Header Ads



தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை - சந்திரிகா

“இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

“தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோவில், சாகாமம் கிராமத்தில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

“நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு சம்பந்தன், நீலம்திருச்செல்வம் ஆகியோர் பாரிய பங்களிப்புகளை வழங்கியிருந்தனர்.

“17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒரு புதிய யாப்பு சீர்திருத்தத்தை வரைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனூடாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

“இன்று நாட்டில் பிரதான இரண்டு சிங்கள கட்சிகளுடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றுமையுடன் செயற்படுதவதன் காரணமாக, புதிய யாப்பு சீர்திருத்தத்தை இலகுவாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முடியும்.

“மக்கள் தங்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் கலந்துரையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, மீண்டுமொரு பயங்கரவாதம் இனி நாட்டில் ஏற்படாது” என்றார்.

No comments

Powered by Blogger.