சியாக குறித்த அமைப்பினால் பின்பற்றப்பட்டு வந்த சம்பிரதாயத்திலிருந்து ஒரு படி மேல் சென்று 7ஆம் தரத்திலான கறுப்புப்பட்டி இவ்வாறு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை முக்கிய மைல்கல்லாக கருதப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சந்திப்பின் போது இலங்கையில் டைகொண்டோ தற்காப்புக் கலை விளையாட்டை வியாபிப்பதற்காக வேண்டிய அனைத்து தொழில்நுட்ப மற்றும் பயிற்றுவிப்புக்களை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. இதன்படி எதிர்வரும் காலங்களில் கொரிய நாட்டைச் சேர்ந்த டைகொண்டோ பயிற்சிப்பாளர்கள், டைகொண்டோ ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்த வசதிகளையும் பெற்றுக்கொடுக்கவும் இதன்போது இணக்கப்பாட்டுக்கு இரு தரப்பினரும் வந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் டைகொண்டோ தற்காப்புக் கலை தொடர்பிலான பாடப்பரப்பொன்றை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இலங்கை வீரர்களுக்கு கொரியாவில் விஷேட பயிற்சிகளை வழங்கி அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவிற்காக வீரர்களை தயார்படுத்தவும் இவ் விஷேட கலந்துரையாடலின் போது இணக்கப்பாட்டு எட்டப்பட்டது.

இவ்விசேட சந்திப்பின் போது இலங்கை டைகொண்டோ சம்மேளனத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்னவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.