September 19, 2017

யாழ்ப்பாண முஸ்லிம்களே, அநீதிக்கு எதிராக போராடத் தயாரா..?

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கிவைப்பதில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு ஆளாகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு அண்மை நாட்களாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம் வீட்டுத்திட்ட இயக்கம் என்னும் அமைப்பினரால் ஒரு விஷேட கவனயீர்ப்பு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வெளியீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்னும் நோக்கில் இங்கும் தரப்படுகின்றது. குறித்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு.

அன்புமிக்க யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளே!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

நாம் யாழ்ப்பாண முஸ்லிம்கள், 1990களிலே பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டோம், 2009களின் பின்னர் எமது தாய் மண்ணில் மீளவும் குடியேற எமக்கு வாய்ப்பு ஏற்பட்டது, அல்ஹம்து லில்லாஹ். 

அப்போது முதல் நாம் வீடற்றற்வர்களாக, காணிகளற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாமும் யுத்தப்பாதிப்புகளுக்கு வழங்கப்படும் அனைத்து நிவாரணங்களுக்கும் உரித்துடையவர்களே 

2009ம் ஆண்டு நாம் எமக்கும் வீட்டுத்திட்டங்கள் தாருங்கள் என்று கேட்டோம்; அப்போது நீங்கள் பழைய அகதிகள், புதிய அகதிகளுக்கே முன்னுரிமை என்று அதிகாரிகள் கூறினார்கள், புதிய அகதிகளுக்கு வழிவிட்டு நாம் பொறுமையோடு இருந்தோம்.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு 300 வீடுகளை இந்திய அரசாங்கம் ஒதுக்கியது; நாமும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 370 முழுமைப்படுத்தப்பட்ட  விண்ணப்பங்களை இந்திய வீட்டுத்திட்டங்களுக்காக வழங்கினோம் ஆனால் கடுமையான விதிகளை எம் மீது சுமத்தி  எமது மக்களுக்கு 50ற்கும் குறைவான வீடுகளையே யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் வழங்கினார்கள்.

அதேபோன்று மீள்குடியேற்ற அமைச்சின் 2015ம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட ஒதுக்கீடுகளிலும் மிகவும் சொற்பமான வீட்டுத்திட்டங்களே எமது மக்களுக்கு வழங்கப்பட்டன.

இப்போது மீள்குடியேற்ற அமைச்சின் மீள்குடியேற்ற செயலணி யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு 200 வீடுகளை வழங்க முன்வந்தது, இதற்காக அமைச்சரவை அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் 200 வீடுகளையும் முஸ்லிம் மக்களுக்கு வழங்குவதில் பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றமை தற்போது எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

200 வீட்டுத்திட்டங்களுக்காக முஸ்லிம் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு எதுவிதமான விண்ணப்பங்களும் முஸ்லிம் மக்களிடமிருந்து கோரப்பட்டவில்லை. 2016ம் ஆண்டின் நடமாடும் சேவையினூடாக விண்ணப்பித்தவர்களின் பெயர் விபரங்களில் இருந்து 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர், அந்த விபரங்களை அடிப்படையாக வைத்து 46 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசிக்கின்றார்கள் என்றும் 121 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசிக்கவில்லை என்றும் விபரங்கள் திரட்டப்பட்டன. அதனடிப்படையிலேயே வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 40ற்கும் குறைவான பயனாளிகளே தெரிவு செய்யப்படுவதற்கான அபாயமான சூழ்நிலை இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இதனை நாம் அதிகாரிகளின் பக்கச்சார்பான செயற்பாடாகவே நோக்குகின்றோம்.

அமைச்சரவையினால் 200 வீடுகள் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு வழங்குவதற்காக தரப்பட்டிருக்கின்றதென்றால், அந்த 200 வீடுகளையும் முழுமையாக யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு வழங்கக்கூடிய இதய சுத்தியான நடவடிக்கையை முன்னெடுப்பதற்குப் பதிலாக முடியுமானவரை வீடுகளை வழங்காமாலிருப்பதற்கே அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள்.

இத்தகைய அநீதியை நாம் எதிர்த்துப் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்; வீட்டுத்திட்டம் எமது அடிப்படை உரிமையாகும், அதனை மறுக்கும் எந்தவொரு செயற்பாடும் அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனை நாம் கருத்திலெடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200 வீட்டுத்திட்டங்களையும் யாழ் முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கையெடுத்தல் அவசியமாகும், இதற்காக விஷேட கலந்துரையாடலொன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24 செப்டம்பர் 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4;00 மணிக்கு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆர்வமுள்ள அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து தம்முடிய மேலான கருத்துக்களையும் பங்களிப்புகளையும் நல்குமாறு அன்போடு அழைத்து நிற்கின்றோம். என்றும் குறித்த பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment